Last Updated : 23 Feb, 2019 11:43 AM

 

Published : 23 Feb 2019 11:43 AM
Last Updated : 23 Feb 2019 11:43 AM

கோவையில் 40 சதவீத காடுகளை ஆக்கிரமித்திருக்கும் களைச்செடிகளை எரிபொருளாக மாற்ற வனத்துறை திட்டம்

கோவையில் 70,000 ஹெக்டேரில் உள்ள வனப்பரப்பில் 28,000 ஹெக்டேரை உண்ணிச் செடிகள் (Lantana Camara) ஆக்கிரமித்துள்ளன.

இது, மொத்த பரப்பளவில் 40 சதவீதமாகும். சராசரியாக ஒரு ஹெக்டேரில் 2 டன் உண்ணிச்செடிகள் உள்ளன. இந்தச் செடிகள் மற்ற தாவரங்களை வளரவிடாமல் தடுத்து வருகின்றன. இவற்றை அழிக்க ஒரு ஹெக்டேருக்கு ரூ.15ஆயிரம் வரை அரசு செலவிடுகிறது.ஆண்டுக்கு 3 முறைஇவ்வாறுசெடிகள் அப்புறப்படுத்தப்படுகின்றன. ஆனாலும், அவைமுழுமையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை. எனவே, இந்தச் செடிகளை மலைவாழ் மக்கள் மூலம் அப்புறப்படுத்தி, அதிலிருந்து எரிகட்டிகள் தயாரித்து தொழிற்சாலைகளுக்கு விற்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் தீபக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: வனப்பகுதிகளில் உள்ள உண்ணிச்செடிகளால் வேறு எந்தப் பயனும் இல்லை. எனவே,மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி, ஆராய்ச்சி மையத்தின் வேளாண்காடுகள் துறையின் தலைவர் பார்த்திபன் உதவியோடு உண்ணிச்செடிகளை காயவைத்து பொடிப்பொடியாக்கி, அதை இயந்திரம் மூலம் எரிகட்டிகளாக மாற்றினோம். பின்னர், அந்த எரிகட்டியை சோதனை முறையில் எரியூட்டி சோதித்தோம். அப்போது, எரிகட்டியின் எரி திறன் கிலோவுக்கு 3,500 கிலோ கலோரி இருப்பது கண்டறியப்பட்டது. 2 டன் உண்ணிச்செடியிலிருந்து ஒரு டன் எரிகட்டி தயாரிக்க முடியும். ஒரு டன் செடிகளை அப்புறப்படுத்த போக்குவரத்து செலவு,உற்பத்தி செலவு உள்ளிட்ட வற்றுக்கு மொத்தம் ரூ.5,500 செலவாகும். அதில், ஒரு டன்னுக்கு ரூ.2 ஆயிரம்வரை லாபம் கிடைக்கும். இவ்வாறுசெடிகளை அகற்றி எரிகட்டி தயாரிக்க மலைவாழ் மக்களுக்கு வாய்ப்பு தரும்போது, அவர்களுக்கு வருவாய் கிடைக்கும்.

ஆலைகளுக்கு விற்பனைபெரிய பெரிய பாய்லர்களைக் கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள், டீ எஸ்டேட்களில் விறகு மற்றும் மூன்றாம் தர நிலக்கரியைப் பயன்படுத்தி வருகின்றனர். அங்கு எரிபொருளுக்கான தேவை அதிகம் உள்ளது. எனவே, அவர்கள் உண்ணிச்செடியை கொண்டு தயாராகும் எரிகட்டியை பெற்றுக் கொள்வார்கள். இதன்மூலம் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். எனவே, தமிழக அரசிடம் இந்த திட்டம் குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம். அதை அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறேன்.

எரிகட்டி தயாரிக்கும் ஆலையைஉருவாக்க ரூ.67 லட்சம் செலவாகும். திட்டப்படி முதல் 3 ஆண்டுகளுக்கு அனைத்து செலவுகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1.40 கோடி செலவிடப்படும். மலைவாழ் கிராமங்களுக்கு அருகே எரிகட்டி தயாரிப்பு ஆலை அமைக்கப்படும். இதனால், கோவையில் உள்ள 15-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராம மக்கள் பயன்பெறுவார்கள். உண்ணிச்செடிகளை தொடர்ந்து அப்புறப்படுத்தும்போது, காடுகளில் மற்ற செடிகள் வளரவும் இடம் கிடைக்கும்.

மாசு குறைவுஉண்ணிச்செடியில் இருந்து தயாரிக்கப்படும் எரிகட்டியை எரிப்பதால் 2 சவீதம் மட்டுமே சாம்பல் வெளிவருகிறது. அதே நிலக்கரியை எரிக்கும்போது 30 முதல் 40 சதவீதம்வரை சாம்பல் வெளியாகிறது. எனவே, இதன்மூலம் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதும் தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x