Last Updated : 14 Jul, 2019 07:14 PM

 

Published : 14 Jul 2019 07:14 PM
Last Updated : 14 Jul 2019 07:14 PM

தேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்

தேவைகளைச் சுருக்கி வாழும் பழங்குடி மக்களிடம் பெரும்பான்மைச் சமூகம் கற்றுக்கொள்ள வேண்டிய பண்புகள் ஏராளமாக இருக்கின்றன என்று ஆணித்தரமாக கூறும் இளைஞர் ஒருவர் அதை மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்கிறார். 

பழங்குடிகள் என்றால் பலரின் பொதுப் புத்தியிலும் படிப்பறிவில்லாதவர்கள், வனவாசிகள், நாகரிக வாழ்க்கையை அறியாதவர்கள் என்ற சித்திரம் உள்ளது.

ஆனால், உண்மையில் பழங்குடிகளுக்கு தன்னிறைவான வாழ்க்கை வாழத் தெரியும். இயற்கையை எதிர்க்காது அதன் வளங்களை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தி வாழத் தெரியும். எல்லாவற்றையும் அடைய ஆசைப்படாமல் தங்கள் தேவைகளைச் சுருக்கிக் கொண்டு வாழும் பழங்குடிகளிடம் நாம் கற்றுக்கொள்ள ஏராளமான பண்புகள் இருக்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு கற்றல் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வேலையைத்தான் விரும்பி ஏற்றுச் செய்து கொண்டிருக்கிறார் 30 வயது இளைஞர் ஒருவர்.

மதுரையைச் சேர்ந்த யோகேஷ் கார்த்திக் (30) பொறியியல் பட்டதாரி. இவர் சென்னை, பெங்களூருவில் தனியார் நிறுவனங்களில் பணி புரிந்தவர்.

ஆனால், அத்தியாவசியத்தையும் கடந்து பெருகிவரும் அறிவியல் தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கையைச் சிக்கலாக்குகின்றன. செயற்கைத்தனமாக்குகின்றன. வாழ்க்கை உயிரோட்டம் நிறைந்ததாக எளிமையானதாக இருக்க வேண்டும் என ஒரு கட்டத்தில் விரும்பியிருக்கிறார்.

அந்த விருப்பத்துக்கு சரியான பாதையைக் காட்டியிருக்கிறது பழங்குடிகளுடன் ஏற்பட்ட நட்பு. தான் பணி புரிந்த நிறுவனத்தில் சூரிய மின் சக்தி திட்டத்துக்காக பழங்குடி வாழ் பகுதியில் பணியாற்றியபோது அவர்களின் எளிமையான வாழ்வால் யோகேஷ்  ஈர்க்கப்பட்டார். அன்று அவர் கற்றுக் கொண்ட பாடம் தேவைகளைச் சுருக்கி வாழ்வதுதான் கலாச்சாரம் நிறைந்த வாழ்வு என்ற தத்துவம். அந்தப் பாடம் பிறருக்கும் கடத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் சமூக நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் சுற்றுச்சூழல் பேணுவது பற்றிய அவசியம், குழந்தைகளுக்கு மாற்றுக் கல்வி போதிப்பதின் முக்கியம் தொடர்பாகப் பணியாற்றி வருகிறார்.

பழங்குடிகளும் செழுமையான வாழ்வியல் முறையும்

பழங்குடிகளின் செழுமையான வாழ்வியல் முறை பற்றியும் அதனைப் பெரும்பான்மை மக்களிடம் எடுத்துச் செல்வதில் தனது முயற்சிகள் பற்றியும் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் விரிவாகப் பேசினார் யோகேஷ் கார்த்திக்.

''ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் எளிமையான வாழ்வியல் முறையே பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு என்பதை உணர்ந்ததால் முதன்முதலில் 2015-ல் கல்லூரி மாணவர்கள் சிலரை வால்பாறையில் காடர் இன மக்களுடன் 2 நாட்கள் தங்க அழைத்துச் சென்றேன். காடர் இன மக்கள் வருவாய் கிராமத்தில்தான் இருந்தனர் என்பதால் வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லாமல் இருந்தது.

காடர் இன மக்களைப் பற்றி நிறைய பேசிக் கொண்டே இருக்கலாம். மிகவும் அன்பானவர்கள். இயற்கை மீது அவ்வளவு ஆழமான புரிதல் கொண்டவர்கள். அங்கிருந்த முதியவர் ஒருவர் கூறும்போது "எங்களால் யானை உள்ளிட்ட விலங்குகளுடன் பேச முடியும். எங்கள் வசிப்பிடம் பக்கம் யானை வந்தால் நாங்கள் எங்கள் அங்க அசைவுகள் மூலமே அவற்றிற்கு வேண்டுகோள் விடுப்போம். அவையும் எங்களைப் புரிந்துகொண்டு வசிப்பிடங்களுக்குள் வராமல் சென்றுவிடும். சில நேரங்களில் பயிர்களை சேதப்படுத்திவிடும்.

ஆனால், அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். வனம் விலங்குகளின் வீடு. அங்கு நாங்கள் வசிக்கிறோம். யானைகளை வேட்டு வைத்து விரட்டுவது, ட்ரம் சத்தி எழுப்பி விரட்டுவது போன்ற காரியங்களில் எல்லாம் ஈடுபட மாட்டோம். விலங்குகள் நம்மை ஏற்றுக்கொள்வதுபோல் அவற்றை அவை வழியிலேயே நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால்தான் ஊருக்குள் விளைநிலங்களைச் சேதப்படுத்தும் யானைக்கூட்டம் எங்கள் பகுதியில் நாங்கள் சிறிய அளவில் பயிரிட்டிருக்கும் விவசாயத்தை பெரும்பாலும் அழிப்பதில்லை" என்றார்.

அந்த முதியவரின் பேச்சு மனித - விலங்குகள் மோதல் பின்னணி குறித்து தெளிவான புரிதலை ஏற்படுத்தியது. அதேபோல் குட்டியுள்ள மிருகங்களை வேட்டையாடுவதில்லை, பச்சை மரத்தை வெட்டுவதில்லை என தங்களுக்குள்ளேயே சில கட்டுப்பாடுகளையும் வைத்துள்ளனர். தேன் எடுத்தல் இவர்களின் பிரதான தொழில். தேன் எடுக்கச் செல்லும்போது ஒரு நபர் ஒரு மரத்தில் அடையாளக் குறியீடு போட்டுவிட்டால் அதை வேறு யாரும் தீண்டுவதில்லை. சிறு வருமானமே தரும் தொழிலில் கூட இவ்வளவு நெறிமுறைகளைப் பின்பற்றும் பழங்குடிகள் வியக்க வைத்தனர்.

அதேபோல் கர்நாடகாவின் கூர்க் மாவட்டத்தில் மலைகுடியான் என்ற பழங்குடிகள் இருக்கின்றனர். இவர்களின் வசிப்பிடம் உயரமான மலைப் பகுதிகளில் இருக்கிறது. பனை மரத்திலிருந்து கள் எடுப்பதுதான் இவர்களின் முக்கியத் தொழில். எடுக்கும் கள்ளில் முதல் சொட்டை மண்ணுக்கும், இரண்டாம் சொட்டை ஆகாயத்துக்கும், மூன்றாம் சொட்டை மரத்துக்கும் விடுகின்றனர். இவர்களின் வீடுகளுக்கு கதவுகள் அமைக்கப்படுவதில்லை. அதேபோல் ஊரில் ஒரு குழந்தை தாய், தந்தையை இழந்துவிட்டால் அந்தக் குழந்தையை ஊர்க்குழந்தையாக்கி அது வளர்ந்த பின்னர் அவரின் திருமணத்தை திருவிழா போல் கொண்டாடுகின்றனர். அதேபோல் ஆண்கள் அனைவருக்கும் பிரசவம் பார்க்கத் தெரிகிறது.

காடர், மலைக்குடியான், பலியர் என இதுவரை நான் சந்தித்த பழங்குடியின மக்கள் எவராயினும் அவர்களின் தேவை வனத்திலேயே நிறைவாகிவிடுகிறது. வனத்தைத் தாண்டி அவர்கள் எதையும் தேடுவதில்லை. ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகளால் அவர்களின் வாழ்வாதாரம் அருகி வருகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் வால்பாறையில் வண்ணத்துப்பூச்சிகள் குறைந்து வருகின்றன. இதனால், காடர்களின் தேன் எடுக்கும் தொழில் பாதிக்கப்பட்டு அவர்கள் எஸ்டேட்களில் கூலித் தொழிலாளியாகும் சூழல் ஏற்படுகிறது.

களரி அமைப்பின் மூலம் நாங்கள் ஏற்பாடு செய்யும் இந்த முகாம்களின் மூலம் நாங்கள் கடத்த விரும்புவது இரண்டே விஷயத்தைதான். ஒன்று பழங்குடிகளைப் போல் தேவையைச் சுருக்கி வாழ்ந்தால் நீர் தொடங்கி எல்லா இயற்கை வளங்களையும் எதிர்கால சந்ததிகளுக்கும் கொடுக்க முடியும். இரண்டாவது, வளர்ச்சி என்ற பெயரில் பழங்குடிகள் சுரண்டப்படுவதற்கு அவர்களின் வசிப்பிடங்கள் வாழ்வாதாரம் பறிபோவதற்கு நமது பேராசை எப்படி காரணமாக இருக்கிறது என்பது.

 

இந்த முகாமிற்கு நாங்கள் ஆட்களைத் தேர்வு செய்வதிலும் மிக மிக கவனமாக இருக்கிறோம். சூழல், நட்பு சிந்தனை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே முதல் தகுதி. சுற்றுச்சூழல் மாசு எல்லை கடந்து வரும் காலகட்டத்தில் நாம் வசித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு தனிநபரும் என்னால் மாசு ஏற்படாது என்று உறுதி செய்தால் மட்டுமே இயற்கையைப் பேண முடியும். மாற்றத்துக்கான கருவியாக தன்னை மாற்றிக்கொள்ள விரும்புபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குகிறோம். முகாமை ஒருங்கிணைக்க வசூலிக்கப்படும் பணத்தில் குறிப்பிடத்தக்க தொகையை பழங்குடியின மக்கள் விரும்பும் வசதியை அவர்கள் பகுதியில் செய்துதர பயன்படுத்துகிறோம் என்று கூறி முடித்தார்.

நீங்கள் வனத்தையும் பழங்குடிகளையும் எவ்வளவு பொறுப்புடன் அணுகுகிறீர்கள்? என்ற கேள்வியை யோகேஷிடம் முன்வைத்தோம்.

''வனம் என்பது பொழுதுபோக்குத் தலம் அல்ல. பழங்குடிகள் காட்சிப் பொருட்களும் அல்ல. அதனால்தான், ட்ரைபல் டூரிஸம் (Tribal Tourism) என்று மத்திய அரசு ஊக்குவிக்கும் திட்டத்தைக்கூட நான் எதிர்க்கிறேன். அந்தமானில் பல பழங்குடிகள் காட்சிப் பொருளாகிவிட்டனர். அவர்களின் தனித் தன்மையை இழந்து வருகின்றனர்.

எனது இலக்கு சுற்றுலா அல்ல கற்பித்தல். அதனால் ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட சிறிய குழுவுடன் இத்தகைய இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன். இந்தியா முழுவதும் உள்ள பழங்குடிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கிறது. அவர்களின் உணவு, மூலிகை மருத்துவ அறிவு, கலை எல்லாமே கலாச்சாரத்தின் உச்சம். அவற்றை அறிந்து மற்றவர்களும் அறியச் செய்வதே எனது லட்சியம்.

மேலும், முகாமிற்காக நாங்கள் சில நிபந்தனைகளை விதிக்கிறோம். 1. மது, புகைப் பழக்கம் கூடாது.

2. பழங்குடிகளுடன் தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுக்கக் கூடாது. 3. முகாம் முடிந்த பின்னர் அந்த பகுதிக்கு மீண்டும் சென்று அவர்களை இடையூறு செய்யக்கூடாது போன்ற நிபந்தனைகள் இருக்கின்றன'' என்று யோகேஷ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x