Published : 24 Jun 2019 09:38 AM
Last Updated : 24 Jun 2019 09:38 AM

தமிழில் தேசிய கீதம்! அசத்திய அரசுப் பள்ளி ஆசிரியை

பாடல்கள் மூலம் ஆங்கிலத்தை  எளிமையாகவும், புரியும்படியும் கற்றுத் தருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியை இவான்ஜிலின் பிரிஸில்லா. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே இருக்கும் சேவூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியையான இவர், 13 ஆண்டுகளாக பல்வேறு அரசுப் பள்ளிகளில்  பணியாற்றிவிட்டு, கிராமப்புற பள்ளியான சேவூரில் தற்போது பணியாற்றி வருகிறார்.

அண்மையில் அரசுப் பள்ளி குழந்தைகள் தமிழில் தேசியகீதம் பாடும் வீடியோசமூகவலை தளங்களில் வைரலாகப் பரவியது. அந்த வீடியோவை உருவாக்கியவர் இவர்தான்.இவான்ஜிலின் பிரிஸில்லாவின்  சொந்த ஊர் சேலம்மாவட்டம் ஏற்காடு. “பாடங்களைப்  பாடல்களாக்கி, அதற்கு மெட்டும்அமைத்து,  குழந்தைகளுக்கும் புரியும்படி எளிமையாக சொல்லித் தருகிறார் ஆசிரியை” என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் சேவூர் அரசு உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகள்.

“கிராமப்புற குழந்தைகளுக்கு ஆங்கிலம் என்பது கசப்பாகவே உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்று கருதி, பாடல்கள் மூலம் பாடங்களை எளிதாக்கி, கற்றுத் தருகிறேன். இது நல்ல பலனைக் கொடுத்துள்ளது. அவர்கள் பாடத்தை உணர்ந்து, எளிதாக  கற்கிறார்கள். ஆங்கிலத்தை முதலில் தமிழில் சொல்லித்தருவேன். அதன்பிறகு, ஆங்கிலத்தில் பாடிக் காண்பிப்பேன். பின்னர் பாடத்துக்குள் செல்வேன். இதனால் குழந்தைகள் ஆங்கிலத்தை அருமையாக கற்கிறார்கள்

சமீபத்தில், பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை தமிழில் எழுதி, அதற்கு இசை அமைத்து, சக குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க வைத்தோம்.  அதேபோல், தேசியகீதத்தை தமிழில் பாடினோம். அதற்குரிய நேரமான 52 விநாடிகளில் குழந்தைகளைப் பாட வைத்தோம். தற்போது 6, 7, 10-ம் வகுப்பு மாணவர்கள்,  காலை, மாலை நேரங்களில் தமிழில் தேசியகீதம் பாடுகிறார்கள். இந்த வீடியோவை தற்போது பலரும் சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர்.

“இனங்களும்  மொழிகளும் ஆயிரம் இருந்தும், மனங்களில் பாரத தாயே, வடக்கே விரிந்த தேசாபிமானம், தெற்கில் குமரியில் ஒலிக்கும், இன மத வேற்றுமை உடையில் இருந்தும்,  இதயத்தில் ஒற்றுமை தானே, உலகினில் எத்திசை அலைந்தும், இறுதியில் இந்தியன் ஆவேன், உறுதியில் மூவர்ணம் தானே, இனமோ மொழியோ எதுவாய் இருந்தும் நிரந்தரம் பாரத தாயே, வாழ்க வாழ்க என்றென்றும் நீ வாழ்க” என்று தேசிய கீதத்தை தமிழில் பாடியதற்கு,  தொடர்ந்து பாராட்டுகள் குவிகின்றன.

“தற்போது 6, 7, 10-ம் வகுப்புகளுக்கு ஆங்கிலப் பாடம் நடத்துகிறேன்.  `ஸ்போக்கன் இங்கிலீஷ்’  வகுப்புகள்நடத்தினால், கூடுதலாக ஆங்கில வார்த்தைகளைகுழந்தைகள் தெரிந்து கொள்வார்கள் என்பதால்,தொடர்ச்சியாக ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளும்  நடத்துகிறோம். தினமும் 5 புதிய ஆங்கில வார்த்தைகள் என வாரத்துக்கு குறைந்தபட்சம் 30 முதல் 35 வார்த்தைகளை அறிமுகப்படுத்துகிறோம். அரசுப் பள்ளிக் குழந்தைகள் மிகுந்த திறமைசாலிகள். அவர்களது திறமையை வெளிக்கொணர வேண்டும். ஆங்கிலத்தால் அவர்களது வளர்ச்சி தடைபடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார் இவான்ஜிலின் பிரிஸில்லா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x