Published : 08 Jul 2019 07:28 PM
Last Updated : 08 Jul 2019 07:28 PM

விண்வெளிக்கு ஆய்வுப் பொருட்களை அனுப்பலாமா?- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் போட்டி

விண்வெளிக்கு அருகாமையில் ஆய்வுப் பொருட்களை அனுப்புவது குறித்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' நிறுவனம் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.

இந்தப் போட்டியில் விண்வெளிக்கு  என்னமாதிரியான ஆய்வுப் பொருட்களை அனுப்பலாம் என்பது குறித்து மாணவர்கள் ஆலோசனை வழங்க வேண்டும். உதாரணத்துக்கு  விண்வெளிக்கு அருகாமையில் உள்ள இடத்தின் வெப்பநிலை, அழுத்தம், ஒளி உள்ளிட்டவற்றை அளவிடவும் அங்கு எடுத்துச்செல்லும் பொருட்கள் என்ன மாற்றங்களுக்கு உட்படும் என்பது குறித்தும் மாணவர்கள் பரிந்துரைக்கலாம்.

இந்தப் போட்டி குறித்து 'இந்து தமிழ்' இணையத்திடம் பகிர்ந்துகொள்கிறார் 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீமதி கேசன்.

அவர் கூறும்போது, ''அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் கலாச்சாரம் குறித்து சர்வதேச அளவிலான புரிதலை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வரும் அமைப்பு ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா.

இந்திய மாணவ, மாணவிகளின் கண்டுபிடிப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக 'சாராபாய் விண்வெளி சவால் 2019' போட்டி மத்திய அரசுடன் இணைந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் போட்டியில் மாணவர்கள் விண்வெளிக்கு அருகில் தாங்கள் ஆய்வு செய்ய விரும்பும் பொருட்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அப்பொருள் 3.8 செ.மீ. அளவுள்ள சிறு பெட்டி ஒன்றில் வைக்கப்படும். அதேபோல 10 பொருட்கள் ஒன்றாக ஒரு பெட்டியில் வைத்து, சாட்டிலைட் மூலம் விண்வெளிக்கு அருகாமையில் அனுப்புகிறோம். பொதுவாக விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பப்படும். ஆனால், நாங்கள் ஹீலியம் பலூனில் பாராசூட்டையும் பெட்டியையும் இணைத்து அனுப்புகிறோம்.

வெறுமனே பொருட்களை அனுப்பாமல், விண்வெளி ஆய்வை மேற்கொள்கிற வகையில் பொருட்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்குப் போட்டி வைத்து, அதில் தேர்வாகும் 10 நபர்களின் ஆய்வுப் பொருட்களை அதில் அனுப்ப உள்ளோம்.

இந்த என்எஸ்எல்வி பலூன் சாட்டிலைட் ஆகஸ்ட் 11-ம் தேதி, சிறுசேரியில் இருந்து விண்வெளியை நோக்கி ஏவப்படும். விண்வெளிக்கு அருகாமையில் உள்ள பகுதிக்குச் சென்று கணக்கீடுகளை எடுத்து முடித்துவிட்டு, பலூன் எரிந்து சாம்பலாகிவிடும். பாராசூட் உதவியுடன் நாங்கள் அனுப்பிய பொருட்கள், பூமிக்குத் திரும்பும். அதில் நாங்கள் அனுப்பிய பொருட்களின் நிலை குறித்து ஆய்வு நடத்துவோம்'' என்கிறார் ஸ்ரீமதி கேசன்.

போட்டியில் கலந்துகொள்வது எப்படி?

* விண்வெளியில் எந்தப் பொருளை ஆய்வு செய்யலாம் என்பது குறித்த புதிய யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

* 3.8 செ.மீ. பெட்டிக்குள் அடங்குவதாக அப்பொருள் இருக்கவேண்டும்.

* அரசுப் பள்ளியில் படிக்கும் 8-ம்  வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் வரை மட்டுமே இதில் கலந்துகொள்ளமுடியும்.

* குழுவாக இணைந்து பொருட்களைத் தயார்செய்ய/ தேர்ந்தெடுக்க வேண்டும். தனியாகவும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.

* SKI NSLV பலூன் சாட்டிலைட்டில் தேர்வு செய்யப்பட்ட ஆய்வுப் பொருட்கள் வைக்கப்பட்டு, விண்வெளிக்கு அருகாமையில் அனுப்பப்படும்.

என்ன மாதிரியான ஆய்வுப் பொருட்களைத் தேர்வுசெய்யலாம்?

* தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. உதாரணத்துக்கு வளிமண்டலத்தின் வெவ்வேறு வாயுக்களின் அளவுகளைக் கணக்கிடக் கருவியை அனுப்பலாம்.

* வெவ்வேறு தானிய விதைகளை அனுப்பலாம், விண்வெளியில் அவை என்ன மாற்றத்துக்கு உட்படுகின்றன என்று சோதனை செய்யலாம்.

* விண்வெளி அருகே உள்ள கதிர்வீச்சை அளக்கும் கருவியை அனுப்பலாம்.

* அதீத குளிரில் உலோகங்கள் எப்படி வினைபுரிகின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய, உலோகப் பொருட்களை அனுப்பலாம்.

இதுகுறித்து மேலும் பேசும்  ஸ்ரீமதி கேசன், ''மாணவர்கள் தங்களின் திட்டங்களை மட்டும் பகிர்ந்துகொண்டால் போதும். தேர்வாகும் திட்டங்கள்/ யோசனைகளுக்குத் தேவையான உபகரணங்களை 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா'வே வழங்கிவிடும். போட்டியில் சிறந்த 10 திட்டங்கள் தேர்வு செய்யப்படும். அந்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் மெடல்களும் வழங்கப்படும். 10 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் பள்ளிகளுக்கு டிராபி வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு கிரெடிட் கார்டு அளவிலான பிரின்ட்டரை அனுப்பினோம். அது அப்துல் கலாமின் சுயசரிதையை விண்வெளிக்கு அருகில் அச்சிட்டு, சாதனை படைத்தது. ஆசிரியர்களே தயக்கத்தின் காரணமாக இதுபோன்ற போட்டிகளில் மாணவர்களைக் கலந்துகொள்ளத் தூண்டுவதில்லை. என்ன சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். மாணவர்கள் விண்வெளிக்குச் செல்லவும் விண்வெளி அறிவியலில் ஆர்வத்தைத் தூண்டவும் முதல் படியாக, இந்தப் போட்டிகள் அமையும்'' என்கிறார் ஸ்ரீமதி கேசன்.

போட்டியில் விண்ணப்பிக்க க்ளிக் செய்யவேண்டிய முகவரி: https://www.spacekidzindia.in/ssc-2019/

கடைசித் தேதி: ஜூலை 18, 2019.

தொடர்புக்கு: சாய்  - 99127 52744

விஜய் -  77085 74647

கூடுதல் விவரங்களுக்கு - கடந்த ஆண்டு ராஜஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட சாட்டிலைட்

வீடியோ  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x