Last Updated : 07 Jul, 2019 09:37 AM

 

Published : 07 Jul 2019 09:37 AM
Last Updated : 07 Jul 2019 09:37 AM

தகுதியை உயர்த்தி கொள்வதே வெற்றிக்கு வழி!- `தைரோகேர்’ வேலுமணியின் வெற்றி ரகசியம்

ஏழ்மையைவிட சிறந்த வாத்தியார் இருக்கவே முடியாது. இளம் வயதில் பசிக்கு சாப்பிட சோறு இல்லை. உடுத்துவதற்கு நல்ல உடை இல்லை.  செருப்புகூட கிடையாது. மழை பெய்தால் அதை ரசித்துக்கொண்டே நனைவேன். ஏனென்றால் குடை இருக்காது. முழு வயிறு சாப்பிட்டுவிட்டால், அடுத்தவேளைக்கு கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வாய்ப்பில்லாமல் போகும் என்று ஒருவேளை சாப்பாட்டை இரண்டு வேளைக்குப் பகிர்ந்து கொள்கிற ஏழ்மைதான், எனக்கு முன்னேற சொல்லிக் கொடுத்தது” என்கிற வேலுமணி, ரூ.3,500 கோடிக்கு ஆண்டு வர்த்தகம் செய்கிற ‘தைரோகேர்’  நிறுவனத்தை உருவாக்கி, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளித்து, இந்தியா முழுவதும் வெற்றி சாம்ராஜ்ஜியம் நடத்துகிறார்.

வறுமையை ஜெயித்தால் போதுமென்று போராடாமல், வாழ்வை ஜெயித்துக் காட்ட அவர் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியும் முன்னேறத் துடிக்கும் யாருக்கும் வழிகாட்டும்.

தாயின் சிரமத்தை உணர்ந்த மகன்!

“கணவனே உலகம் என்று நம்பி வருகிற மனைவியைக் கொடுமைப்படுத்துகிற ஆண்களில் ஒருவராக என் தந்தையும் இருந்தார். கணவனின் ஒத்துழைப்பு இல்லாமல், பிள்ளைகளைப் படிக்க வைத்து,  ஆளாக்கி,  கரை சேர்க்கிற தாயின் துயரத்தை விளக்க எந்த மொழியிலும் வார்த்தைகள் இருக்காது.

என் அம்மா எங்கள் கண்முன்னால் படுகிற சிரமங்களைப் பார்த்து வளர்ந்த காரணத்தால்,  பொறுப்புடன் இருப்பது என்னுடைய இயல்பாகவே மாறியது. இரண்டு எருமை மாடுகளை வைத்து தினமும் 10 லிட்டர் பால் கறந்து விற்பனை செய்தால், வாரம் 70 ரூபாய் கிடைக்கும். அதை வைத்து, கடன் வாங்காமல் கௌரவமான வாழ்வை நடத்திக்காட்டினார் அம்மா.

விவசாயக் கூலி வேலை!

சிறுவனாக இருந்தபோதே, எந்த விதத்திலாவது அம்மாவுக்கு உதவ முடியாதா என்று யோசிப்பேன். மழை பெய்யும்போது பள்ளிக்கூடம் போகாமல்,  விவசாயக் கூலி வேலைக்குப் போனால் அதிக கூலி கிடைக்கும் என்பதால், குடும்பமாக வேலைக்குப் போவோம்.

இதுபோல வருடத்துக்கு  40 நாட்கள் பள்ளியில் விடுமுறை எடுக்க வேண்டி வரும்.  அப்படியும் படிப்பைக் கைவிடவில்லை.  வீட்டுக்கு மூத்த மகனாக இருந்த காரணத்தால்,  தந்தையின் குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய கடமையும் எனக்கு இருந்தது.

`முன்னத்தி ஏர் ஒழுங்காக உழுதால்தான், பின்னத்தி ஏரும் சரியாகப் பயணிக்கும்’ என்று அம்மா அடிக்கடி சொல்வார். அதனால், என்னைப் பார்த்து வளர்கிற தங்கை, தம்பிகள் சரியாக வளர முன்னுதாரணமாக இருந்தேன்.

ரயில் பயணத்தில் விளைந்த நன்மை!

கோயம்புத்தூர் வந்து படிப்பது என்பதே எங்களுக்கு வெளிநாடுபோய் படிப்பதுபோல,  பல தடைகளைக் கடந்து வர வேண்டும்.  காலையில் ஆறு மணி ரயிலில் கல்லூரிக்குப் புறப்பட வேண்டும். ரயிலில் பயணித்து தினமும் மூன்று மணி நேரம் முன்பாகவே கல்லூரி வாயிலில் காத்திருப்பேன். அந்த மூன்று மணி நேரத்தில் நான் படித்த பாடங்கள்தான், வகுப்பில் என்னை கவனிக்கத்தகுந்த மாணவனாக மாற்றியது. முன்னேற வேண்டும் என்கிற வெறியோடு இருக்கிறவனுக்கு, வறுமை என்பது சிறந்த வாய்ப்பாக மாறியது. `இதெல்லாம் ஒரு கஷ்டமா?’ என்று நினைக்கிற அளவுக்கு  ஏழ்மை வாழ்வின் அங்கமாக இருந்தது.

கல்லூரிப் படிப்பு முடிந்து வேலைக்குச் சென்றால் குடும்ப கஷ்டங்களில் இருந்து விடுபடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தவனுக்கு பெரிய ஏமாற்றமே பரிசாக கிடைத்தது. என்னோடு 8-ம் வகுப்பு படித்து ஃபெயில் ஆனவன் மில் தொழிலாளியாக மாதம் ரூ.600 சம்பாதித்தால், பட்டதாரிகளுக்கு ரூ.300 சம்பளத்துக்கு  வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக  இருந்தது. `காலேஜ் போய் படிக்கிறேன்னு பெருமை பேசினது இந்த சம்பளம் வாங்கவா வேலுமணி?’ என்று நண்பர்கள் நேரடியாகவே கிண்டல் செய்தனர். படிப்பை நிறுத்திவிட்டு,  வேலைக்குப் போயிருந்தால் குடும்பத்துக்காவது பயன் இருந்திருக்குமே என்று தோன்றியது.

அனுபவம் இருக்கிறதா?

வேலை தேடி நான் அலைந்த சம்பவங்களைத் தொகுத்தாலே, ஒரு புத்தகம் எழுதலாம். நல்ல மதிப்பெண்ணும்,  திறமையும்,  ஆர்வமும் என்னிடம் இருந்தது. ஆனால் வேலைக்கு  நேர்காணல்போன இடங்களில், அனுபவம்  இருக்கிறதா? என்ற கேள்வியையே மீண்டும் மீண்டும் கேட்டார்கள். நம் நாட்டின் சிறந்த நகைச்சுவையான கேள்வி இதுதான். கல்லூரி முடித்து வேலைக்கு முதன்முதலாக முயற்சிக்கிறவனுக்கு, முன் அனுபவம் எப்படி இருக்க முடியும்?

நான்கு வருடங்களுக்கு மேல் சரியான வேலை கிடைக்காமல்,  கோயம்புத்தூரில் பல அலுவலகங்களுக்கு ஏறி இறங்கினேன்.  கோவை மத்திய நூலகத்தில் செலவழித்த ஒவ்வொரு மணித்துளியும், என்னுடைய முதலீடாக மாறியது. ஒரு புத்தகம் அறிவியல் சொல்லிக்கொடுத்தால், இன்னொரு புத்தகம் கணிதம் சொல்லிக் கொடுக்கும். வேறொரு புத்தகம் இலக்கியம் போதிக்கும். மற்றொரு புத்தகம் தன்னம்பிக்கையின் அவசியத்தை எடுத்துச் சொல்லும். ‘கோயிலுக்கு அழைத்துப் போவதுபோல நூலகத்துக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று, நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யுங்கள்’  என்பதே பெற்றோர்களுக்கு எனது வேண்டுகோள். எனக்கான புதிய வாயிலை நூலகம்தான் திறந்துவைத்தது.

அணு ஆராய்ச்சி மையத்தில் நேர்காணல்!

மும்பையில் விற்பனையாகிற ஒரு நாளிதழ், அந்த நூலகத்துக்கு வரும். அதில் வரும்  வேலைவாய்ப்பு செய்திகளை ஆர்வமாகப்  படிப்பேன். மும்பையில் உள்ள ‘பாபா அணு ஆராய்ச்சி மையத்தில்’ வேலைவாய்ப்பு செய்தியைப் பார்த்து, விண்ணப்பித்தேன். நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. மும்பைக்கு ரயிலில் சென்றுவர போதிய பணம் இல்லை. ரயில் நிலையத்திலேயே தூங்கி எழுந்து, அங்கேயே தயாராகி,  நேர்காணலுக்குப் போனேன்.

என் திறமையைச் சோதிக்கும் கேள்விகளை முதன்முதலாக எதிர்கொண்டேன். குறிப்பாக, அனுபவம் உள்ளதா என்ற கேள்வியை யாரும் என்னைப் பார்த்துக் கேட்கவில்லை என்பது பெரிய ஆறுதலாக இருந்தது. மும்பைக்குப் போய்வந்த அனுபவமே எனக்குப் போதுமானதாக இருந்தது. உலகம் விரிவடைந்ததுபோல உணர்ந்தேன். எனக்கான எதிர்காலத்தை அந்த நகரம் உருவாக்கித் தரும் என்று நம்பினேன். என் நம்பிக்கை வீணாகாமல்,  மும்பையில் அரசு உத்தியோகம் கிடைத்தது. என் குடும்பமே, சிரமம் இல்லாமல்  மூன்று வேளையும்  நிம்மதியாக சாப்பிட முடியும் என்று மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய எதிர்காலத்தை தேடி மும்பைக்குப் பயணித்தேன்.

இரண்டு வேளை டியூஷன்!

மாதம் ரூ.800 சம்பளம் கிடைத்தாலும், தங்கை, தம்பிகள் படிப்புக்குப் போதுமானதாக இல்லை. எனக்கு கணக்கும், அறிவியலும் நன்றாக சொல்லிக் கொடுக்கத் தெரியும். அதனால், காலையில் இரண்டு இடத்திலும், மாலையில் இரண்டு இடத்திலும் டியூஷன் சொல்லிக் கொடுத்தேன். இரண்டு வேளை உணவுடன்,  மாதம் கூடுதலாக ரூ.1,000 கிடைத்தது.  அதேபோல, தகுதியை உயர்த்திக் கொள்வதை நிறுத்திக்கொள்ளவே இல்லை. வேலைசெய்துகொண்டே உயிரி வேதியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றேன். என்னுடன் வேலை பார்த்த சீனியர், நான்  ஓய்வு நேரத்திலும் உழைத்துக் கொண்டிருப்பதைக் கவனித்து, அவரது மகளை எனக்கு மணம் முடித்துக்கொடுக்க முன்வந்தார்.

மும்பையில் பிறந்து, படித்து வளர்ந்த பெண்,  என்னுடைய குடும்பத்துக்கு ஒத்துவராது என்று கருதி தயங்கினேன். வங்கிப் பணியில் இருந்த அவருடைய மகளை மணந்தால், என் அடுத்த சந்ததி வாழ்நாள் முழுவதும் சாப்பாட்டுக்கு கஷ்டமில்லாமல் இருக்குமே என்று தோன்றியது. `உங்கள் மகளிடம் தனியாக நான் பேசவேண்டும்’ என்று கேட்டதும், அவரும் சம்மதித்தார். ஒரு மணி நேரம் சந்திப்பில் 55 நிமிடம் நானே பேசினேன். `வசதியில்லாத வாழ்க்கை, கிராமத்தில் இருக்கும் அம்மா, படித்துக் கொண்டிருக்கும் இளையவர்கள், என் எதிர்கால கனவு, அதிரடி நிறைந்த என்னுடைய குணம்’ என்று எல்லாவற்றையும் வெளிப்படையாக கூறினேன். ‘உனக்கு இதெல்லாம் ஒத்துவருமா?’ என்று கேட்டேன். அமைதியாகப் பார்த்தவர், ‘உண்மையாக இருக்கிறீர்கள். அதுதான் எனக்கு வேண்டும்’ என்று என்னை மணக்க முடிவெடுத்தார்.  அவரின் முடிவு, எனக்கு மிகப்பெரிய பலமாக மாறியது. என்னுடைய புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் அளிப்பதுடன், தோல்வியின்போதும் நம்பிக்கை அளிக்கிற மனைவி கிடைத்தார்.

ராஜினாமாவும், மனைவியின் ரியாக்சனும்...

எந்தவிதமான சவாலும் இல்லாமல் வாழ்க்கை சாதாரணமாகப் போகிறதே என்ற கவலை எனக்குள் அடிக்கடி வந்துபோனது. மனைவியிடம்கூட கலந்தாலோசிக்காமல்,  திடீரென்று ஒருநாள் ராஜினாமா கடிதம் கொடுத்து

விட்டு, வீட்டில் போய் நின்றேன். `உங்களுக்குப் பிடிக்காத வேலையை எதற்காக தொடர்ந்து செய்ய வேண்டும்?’ என்று கேட்டு,  இயல்பாக கடந்த மனைவி சுமதியின் முகம், இப்போதும் என் நினைவில் பிரகாசமாக ஒளிர்கிறது.

நாம் நம்மை நம்புவதைவிட, நம்மை நம்புகிறவர்கள் உடன் இருந்துவிட்டால், அதுவே உண்மையான வரம்.  திருமணம் நடந்ததும், என்னுடைய சம்பளத்தை மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்திவிட அனுமதிக் கடிதத்தை அலுவலகத்தில் கொடுத்தேன். நான் செய்த மிக நல்ல ஒரு காரியம் அது. மனைவி சிக்கனமான வாழ்க்கை நடத்தி, ரூ.2 லட்சம் சேமிப்பாக வைத்திருந்தார். அதுதான் என்னுடைய தொழில் பயணத்துக்கான முதலீடு.

தைராய்டு பரிசோதனை மையம்!

மருத்துவத் துறையில் பரிசோதனைகளே மருத்துவருக்கு வழிகாட்டும். அதற்கான பரிசோதனைக் கூடங்கள் எல்லா ஊர்களிலும் உண்டு. நான் தைராய்டு குறித்து ஆய்வு செய்திருந்த காரணத்தால், ‘தைரோகேர்’ எனும் பெயரில்,  தைராய்டு பரிசோதனை மையத்தை மும்பையில் சிறிய அறையில் தொடங்கினேன். நான் தொடங்கியபோது தைராய்டு ஆய்வகம் என்று தனியாக கிடையாது. எல்லா பரிசோதனைகளும் ஒரே இடத்தில் நடக்கும். அதற்கு விலை உயர்ந்த இயந்திரங்களை வாங்க வேண்டும்.

ஓரிடத்தில் மையம் இருந்தால், அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமே வருவார்கள். 300 மாதிரிகளை செய்யக்கூடிய இயந்திரத்தில் 50 மாதிரிகளை செய்தாலே அது பிஸியான மையமாக இருக்கும்.  நான் 250 சேம்பல்ஸ்-ஐ   எப்படி  சேகரிப்பது என்று யோசித்தேன். பரிசோதனை மாதிரிகளைத் தேடிவந்து கொடுக்காமல், நானே தேடிப்போய் சேகரித்தேன். தைரோ டெஸ்ட் செய்கிற வசதி இல்லாத மையங்களை இலக்காக வைத்து,  மும்பை முழுவதும் அலைந்து திரிந்தேன்.

பகலில் தேடிப்போய் ‘சேம்பல்ஸ்’ சேகரித்து  வந்து, இரவில் பரிசோதனை செய்து, அடுத்த நாள் துல்லியமான முடிவுகளுடன் ஒப்படைப்பேன். பெரிய பரிசோதனை மையத்தைப்போல பல மடங்கு அதிகமான பரிசோதனைகள் செய்ததால், குறைந்த விலையில் செய்ய முடிந்தது. ஆர்வமும், திறமையும் கொண்ட இளைஞர்களை வேலைக்குச் சேர்த்தேன்.

சென்ட்ரலைஸ்டு பரிசோதனை மையம்!

கோவை அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் தாமோதரசாமியின் அணுகுமுறை ஒரு வகையில் எனக்கு ரோல்மாடலாக இருந்தது.  அவர் ஒரு ‘சென்ட்ரலைஸ்டு கிச்சன்’ வைத்து,  ஒரே இடத்தில் சமைத்து, பல கிளைகளுக்கு உணவை அனுப்பினார். அதனால், அவரது எல்லா ஹோட்டல்களிலும் ஒரேவிதமான சுவையைத்  தரமுடிந்தது. அதே உத்தியை தைரோகேர் மையங்களில் நானும் பயன்படுத்தினேன். கோவை கிளை மையத்தில் பகல் நேரத்தில் ‘சேம்பல்ஸ்’ சேகரித்து, விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுசென்று, இரவில் பரிசோதனை செய்து, துல்லியமான முடிவுகளை அடுத்தநாளே அறிவித்தோம். 

இந்தியா முழுவதும் சில இடங்களில் `சென்ட்ரலைஸ்டு லேப்’ வைத்து, பல மாநிலங்

களில் சேகரிப்பு மையங்களைத் திறந்ததன் மூலம், குறைந்த கட்டணத்தில் உலகத் தரமான பரிசோதனைகளை செய்ய முடிகிறது.

7,000 பேருக்கு பயிற்சி!

கடந்த 25 ஆண்டுகளில் வேலையில் முன் அனுபவம் இல்லாத 7,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு எங்கள் நிறுவனத்தில் பயிற்சி கொடுத்து, வேலைக்கு எடுத்திருக்கிறேன். அதில் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் போட்டி நிறுவனங்களிலும், பிற இடங்களிலும் வேலை செய்கிறார்கள். ‘தைரோகேர்’ நிறுவனத்தில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால், மூன்று மடங்கு சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுக்கிறார்கள். இதை ஒரு சமூகத் தொண்டாகவே கருதி செய்கிறேன்.

கடன் வாங்கக்கூடாது என்கிற என்னுடைய வைராக்கியம், என்னை  எப்போதும் பணக்காரனாகவே வைத்திருக்கிறது. வேலைக்குப்போன சில ஆண்டுகளில் ஒரு லோன் வாங்கி, புறநகர்ப் பகுதியிலாவது ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்பதே எல்லோருடைய கனவும். பிறகு, வேலையில் இருந்து ஓய்வுபெறும் வரை கடனை அடைக்க ஓடிக்கொண்டிருக்க வேண்டும். 2,000 பேருக்கு வேலைவாய்ப்புத் தருகிற நிறுவனத்தை நடத்துகிற நிலையிலும், இப்போதும் எனக்கு சொந்தமாக வீடு கிடையாது. இனிமேல் வாங்கும் எண்ணமும் இல்லை.

அதேபோல, தொழிலில் ஈடுபடுகிறவர்களும் கடன் வாங்கித்தான் தொழிலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பார்கள். மற்றவர்களுக்கு அது பொருந்தலாம். எனக்கு அது ஒத்துவராது. ‘கடன் இல்லை’ என்கிற கட்டற்ற சுதந்திரம் முடிவுகளை வேகமாகவும், தைரியமாகவும் எடுக்கத்  துணைபுரிந்தது. அதனால், கடன் வாங்காமல் தொழிலை விரிவாக்கம் செய்தேன்.

புதியதை கற்கும் மாணவர்!

பொதுவாக வாழ்க்கை சிரமம் இல்லாமல் பயணிக்க வேண்டும் என்று விரும்புவோம்.  எத்தகைய கடினமான பாதையிலும் தன்னம்பிக்கையுடன்  பயணிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. மனைவியின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடம் தவிர்த்து, சவால்களை எதிர்கொள்ளும் வாழ்க்கைப் பயணம் இனிதே தொடர்கிறது” என்கிற வேலுமணி, தேவையைக் குறைத்துக் கொள்வதே பணக்காரனாக சிறந்த வழி என்பதை உணர்ந்தே செயல்படுகிறார். தன்னம்பிக்கையை இளைஞர்கள் மனதில் விதைக்கிற ஆசிரியராக இயங்கினாலும், தன்னை புதியன கற்றுக்கொள்ளும் மாணவனாகவே வைத்திருக்கிறார். அதுவே அவருடைய பலம்!

அடுத்த வாரம்... அடுத்த சாம்ராஜ்யம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x