Last Updated : 06 Jun, 2018 10:24 AM

 

Published : 06 Jun 2018 10:24 AM
Last Updated : 06 Jun 2018 10:24 AM

ஜோதிடம் அறிவோம் 46 இதுதான்... இப்படித்தான்! என்ன செய்வார் சனிபகவான்?

நம்மில் பலருக்கும் சனிப் பெயர்ச்சியின் போது நம் ராசிக்கு எப்படி இருக்கும்? ஏழரைச் சனி ஆரம்பித்து விட்டதே... என்ன பாடுபடுத்தப் போகிறாரோ! என்றெல்லாம் பயமும் பதட்டமும் தோன்றுவது இயல்பே!

சரி என்ன செய்யும் ஏழரைச் சனி?

உண்மையில் பயமோ, பதட்டமோ அடையத் தேவையில்லை,

நீங்கள் ஏதாவது தவறு செய்யும் போது உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் உங்கள் தவறைத் திருத்தி ஆலோசனை சொல்வார்கள் அல்லவா. அதைத்தான் சனிபகவானும் செய்வார்.

அதாவது உங்களிடம் உள்ள குறைகளை உங்களுக்கு உணர்த்தி, அதை மீண்டும் தொடராதவகையில், உங்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியரே சனிபகவான்.

பணத்தை சிக்கனமாக பயன்படுத்தத் தெரியாதவரா நீங்கள்? நேரத்தை மதிக்காமல் அலட்சியம் காட்டுபவரா நீங்கள்? (10 மணிக்கு வரச் சொன்னால் 11 மணிக்குச் செல்பவரா), நல்லவர் யார்? கெட்டவர் யார்? என பகுத்துப் பார்க்கத் தெரியாதவரா?

அதாவது உங்கள் முகத்திற்கு முன் வஞ்சப்புகழ்ச்சி செய்பவர்களை நல்லவர்கள் என நம்புவதும், உங்கள் முகத்திற்கு நேராக உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை கெட்டவர்கள் என்றும் நம்புபவரா?

உறவுகளைப் பெரிதாக மதிக்காதவரா?

பணம் எந்த வகையில் வந்தாலும் பரவாயில்லை, என் நோக்கம் பணம் மட்டுமே! என்று நினைப்பவரா?

அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்கானாதுதான்!

நாம் செய்கின்ற ஒவ்வொரு தவறையும் சனிபகவான் தன் ஆதிக்க காலத்தில் உணர வைத்து நாம் மீண்டும் அந்த தவறை செய்யாமல் இருக்கச் செய்பவர்.

அவர் ஏன் இதை செய்யவேண்டும், மற்ற கிரகங்கள் இல்லையா?

சனி என்பவர் நீதிமான், எதை தர வேண்டுமோ அதை பாரபட்சம் இல்லாமல் தருவார். அது நல்லதோ அல்லது கெட்டதோ,

மற்ற கிரகங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் தன்னை சமரசம் செய்து கொள்ளும். ஆனால் சனி பகவான் தன்னை எதற்கும் சமரசம் செய்யமாட்டார்.

அவர் தருகின்ற கஷ்டங்கள் எல்லாம் உங்களை வதைப்பதற்கு அல்ல... திருத்துவதற்குத்தான்!

எப்படி?

உதாரணமாக, பணத்தை தண்ணீராக செலவழிப்பவராக இருந்தால் பணத்தின் அருமையை தன் ஆதிக்க காலத்தில் உணரவைப்பார்.

என்னிடம் வந்த நண்பர் “தான் இளமையில் நல்ல வசதியோடு இருந்தபோது பணத்தை பணமாக நினைக்காமல் வீண் செலவு செய்ததையும், பின் ஏழரை சனி காலத்தில் ஒருவேளை உணவுக்காக தான்பட்ட கஷ்டத்தையும் சொன்னபோது எனக்கே கண்ணீர் வந்துவிட்டது.”

தொடர்ந்து அந்த நண்பர் “நான் இப்பல்லாம் பணத்தைப் பணமாக பார்ப்பதில்லை “மகாலட்சுமியாக” பார்க்கிறேன். வீண் செலவு செய்வதில்லை. ஒரு பொருளை வாங்கும் முன் அது நமக்கு அவசியமா? அல்லது அத்யாவசியமா? அல்லது ஆடம்பரமா? என எனக்குள்ளே கேட்டு ஆராய்ந்து முடிவு செய்கிறேன்” என்று சொன்னார்.

இதன் வீரியத்தை உணர்ந்தாலே ஏழரைச் சனியின் குணாதிசயம் என்ன என்பதை உணரமுடியும்.

நேரத்தை அலட்சியம் செய்பவர்கள் பின்னாளில் நல்ல வாய்ப்புகளை எல்லாம் கோட்டை விட்டுவிட்டோமே என ஏங்கித் தவிப்பதையும் பார்த்திருக்கிறேன்.

எனவே நேரம் தவறாமை என்பதை லட்சியமாக வைத்துக்கொள்ளுங்கள், அது உங்களை உச்சத்தில் வைத்து அழகு பார்க்கும்.

சரி, ஏழரைச் சனி என்ன பலன் தருவார் எனப் பார்ப்போம்.

உங்கள் ராசிக்கு 12 ம் ராசியில் சனிபகவான் வர அது “விரயச் சனி” ...

உங்கள் ராசிக்குள் வர அது “ஜென்மச் சனி”...

உங்கள் ராசிக்கு அடுத்த ராசிக்கு செல்ல அது “பாதச் சனி”

இப்படி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் பயணம் செய்வதே ஏழரை சனி காலம்.

விரயசனி:- உங்கள் கையிருப்பை காலி செய்து விரயங்களை அதிகப்படுத்தி உங்களை திக்குமுக்காடச் செய்வதே விரயச் சனி.

இதை நாம் எப்படி சாதகமாக மாற்றுவது (ஜோதிடத்தின் சிறப்பே குறைகளையும் நிறைகளாக மாற்றுவதுதான்!). விரயச் சனி காலத்தில் நாம் நிலம் வாங்குவது, வீடு கட்டுவது, வீட்டைப் புனரமைப்பது, நீங்கள் மணமாகாதவராக இருந்தால் திருமணம் செய்வது, அல்லது உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தல்,தொழிலில் புதிய கிளை துவக்குதல்,

வியாபார ரீதியாக அல்லது தொழில் ரீதியாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளுதல், ஆன்மிகச் சுற்றுலா செல்லுதல்.

ஆலயப் புனரமைப்புக்கு உதவுதல், பொதுக் காரியங்களுக்கு செலவிடுதல், இலவசத் திருமணங்கள் செய்வித்தல்.

இவை உங்கள் விரயங்களை வீண் விரயமாகாமல் மிக முக்கியமாக மருத்துவச் செலவு இல்லாமல் செய்யும்.

ஜென்மச்சனிகாலம்: இந்த இரண்டரை ஆண்டுகளும் எதிலும் தலையிடாமல் இருந்தாலே போதும். உங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட்டால் “ஐயோ பாவம் கையோடு வரும்” என்ற பழமொழி தெரியும் அல்லவா. அதுதான் நேரும்.

யாருக்கும் ஜாமின் போடக்கூடாது, மீறிப் போட்டால் நீங்கள் தான் சுமக்க வேண்டும்.

அதாவது உங்கள் நண்பர் நல்லவராக இருந்தாலும் நீங்கள் ஜாமின் தந்ததாலேயே அவர் கெட்டுப்போவார். எனவே கவனம் தேவை.

அமைதி, அமைதி, அமைதியோ அமைதி என்று இருங்கள். மன நிம்மதி தரும்.

பாதசனி:- இந்தக் காலம் தான் ஊரைவிட்டு ஓடுதல், நாட்டைவிட்டு ஓடுதல், பிழைக்க வேறொரு ஊருக்குச் செல்லுதல், தலைமறைவு வாழ்க்கை என சோதனையான காலம்.

இப்போது நாமாகவே சொந்த வீடாக இருந்தாலும் வாடகை வீட்டிற்க்கு மாற வேண்டும். அல்லது வேறு ஊருக்கு மாறிச் செல்ல வேண்டும்.

இப்படிக் கஷ்டங்களை நமக்கு நாமே தொடர்பு படுத்தினால் சனியின் ஆதிக்கம் குறையும்.

இதற்கிடையில் உங்களுக்கு பணத்தின் அருமை, நேரத்தின் அருமை, உண்மையான நண்பர்கள் யார், துரோகிகள் யார், உறவினர் தராதரம், என அனைத்துப்பாடங்களும் சனி நடத்திக் காட்டுவார்,

எனவே அவர் நடத்திய பாடங்களை மனதில் நிறுத்தி இனி வரும் காலங்களை சரியாக திட்டமிட்டு வாழ்வை வளமாக்கிகொள்ளுங்கள்.

அஷ்டம சனி:- ஏழரை ஆண்டு பாடத்தை நடத்தியும் நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளவில்லையா, அதற்கான short time course தான் அஷ்டம சனி.

புரியவில்லையா.

ஏழரை ஆண்டுகளின் சோதனைகளையும் மொத்தமாக இரண்டரை ஆண்டுகளில் தந்து உங்களைச் சோதித்து விடுவார். எனவே நிதானமாக நடந்தால் நன்மை நடக்கும். ஆர்பாட்டமாக இருந்தால் ஓரமாக உட்கார வைத்துவிடுவார். எனவே கவனமாக இருங்கள்,

அர்த்தாஷ்டமசனி:- உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் காலம்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டிய நேரம். உங்கள் சொத்துக்களில் திடீர் என வரும் பிரச்சினைகள், வாகனச் செலவு என அஷ்டமத்தில் சனி என்ன செய்வாரோ அதில் பாதி சிரமத்தைத் தருவார். இந்த காலத்தில் நிலம், வீடு வாங்குதல் கூடாது. மருத்துவர் ஆலோசனையை அலட்சியப்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும்.

கண்டசனி:- உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி வரும் காலம் கண்ட சனி காலம் ஆகும்.

ஏதாவது கண்டத்தைத் தருவாரோ என பயம் வேண்டாம். இந்த காலம்தான் கணவன், மனைவி ஒற்றுமைக்கு சோதனையான காலம்.

இதுவரை உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து கூறாத உங்கள் துணை (ஆண், பெண் யாராயினும்) இப்போது எதிர் கருத்தை வெளிப்படுத்துவார். இப்போதுதான் நிதானம் தேவை, கண்ட சனியை புரிந்து கொண்டால் இதை எளிதாக கடக்கலாம்,

ஆனாலும் உங்கள் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், தலைவலிதானே என அலட்சியமாக இருக்காமல் தக்க மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

மொத்தத்தில் ஏழரைச் சனி காலத்தில் திருமணம், வீடு கட்டுதல், வாங்குதல் நன்மை தரும்.

மீண்டும் சொல்கிறேன் “திருமணம் செய்யலாம்”

அஷ்டம சனி காலத்தில் திருமணம் செய்யக்கூடாது, புதிய முயற்சிகளில் இறங்கக்கூடாது, வீடு மனை வாங்க கூடாது.

அர்த்தாஷ்டம சனி காலத்தில் வாகனம் வாங்கக் கூடாது. பயணம் மேற்கொள்ளக்கூடாது, தாயாரின் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்,

கண்ட சனி காலத்தில் கணவன் மனைவி விட்டுக்கொடுத்தல் என்ற பண்பு குடும்பத்தில் அமைதி தரும்.

ஏழரைச் சனி காலம் முதல் சுற்றாக இருந்தால் மட்டுமே சோதனை தரும்,

இரண்டாம் சுற்றாக இருந்தால் அது “பொங்கு சனி காலம்” துன்பம் ஏதும் இருக்காது. மாறாக, பெரும் நன்மைகள் ஏற்படும். அனைத்து வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரும். ஆனால் பெற்றோருக்கு காரியம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ஜோதிடரைத் தொடர்பு கொள்ள:98841 60779

அடுத்த அத்தியாயம் வரும் 11.6.18 திங்கட்கிழமை அன்று வெளிவரும்.

- தெளிவோம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x