Published : 12 Jul 2019 09:57 AM
Last Updated : 12 Jul 2019 09:57 AM

‘தேக்வாண்டோ’ துரோணாச்சாரியார்!- 3.5 லட்சம் பேருக்கு பயிற்சி அளித்த பிரேம்குமார்

தற்போதைய சூழலில் தற்காப்புக் கலை என்பது மிகவும் அத்தியாவசியமானது. குறிப்பாக, பெண்கள் அனைவரும் தங்களை தற்காத்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். எந்த சூழலையும் சமாளிக்கவும், சூழ்நிலையை சாதகமாக மாற்றிக்கொள்ளவும் தேக்வாண்டோ உதவும்” என்கிற  எஸ்.பிரேம்குமாரை(53) `தேக்வாண்டோ துரோணாச்சாரியார்’ என்று பாராட்டுகின்றனர் அவரிடம் பயின்றவர்கள். ஏறத்தாழ 3.50 லட்சம் பேருக்கு தேக்வாண்டோ கற்றுக்கொடுத்துள்ள பிரேம்குமார்தான், கோவையில் இந்த தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை கவுண்டம் பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் பிரேம்குமாரை சந்தித்தோம். “பூர்வீகம் ராஜ பாளையம். பெற்றோர் ஸ்ரீனிவாசகம்-புஷ்பவள்ளி. அப்பா நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணிபுரிந்ததால், நெய்வேலியில் வசித்தோம். அங்கு பிளஸ் 2 முடித்துவிட்டு, டிப்ளமோ பயில்வதற்காக கோவை வந்தேன்.

இந்திய தேக்வாண்டோ நிறுவனர் மாஸ்டர் மோகன்தாஸ், சென்னையில் தேக்வாண்டோ கலையைக் கற்றுத் தரத் தொடங்கினார். அப்படியே நெய்வேலியிலும் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கினார்.  அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நான், தேக்வாண்டோ பயிற்சியிலும் சேர்ந்தேன். அப்போதெல்லாம் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படவில்லை. முதல்முறையாக 1979-ல் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றேன். 1980-ல் சென்னையில் நடந்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றேன். இதுவே நான் பெற்ற முதல் பதக்கம். தொடர்ந்து 1996-ம் ஆண்டு வரை 15-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றேன்.

தேக்வாண்டோ கலையில் வெள்ளை பெல்ட்டில் ஆரம்பித்து, மஞ்சள், பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு என  படிப்படியாக உயர வேண்டும். நான் கருப்பு பெல்ட்டில் நான்காவது டிகிரியை முடித்துவிட்டேன். ஆறாவது டிகிரி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்.

1977-ல் சர்வதேச தேக்வாண்டோ சம்மேளனம் தொடங்கினர். நான் கோவையில்தேக்வாண்டோ கலையை அறிமுகப்படுத்தினேன். முதலில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரி மாணவர்களுக்கு தேக்வாண்டோ கற்றுக்கொடுத்தேன். தொடர்ந்து, பாரதிய வித்யா பவன் பள்ளியில் பொதுமக்களுக்கும் இக்கலையைக் கற்றுத்தந்தேன். தொடர்ந்து நிறைய கல்லூரிகள், பள்ளிகளிலும் தேக்வாண்டோ கற்றுக்கொடுத்தேன். ஏறத்தாழ 40 ஆண்டுகளில் 3.50 லட்சம் பேருக்கு இந்த தற்காப்புக் கலையை கற்றுக்கொடுத்துள்ளேன்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, போலீஸார், ராணுவத்தினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர், சிறப்பு அதிவிரைவுப் படையினருக்கு பயிற்சி அளித்துள்ளேன். வால்டர் தேவாரம் ஏடிஜிபியாக இருந்தபோது, சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு (எஸ்.எஸ்.ஜி.) பயிற்சி அளித்தேன். என்னிடம் பயிற்சி பெற்ற 10-க்கும் மேற்பட்டோர் சர்வதேச அளவிலான போட்டிகளிலும், 200-க்கும் மேற்பட்டோர் தேசிய அளவிலான போட்டிகளிலும் பதக்கம் வென்றுள்ளனர். அண்மையில் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய தேக்வாண்டோ போட்டியில் 6 பேர் வெவ்வேறு பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றனர்.கோவையில் 1986-ல் மாவட்ட தேக்வாண்டோ சங்கம் தொடங்கினோம். நான் செயலராகப் பொறுப்பேற்றேன்.  1992-ல் கோவையில் தேசிய தேக்வாண்டோ போட்டியை நடத்தினோம். அதில் கிராண்ட் மாஸ்டர் பார்ஜுன்டே பங்கேற்றார். மாநில, தேசிய தேக்வாண்டோ சம்மேளனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தேன். தற்போது மாநிலஇணைச் செயலராகப் பொறுப்பு வகிக்கிறேன். அண்மையில் 3,500 பெண்களுக்கு தற்காப்புக் கலையை இலவசமாகப் பயிற்று வித்தோம். தொடர்ந்து விழிப்புணர்வுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி அளித்துள்ளோம்.

கோவை வீரர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச்  செய்து, அவர்களை பதக்கம் வெல்ல வைக்க வேண்டுமென்பதே எனது லட்சியம்.  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய விளையாட்டு ஆணையம் நிறைய உதவிகள் செய்கின்றன. எனினும், கோவையில் தேக்வாண்டோ பயிற்சி மையம் அமைத்துக் கொடுத்தால், மாணவ, மாணவிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

எனது மகள் நிவேதிதா, தேசிய அளவில் 9 பதக்கங்களைப் பெற்றுள்ளார்.  தொடர்ந்து 4 முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2010-ல் கோவை மாவட்டத்தின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் பாராட்டப்பட்டார். மகன் நீரஜ், மாநில, தென்னிந்திய அளவிலான தேக்வாண்டோ போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். மனைவி எஸ்.பத்மினி, ராக்கிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிகிறார். நான் தேசியப் போட்டிகளில் நடுவராகவும், ஜட்ஜ்-ஆகவும் செயல்பட்டுள்ளேன்.

தேக்வாண்டோ என்பதற்கு, கை, கால்களைப் பயன்படுத்தி, தற்காத்துக்கொள்ளவும், தாக்கவும் உதவும் கலை என்று பொருள். இதற்கு மட்டும்தான் சர்வதேச அளவிலான கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா) உள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்தக் கலை பெரிய தன்னம்பிக்கையை அளிக்கும். அத்துமீறுபவர்களை விரல் நுனியில் தாக்கி, செயலிழக்க வைக்கலாம். உடல் ஆரோக்கியம், மன வலிமை, தைரியம், மன அழுத்தத்தை போக்குதல் ஆகியவற்றுக்கு தேக்வாண்டோ தற்காப்புக் கலை உதவும். இதில் 10 ஆயிரம்

வகையான பயிற்சிகளும், தாக்குதல், தற்காத்தல், உதைத்தல், பறந்து தாக்குதல் என 1.50 லட்சம் தொழில்நுட்பங்களும் உள்ளன. நேஷனல் ஜியாகரபிக் சேனல் மேற்கொண்ட ஆய்வில், உலகில் மிக வலிமையான, வேகமான, சிறந்த தற்காப்புக் கலை தேக்வாண்டோ என்று தெரியவந்துள்ளது.

கொரியா, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் அதிக அளவில் தேக்வாண்டோ பயில்கிறார்கள். இந்தியாவிலும் மிக வேகமாக இந்தக் கலை பரவி வருகிறது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேக்வாண்டோ கலையில் தேர்ச்சி பெறுவதன் மூலம், கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு உண்டு” என்றார் பிரேம்குமார்.

இந்தியாவில் அறிமுகம் செய்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்...

“கராத்தே, குங்ஃபூ, தேக்வாண்டோ ஆகியவைதான் உலக அளவில் சிறந்த தற்காப்புக் கலைகள். கராத்தே 80 சதவீதம் கைகளையும், குங்ஃபூ 50 சதவீதம் கைகளையும் பயன்படுத்தும் கலை. தேக்வாண்டோ மட்டும்தான் 70 சதவீதம் கால்களையும், 30 சதவீதம் கைகளையும் பயன்படுத்தும் கலை. எகிறி தாக்குவது, பறந்து தாக்குவதெல்லாம் தேக்வாண்டோவில்தான் உள்ளது.

வடகொரியாவின் தலைநகரம் பியாங் யாங்கில் 1942-ல் இந்தக் கலை தொடர்பான ஆராய்ச்சி தொடங்கியது. 1955-ல் மேஜர் ஜெனரல் சோய் ஹொங் ஹி இந்தக் கலையை அறிமுகப்படுத்தினார்.

சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவம், அந்தமான்-நிகோபர் தீவுகளில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, சோய் ஹொங் ஹியை அழைத்து வந்து, வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கச் செய்துள்ளார் சுபாஷ் சந்திர போஸ். 2003-ல் டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில், சோய் ஹொங் ஹி-யே இந்த தகவலைத் தெரிவித்தார். பின்னர் இந்த விளையாட்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் படிப்படியாகப் பரவியுள்ளது” என்றார் பிரேம்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x