Last Updated : 13 Feb, 2018 04:26 PM

 

Published : 13 Feb 2018 04:26 PM
Last Updated : 13 Feb 2018 04:26 PM

வெற்றிவேல் முருகனுக்கு... 21: திருத்தணிகை வாழும் முருகா!

‘திருத்தணி மலைக்குச் செல்ல வேண்டும்’ என்று நினைத்தாலோ, திருத்தணி மலை இருக்கும் திசை நோக்கி வணங்கினாலோ, தணிகையை நோக்கி பத்தடி தூரம் நடந்தாலோ... சகல நோய்களும் நிவர்த்தியாகும் என்கிறது தணிகை புராணம்.

‘திருத்தணிகையில் ஐந்து நாட்கள் தங்கியிருந்து, என்னை வழிபடுபவர்கள் வீடு பேறு அடைவர்’ என்று முருகக் கடவுள் திருத்தணியின் மகிமையை வள்ளியிடம் விவரித்ததாக கந்த புராணத்தில் குறிப்பிடுகிறார் கச்சியப்ப சிவாச்சார்யர். .

குமரனின் ஆறுபடை வீடுகளுள் ஐந்தாம் படைவீடு திருத்தணிகை என்று சொல்லப்படும் திருத்தணி. சென்னையில் இருந்து சுமார் 85 கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. தெற்கே காஞ்சிபுரம், மேற்கே சோளிங்கபுரம், கிழக்கே திருவாலங்காடு, வடக்கே திருக்காளஹஸ்தி , திருப்பதி என திருத்தலங்கள் சூழ்ந்திருக்க, இவற்றுக்கெல்லாம் நடுநாயகமாக திருத்தணியில் கோயில் கொண்டிருக்கிறார் முருகப் பெருமான்! .

மலையின் மீது குடிகொண்டிருக்கிறார் மயில்வாகனன். மொத்தம் 365 படிகள். அதாவது வருடத்தின் 365 நாட்களைக் குறிக்கும் விதமாக அமைந்துள்ளது அமைந்துள்ளது திருத்தணி. மலையின் மீது கார் மற்றும் பேருந்து செல்வதற்கு ஏற்ற சாலை வசதி உண்டு. மலைக்கு மேல் உள்ள ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், தேவ சிற்பியான தேவதச்சனால் கட்டப்பட்டது என்கின்றன புராணங்கள்.

மேலும், 14ம் நூற்றாண்டில் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருத்தணியைச் சேர்ப்பது என்ற கருத்து வரத் தொடங்கியதாம். பிறகு 15-ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அறுபடை வீடுகளில் திருத்தணியும் சேர்க்கப்பட்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்!

மலைகளில் சிறந்தது திருத்தணிகை என்று போற்றிப் புகழ்கிறது கந்த புராணம் தேவர்களது துயர் தீர்க்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த போரும், வள்ளியைக் கரம் பிடிக்க வேடர்களுடன் செய்த போரும் முடிந்து முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்தாராம் இங்கே! கோபம் தணிந்ததால், தணிகைவேலன்; இது தணிகை மலை!

அதுமட்டுமா? தேவர்களது அச்சம் தணிந்த தலம். பக்தர்களின் துன்பம், கவலை, பிணி, பயம் மற்றும் வறுமை ஆகியவற்றை தணிக்கும் தலம் என்பதால் தணிகை எனும் பெயர் பெற்றதாகவும் சொல்வார்கள்!

மும்மூர்த்திகளான சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகியோர் திருத்தணி முருகப் பெருமானை தவமிருந்து வழிபட்டதாகச் சொல்கிறது புராணம். மேலும் நந்திதேவர், வாசுகிப் பாம்பு மற்றும் அகத்திய முனிவர் ஆகியோரும் வழிபட்டுள்ளனர்.

சிவபெருமான், திருத்தணிகையில் முருகப் பெருமானை தியானித்து பிரணவ மந்திரத்தின் பொருள் உபதேசிக்கப் பெற்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மகனின் உபதேசத்தால் மகிழ்ந்த சிவனார், வீரம் கலந்து அட்டகாசமாகச் சிரித்ததால், வீரட்டானேஸ்வரர் எனும் பெயர் பெற்றார். இவர் குடிகொண்டிருக்கும் ஸ்ரீவீரட்டானேசுவர் திருக்கோயில் திருத்தணிக்கு கிழக்கே, நந்தியாற்றின் வட கரையில் அமைந்து உள்ளது.

நந்தியாற்றின் தென்கரையில் ஆறுமுக சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு உள்ள முருகப் பெருமானே சிவபெருமானுக்கு உபதேசித்ததாகச் சொல்கிறார்கள். இங்கிருந்த ஆறுமுக சுவாமி, தற்போது திருத்தணி மலை மீது உற்ஸவ மூர்த்தியாக தரிசனம் தருகிறார்.

அதேபோல், இங்கு உள்ள சுப்ரமணியரை, ஆண்டுதோறும் பங்குனி மாதம் குறிப்பிட்ட 3 நாட்களில் சூரியனார் வழிபடுவது கண் கொள்ளாக் காட்சி! அதாவது, சூரியனின் கிரணங்கள் முதல் நாள் சுவாமியின் திருப்பாதங்களிலும், 2-ம் நாள் திருமார்பிலும், 3ம் நாள் கந்தனின் சிரசிலும் விழுவது சிலிர்க்க வைக்கும் ஒன்று!

ஸ்ரீமகாவிஷ்ணு, திருத்தணி முருகப் பெருமானை வழிபட்டு சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனிடம் இழந்த தனது சக்ராயுதத்தை மீண்டும் பெற்றாராம். அவர் உருவாக்கிய விஷ்ணு தீர்த்தம் இன்றைக்கும் உள்ளது. பங்குனி உத்திரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் இதில் நீராடி தணிகைநாதனை வழிபட்டுப் பிரார்த்தனை செய்தால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்!

நந்திதேவர் இங்குள்ள முருகப் பெருமானை வழிபட்டு, பதி- பசு- பாசம் ஆகிய முப்பொருள் இயல்பைக் கூறும் சைவ சித்தாந்த உபதேசத்தைப் பெற்றார் என்கிறது தணிகைப் புராணம்! இதற்காக முருகப் பெருமான் வரவழைத்த, ‘சிவ தத்துவ அமிர்தம்’ எனும் நதி ‘நந்தி ஆறு’ என்றும், நந்திதேவர் தவம் செய்த குகை ‘நந்தி குகை’ என்றும் இன்றைக்கும் வழங்கப்படுகின்றன.

பிரணவத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் அல்லவா வேலப்ப சுவாமி! இதனால் சிருஷ்டித் தொழில் பாதிப்படைவதை விரும்பாத ஈசன், சிறையிலிருந்த பிரம்மாவை மீட்டெடுத்தார். பிறகு, கர்வம் நீங்கிய பிரம்மா, சிவனாரின் அறிவுரைப்படி, தணிகை மலைக்கு வந்தார். கடும் தவம் புரிந்தார். தணிகை நாயகனை வழிபட்டார். அட்ச சூத்திரம், கமண்டலம் மற்றும் சிருஷ்டி வல்லமையை மீண்டும் பெற்றார். அவர் உருவாக்கிய தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் அவர் வழிபட்ட சிவலிங்கமான பிரம்மேஸ்வரர் லிங்கத்தை மலைக்குச் செல்லும் வழியில் தரிசிக்கலாம்.

இவர்கள் மட்டுமின்றி பிரம்மாவின் மனைவியும் கல்விக் கடவுளுமான சரஸ்வதிதேவியும் தணிகைநாதனை வழிபட்டு அருள்பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன. அதை உணர்த்தும் விதமாக, இந்தத் தலத்தில் சரஸ்வதி தீர்த்தம் உள்ளது. அத்துடன் சரஸ்வதீஸ்வரர் லிங்கம் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது!

ஸ்ரீராமபிரான் இங்கு வந்து வணங்கி ஞானோபதேசம் பெற்றதாகவும் ஸ்தல புராணம் தெரிவிக்கிறது. சீதா பிராட்டி சமேத ஸ்ரீராமர் சந்நிதானம், ஸ்ரீராமர் பூஜித்த சிவலிங்கம் மற்றும் அவர் உருவாக்கிய தீர்த்தமும் இங்கே இருக்கின்றன. ஆக, ஏகப்பட்ட தீர்த்தப் பெருமைகள் கொண்ட மூர்த்த கீர்த்திகள் கொண்ட அற்புதமான தலமாகத் திகழ்கிறது திருத்தணி!

இந்திரன் இந்தத் தலத்துக்கு வந்து சுனை ஒன்று (இந்திர நீலச்சுனை) ஏற்படுத்தினான். அதன் கரையில் நீலோற்பலக் கொடியை வளர்த்தான். அந்த மலர்களால் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையும் வேலவனை பூஜித்து சங்க- பதும நிதிகள், கற்பகத்தரு, சிந்தாமணி மற்றும் காமதேனு ஆகியவற்றையெல்லாம் பெற்றான்.

இதனால் தணிகை முருகன், ‘இந்திர நீலச் சிலம்பினன்’ எனும் பெயர் பெற்றார். இன்றைக்கும் முருகப்பெருமானின் அபிஷேகத்திற்கு, இந்திர நீலச்சுனை தீர்த்தமே பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடுவதற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. .

பாற்கடலைக் கடைந்தபோது மந்திர மலையினால் தன் உடலில் ஏற்பட்ட காயங்கள் குணமாக வாசுகி நாகம் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு வரம் பெற்று, நலம் பெற்றதாக திருப்புகழ் விவரிக்கிறது.

மலையின் மேற்குப் பக்கம் உள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி, தணிகையப்பனை மனதார வழி பட்டால் நோய்கள் அனைத்தும் நீங்கும்; தோஷங்கள் எல்லாமே விலகும் என்பது ஐதீகம்!

- வேல் வேல்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x