Last Updated : 24 Jun, 2019 09:43 AM

 

Published : 24 Jun 2019 09:43 AM
Last Updated : 24 Jun 2019 09:43 AM

களவு போகும் தண்ணீர்; கவலையில் கடைமடை விவசாயிகள்!

கோவை மற்றும் அன்றைய பெரியார் (ஈரோடு) மாவட்டங்களில் உள்ள நீர்பாசனத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட திருமலை கமிஷன் அறிக்கையின்படி, பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில், பாலாறு படுகையில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர்  நிலங்கள் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, முதல் மண்டலத்தில் 94 ஆயிரத்து 522 ஏக்கர், இரண்டாம் மண்டலத்தில் 94 ஆயிரத்து 202 ஏக்கர், 3-ம் மண்டலத்தில் 94 ஆயிரத்து 362 ஏக்கர்,  4-ம் மண்டலத்தில் 94 ஆயிரத்து 362 ஏக்கர் பாசன வசதி பெறும்படி, ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை பாசனத்துக்கு தண்ணீர் வழங்குவதை மாற்றி, இரு  ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

திருமூர்த்தி அணையின் பாசன நிலங்களுக்கு 4 மண்டலங்களுக்கும் பாசன வசதி அளிப்பதற்காக, பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயில் ஆண்டில் 9 மாதங்கள் தண்ணீர் சென்று கொண்டிருக்கும். இதை  சாதகமாகப் பயன்படுத்தி கொண்டு,  திருமூர்த்தி அணையிலிருந்து 149 கிலோமீட்டர் தொலைவு செல்லும் பரம்பிக்குளம் பிரதானக் கால்வாய் மற்றும்  உடுமலை கால்வாய்களின்  கிளை வாய்க்கால்களுக்கு இருபுறமும் உள்ள விவசாயிகளில் பலர், தண்ணீர் திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதற்காக வடமாநிலத் தொழிலாளர்களை பணியிலும் அமர்த்தியுள்ளனர்.  பிஏபி கால்வாய்களின் அருகில் உள்ள தோட்டத்துக்  கிணற்றிலிருந்து  குழாய்களை எடுத்து வந்து, வாய்க்கால் நீரில் போடும்  வடமாநிலத்  தொழிலாளர்கள்,  இரவு 8 மணிக்கு மேல் அதிகாலை 4  மணி வரை  மோட்டாரை இயக்கி,  விடிய விடிய  வாய்க்கால் தண்ணீரை

கிணற்றில் நிரப்புகின்றனர். மறுநாள் லாரிகள் மூலம் இந்த தண்ணீர், மில்களுக்கும்,  பிற வணிகப் பயன்பாட்டுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு திருடப்படும் தண்ணீர், விவசாயத் தேவைக்குப்  பயன்படுத்தப்படுவது இல்லை என்பது வேதனைக்குரியது.

ஒரு லாரி தண்ணீர் ரூ.1000!

ஒரு கிணற்றில் இருந்து தினமும் குறைந்தது 10 லாரி தண்ணீர் எடுக்கப்பட்டு, ஒரு லாரி தண்ணீர் ரூ.1,000-க்கு விற்கப்படுகிறது. தண்ணீர் விற்பனையில் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருவாய் கிடைப்பதால், வாய்க்காலில் திருட்டுத்தனமாக மோட்டார் மூலம்  தண்ணீரை உறிஞ்சி, வணிகப் பயன்பாட்டுக்கு விற்பனை செய்வோரின்  எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர்  திருடப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆரம்பகாலத்தில்  சிலர் மட்டுமே தண்ணீர் திருட்டில் ஈடுபட்டனர். எனினும், மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைப்பதால், பரம்பிக்குளம்  பிரதான வாய்க்காலில் மோட்டார் மூலம் தண்ணீர் திருடுவோரின்  எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து பிஏபி விவசாயியும், திரைப்பட இயக்குநருமான  ந.பரதன் கூறும்போது, “பாசன நீர் பகிர்வில் ஏற்படும் குறைபாடுகளால், நீரின்றி கருகும் பயிர்களைக் காக்க,  ஒவ்வொரு ஆண்டும் தலைமடை விவசாயி முதல் கடைமடை விவசாயி வரை போராடி பெறும் தண்ணீரை, சிலர் தங்களது சுயலாபத்துக்காக  திருடி, விற்பனை செய்கின்றனர்.

இதனால் பெரிதும் பாதிக்கப்படுவர்கள்  கடைமடை விவசாயிகள்தான்.  மானாவாரி பூமியாக இருந்த கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களை செழிப்பாக்கவும், நூற்றுக்கணக்கான கிராமங்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யவும் கொண்டுவரப்பட்ட பிஏபி திட்டத்தின் பிரதான நோக்கத்தை சிதைப்பதாகவே, தண்ணீர் திருட்டு உள்ளது. பயிரைக் காக்க வழங்கப்படும் தண்ணீரைத்  திருடுவது,தாய்ப்பாலைத் திருடுவதற்கு ஒப்பானதாகும். கோழிப் பண்ணைகளில் இறந்த கோழிகளை, பிஏபி வாய்க்கால்களில் வீசிச் செல்கின்றனர். இதனால் நீர் மாசடைந்து,  குடிக்கப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகிறது.

கணக்கெடுப்பு நடத்த வேண்டும்...

பரம்பிக்குளம் பிரதானக் கால்வாய்ப் பாசனத்தில் உள்ள நிலங்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் பற்றாக்குறையாகவே உள்ளது. இதை சரிசெய்ய, பிஏபி பாசனத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள்,  தற்போது வீட்டுமனைகளாகவும், காற்றாலை நிலங்களாகவும் மாறிவிட்டன.  விவசாயம் நடைபெறாத இத்தகைய நிலங்களைக்  கணக்கெடுத்து, அவற்றை பிஏபி பாசனத் திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும். இந்த நிலங்களுக்கு வழங்கப்பட்ட  தண்ணீரை, பிற விவசாயிகளுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டும்”  என்றார். பூலாங்கிணறு பிஏபி பாசன விவசாயிகள் நலச் சங்கத்  தலைவர் வி.ராமலிங்கம் கூறும்போது, “திருமூர்த்தி அணையிலிருந்து, பரம்பிக்குளம் பிரதான வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் போதெல்லாம், வாய்க்காலில்  தண்ணீர் திருட்டும் நடைபெறுகிறது.   பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயிலிருந்து 300 மீட்டர் தொலைவுக்கு  ஆழ்குழாய்க் கிணறு, நிலக் கிணறு போன்ற நீர்நிலைகளை அமைப்பதோ, அதற்கு மின் இணைப்பு வழங்கவோ கூடாது என்று விதி உள்ளது.

ஆனால், பரம்பிக்குளம் பிரதானக்  கால்வாயிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள பெரு நில உரிமையாளர்கள், கால்வாய் அருகில் உள்ள சிறு விவசாயிகளிடம் லட்சக்கணக்கான ரூபாயைக் கொடுத்து,  சிறு விவசாயிகளின்  கிணற்று நீருக்கு கூட்டு பாத்திய ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். விடிய விடிய வாய்க்காலில் இருந்து தண்ணீரைத் திருடி, கிணற்றில் நிரப்பி, பின்னர் கிணற்றிலிருந்து குழாய் பதித்து பல கிலோமீட்டர் தொலைவுக்கு தண்ணீரை எடுத்துச் செல்கின்றனர்.

திருமூர்த்தி அணையிலிருந்து 1,900 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டால், கிளை வாய்க்கால்களில் நீர் சேதம், ஆவியாதல் என 15 சதவீதம்போக, ஒரு ஏக்கருக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர வேண்டும். ஆனால்,  தண்ணீர் திருட்டால் தலைமடை விவசாயிகளுக்கு 8,000 கனஅடி தண்ணீர்கூட வருவதில்லை. அதேசமயம், கடைமடையை தண்ணீர் சென்று சேருவதே இல்லை.  இதைத் தடுக்க, பொதுப்பணித் துறை,  வருவாய் துறை, மின் வாரிய அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.  அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்காததால்,  பாசனத் தண்ணீர் திருட்டைத் தடுக்க முடியவில்லை” என்றார் ஆதங்கத்துடன்.

பி.ஏ.பி பயணம் தொடரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x