Last Updated : 10 Jun, 2019 12:56 PM

 

Published : 10 Jun 2019 12:56 PM
Last Updated : 10 Jun 2019 12:56 PM

ஆழியாறு அணை இல்லீங்க; அட்சய பாத்திரம்! - மக்கள் நினைவில் வாழும் காமராஜர்

ஆழியாறு அணை கட்டும் பணிக்குத் தேவையான கற்களுக்காக, அங்கிருந்த சிறு கரடுகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. உடைக்கப்பட்ட கற்களை அணைகட்டும் இடத்துக்கு மாட்டு வண்டியில் எடுத்துச்  செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தவர் விவசாயி பழனியப்பன். தற்போது 90 வயதை தொட்ட அந்த முதியவர்,  சிங்காரத்தோப்பு கிராமம் குறித்தும், அணை கட்டுமானப் பணிகள் குறித்தும் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்வதற்காக ஆங்கிலேயர்கள் அமைத்த தார்  சாலை சிங்காரதோப்பு வழியாக, ஆதாளியம்மன் கோயில் அருகே சென்று, மேற்கே திரும்பி,  வண்ணாந்துறை என்ற இடத்தில் சித்தாறு மேல் சென்று, குரங்கு அருவிப் பகுதியை அடைகிறது. ஆங்கிலேயர் காலத்தில் சித்தாறின் மீது கட்டப்பட்ட பாலத்தின் மிச்சங்கள் இப்போதும் வெளியே தெரியும்.

வெளியேறிய இரவாலர்கள்!

சிங்காரதோப்பில் குடியிருந்தபடி, வேளாண்மை செய்து வந்த இரவாலர்கள் சமூகத்தினர், அணை  கட்டும்  பணிகள் தொடங்கியவுடன், வீட்டிலிருந்த உணவு, தானியங்களை தலையில் சுமந்துகொண்டு, கால்நடைகளை கையில் பிடித்துக்கொண்டு அந்தப் பகுதியிலிருந்து அகதிகளாக வெளியேறினர்.

வண்ணாந்துறையின் கிழக்கு பகுதிக்கும்,  சிங்காரத்தோப்புக்குமிடையே பெரிய வயல்வெளி இருந்தது. அதில், ஆடிப்பட்டம், ஐப்பசி பட்டம் என இரு போக விவசாயம் நடைபெற்றது. ஆடிப்பட்டத்தில் மட்டக்காரி   நெல்லும், ஐப்பசி பட்டத்தில் நெல்லூர் சம்பாவும்  விளைவிக்கப்பட்டன.  ஒரு காணி (ஒன்னே கால் ஏக்கர்) நிலத்தில் 630 வள்ளம் (ஒரு  வள்ளம் = 3.5 கிலோ) நெல் விளைச்சல் எடுக்கப்பட்டது. ஆனைமலை பகுதியில் அமோக நெல் விளைச்சல் இருந்த பகுதிகளில் சிங்காரதோப்பு கரவெளியும் ஒன்றாகும்.

ஆழியாறு அணையைக் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கனரக இயந்திரங்களில் மண்ணைத்  தோண்டி எடுத்து நூற்றுக்கணக்கான லாரிகளில் கொண்டுசென்று,  கரை அமைத்தனர்.  கரடுகளை வெடிவைத்து உடைத்து எடுக்கப்பட்ட கற்கள், அணையின் மீது அடுக்கப்பட்டு, அணை பலப்படுத்தப்பட்டது. “அந்த மகராசன் கட்டி வச்சது அணை இல்லை, இந்த மண்ணைப் பொன்னாக்கும் அட்சயப்  பாத்திரம்” என்கிறார் விவசாயி பழனியப்பன்.

அணை கட்டும் பணி 1962-ல் முடிவடைந்தது. அந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி, ஆழியாறு அணையிலிருந்து  பாசனத்துக்கு தண்ணீரைத்  திறந்துவிட்டு, அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் காமராஜர். அணை கட்டுவதற்கு முன் ஆனைமலை பகுதியில்  6,400 ஏக்கருக்கு மட்டுமே பாசன வசதி கொடுத்துவந்த ஆழியாறு ஆற்று நீர், தற்போது புதிய ஆயக்கட்டு பகுதியில்  பல்லாயிரம்  ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி தருகிறது.

தண்ணீரைத் தேக்கிவைக்க மலை மீது 6 அணைகள். தேக்கி வைத்த தண்ணீரை பாசனத்துக்கு விநியோகிக்க சமவெளியில் 2 அணைகள் என வடிவமைக்கப்பட்ட பிஏபி திட்டத்தில், மேல் நீராறு  நீர்திருப்பு சிற்றணை குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவின் சிரபுஞ்சி!

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது பெரியாறு பள்ளத்தாக்கு. இங்குள்ள தமிழகப் பகுதியில்,  29 சதுர மைல் பரப்பில், சோலைக் காடுகள் நிறைந்த அடர்ந்த வனப் பகுதியில் உருவாகும் சிற்றோடைகள்,  நீர் ஊற்றுகள், சிற்றாறுகள் இணைந்து கட்டமலையில் நீராறு உற்பத்தியாகிறது. ‘தென்னிந்தியாவின் சிரபுஞ்சி’ என்று அழைக்கப்படும் இந்த இடத்தில்  கிடைக்கும் நீரின் அளவு அபரிமிதமானது.

கட்டமலையிலிருந்து பாய்ந்து வரும்  நீராறு, கல்லார் என்னும் இடத்தில் இடைமலையாற்றில் கலக்கிறது. பெரியாறு நதியின் கிளை நதிதான் இந்த இடைமலையாறு.  மேற்கு நோக்கிப் பாய்ந்து இடைமலையாற்றில் கலக்கும் தண்ணீரை, தொலைவில் உள்ள  சோலையாறு பகுதிக்கு கொண்டுவர வேண்டும்.   சமவெளியாக இருந்தால் பெரிய கால்வாய் வெட்டி, தண்ணீரை எடுத்து வரலாம். மலைகள், பள்ளத்தாக்குகள் நிறைந்த, அடர்ந்த வனப் பகுதியில் ஆற்றை திசை திருப்புவது என்பது,  தமிழகப் பொறியாளர்களுக்கு சவாலான  வேலையாக இருந்தது.

அதுவும் அதிகபட்சமாக விநாடிக்கு 37,760 கனஅடி வெள்ளம் வரும் ஆற்றின் திசையை மாற்றுவது சாதாரண பணியா?  அங்குள்ள மலையை  6 மீட்டர் உயரத்துக்கு குதிரை லாட வடிவில்  குடைந்து, 4.266 கிலோமீட்டர்  தொலைவுக்கு சுரங்கம் அமைத்து, விநாடிக்கு 2,660 கனஅடி தண்ணீரை சுரங்கத்துக்குள் கொண்டுசென்றால் மட்டுமே அது சாத்தியம் என்று தீர்மானிக்கப்பட்டது.  அத்துடன், பாய்ந்து வரும் ஆற்று நீரை தடுத்து நிறுத்தி, இந்த சுரங்கத்துக்குள் அனுப்ப வேண்டும். அதற்கு ஒரு சிற்றணை கட்ட வேண்டும்.

இதற்காக கடல் மட்டத்தில் இருந்து 3,720 அடி உயரத்தில் அணைக்கு அஸ்திவாரம் அமைக்கப்பட்டது.  85 அடி உயரத்துக்கு, 90 அடி அகலத்தில், 0.07 சதுர மைல் பரப்பில் 39 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கிநிற்கும் வகையில் அணை கட்டப்பட்டது. அதற்கான மதிப்பீடு ரூ.2 கோடியே ஒரு லட்சம் மட்டுமே ஆகும். மேல் நீராறு அணையின் கொள்ளளவு 35 மில்லியன் கனஅடி. ஆனால், ஓராண்டுக்கு கிடைக்கும் நீரின் அளவு 9 டிஎம்சி.

கீழ்நீராறு அணை!

அதேபோல, மேல்நீராறில் இருந்து  8 கிலோமீட்டர் தொலைவில், நீராற்றின் குறுக்கே கீழ்நீராறு அணை கட்டப்பட்டது. இந்த அணை மேல் நீராறு அணையைவிட 8.2 சதுர மைல்கள் அதிக வடிகால் பரப்பு கொண்டது. இந்த அணையின் வடிவமைப்பு, இரு பருவ மழைக்காலங்களில் கிடைக்குன் மழைநீரை தேக்கி வைக்கக்கூடிய கொள்ளளவு கொண்டதாகவும் இருக்க வேண்டும்.  கீழ் நீராறு  அணையிலிருந்து வெள்ளக்காலங்களில் திறந்து விடப்படும்  தண்ணீர், சோலையாறு பகுதியைச்  சென்றடையும் வகையில் சுரங்கத்தின் உயரம் மற்றும் கொள்ளளவு இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக 141 அடி உயரம், 620 அடி நீளத்துக்கு, மேல் நீராறு அணையின் கொள்ளளவைவிட 8 மடங்கு அதிக கொள்ளளவு கொண்டதாக, ரூ.5  கோடியே 23 லட்சம் மதிப்பில் கீழ்நீராறு அணை கட்டப்பட்டது. 37.20 சதுரமைல் அளவுக்கு நீர்பிடிப்புப் பகுதிகளை கொண்ட இந்த அணைக்கான அதிகபட்ச நீர்வரத்து விநாடிக்கு 46,020 கனஅடி. அணையின் கொள்ளளவு 274 மில்லியன் கனஅடி. இந்த அணையிலிருந்து கிடைக்கும் நீரின் அளவு 2.50 டிஎம்சி.

அணைக்கான திட்டம் தயாரானது. எனினும், அணையிலிருந்து  பாதுகாப்பான முறையில் தண்ணீர் வெளியேறினால் மட்டுமே, அணையின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்.  இதற்காக,  சோலையாறு பகுதிக்கு, கீழ் நீராறு அணையிலிருந்து 8.129 கிலோமீட்டர் நீளம், 6.70 மீட்டர் உயரத்துக்கு மலையைக் குடைந்து, விநாடிக்கு 2,200 கனஅடி தண்ணீரைக் கொண்டுசெல்லும் திறன் கொண்ட சுரங்கப் பாதையை அமைத்தனர் பொறியாளர்கள்.

இந்த இடத்தில் பொறியாளர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் வியக்க வைக்கும். பல்வேறு  நாடுகளில் உயரமான இடங்களில் கட்டப்பட்ட பல அணைகள் சேதமடைந்து, நீர்க்கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் முதல் முறையாக மலையைக்குடைந்து, சுரங்கம் அமைத்து கட்டப்பட்ட இந்த அணைகள்  தற்போதுவரை எவ்வித பிரச்சினையுமின்றி பயன்பாட்டில் உள்ளது. இதுவே, பொறியாளர்களின் திறமைக்குச் சான்று.

பிஏபி பயணம் தொடரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x