Last Updated : 24 Jun, 2019 05:48 PM

 

Published : 24 Jun 2019 05:48 PM
Last Updated : 24 Jun 2019 05:48 PM

தோனியின் அறிவுரையை முன்கூட்டியே கேளுங்கள்

உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நூலிழையில் தோல்வியிலிருந்து தப்பியிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. தோல்வியில் முடிந்திருந்தால் அணியிலுள்ள குறைபாடுகள் பேசப்பட்டிருக்கலாம். போட்டியின் முடிவு மாறிவிட்டதால் முகமது ஷமி ஹாட்ரிக் எடுக்க காரணமான தோனியின் ஆலோசனை பற்றி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

 

உலகக்கோப்பைக்கு முந்தைய ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் தோல்வி, ஐபில் தோல்வி மற்றும் தற்போதைய ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தடுமாற்ற வெற்றி என அனைத்தையும் பெருமைகளாகவே எடுத்துக்கொள்கிறார் நமது கேப்டன் கோலி. தோல்விக்குள் மூழ்கிவிடாத தன்னம்பிக்கை பாராட்டப்பட வேண்டிய குணம்தான் என்றாலும், தோல்விக்கு காரணமான அணியிலுள்ள பலவீனங்களுக்கும் முட்டுக்கொடுப்பது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல.

 

கோலி அணியின் பேட்டிங்கில் டாப் 3 பேட்ஸ்மேன்கள்தான் வெற்றியை பெற்றுத் தந்திருக்கின்றனர் என்பது நன்கு தெரிந்தும் மிடில் ஆர்டர் இடங்கள் இன்னமும் சலுகை இடங்களாகவே தொடர்கிறது. மூவரில் ஷிகர் தவணின் இழப்பை ஈடுகட்ட ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டது மிகவும் பொறுப்பற்றதனம். ஏற்கனவே அணியில் கேதர் ஜாதவை சேர்க்காமலேயே 3 கீப்பர்கள் இருக்கின்றனர். தவிர பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாத நிலையில் பந்த் ஏன் தேவை என்பது புரியாத புதிர்.

 

மேலும் சமீபகாலமாக நமது பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சை அவ்வளவு எளிதாக எதிர்கொள்வதில்லை. இதை புரிந்துதான் பாகிஸ்தானும் நமக்கு எதிரான போட்டியில் கூடுதல் ஸ்பின்னருடன் களம் இறங்கினார்கள். ஆனால் அவர்கள் தாமதமாக ஸ்பின்னர்களை பயன்படுத்தினார்கள். அந்த தவறை ஆப்கானிஸ்தான் செய்யவில்லை. அடுத்து வரும் போட்டிகளிலும் ரோஹித்தையும், கோலியையும் மட்டுமே நம்ப வேண்டிய நிலையில்தான் அணி உள்ளது.

 

தோனியின் மந்தமான பேட்டிங் குறித்தெல்லாம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. கிடைத்தவரை லாபம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். தவிர அவர் பேட்டிங்கில் கோட்டை விட்டாலும், களத்திற்குள் இருக்கும் பயிற்சியாளர் போல சக வீரர்களுக்கு ஆலோசனைகளை(!) கூற தேவைப்படுகிறார். தற்போதைய அணியில் உள்ள ஒவ்வொரு வீரருமே கேப்டனுக்குரிய தகுதியுடன் திகழ்கிறார்கள்.

 

இருந்தாலும் சிக்ஸர் அடிக்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு “யார்க்கர் வீசு“ என்பதைக்கூட ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு தோனிதான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஒருவேளை அந்த நிதாஹாஸ் டிராபி அணியில் தோனி இருந்திருந்தால், வெற்றி பெற கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டபோது சிக்ஸர் அடித்த தினேஷ் கார்த்திக் ”தோனிதான் சிக்ஸர் அடித்தால் வெற்றி பெறலாம் என்று ஆலோசனை கூறினார், இல்லையென்றால் சிங்கிள்தான் அடித்திருப்பேன்” எனச் சொன்னாலும் சொல்லியிருப்பார். இனிமேலாவது அவரது ஆலோசனைகளுக்காக கடைசி ஓவர் வரை காத்திருக்காமல், போட்டியின் துவக்கத்திலேயே கேளுங்கள் வீரர்களே. “பெரியாரைப் பேணித் தமராக் கொளல்“ என வள்ளுவரும் சொல்லியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x