Last Updated : 10 Jun, 2019 12:51 PM

 

Published : 10 Jun 2019 12:51 PM
Last Updated : 10 Jun 2019 12:51 PM

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் பொலிவுபெறும் குளங்கள்!

ஒரு நகரின் நீராதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில்  நீர்நிலைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளின் வடிவங்கள் மாறினாலும், அதன் முக்கியத்துவம் மாறுவதில்லை.

ஒவ்வொரு நாட்டிலும், நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வகையிலும், தூய்மையாகப் பராமரிக்கும் வகையிலும் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பல்வேறு நகரங்களில் நீர் நிலைகள் புனரமைக்கப்பட்டு, அழகுபடுத்தி பார்ப்பதற்கே அழகாக  காட்சியளிக்கும் வகையில் பராமரிக்கப்படுகின்றன.

இதேபோல, தமிழகத்திலும் நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும்  மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பல  திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் 28 குளங்கள் உள்ளன.  கடந்த 2010-ல் பொதுப்பணித் துறை வசமிருந்த சிங்காநல்லூர், வாலாங்குளம், பெரியகுளம், நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வசிந்தாமணி, குமாரசாமி குளம் உள்ளிட்ட 8 குளங்கள், கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பில் விடப்பட்டன.

இந்தக் குளங்களை முறையாகப் பராமரித்து, மேம்படுத்தி, பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், மத்திய அரசு கடந்த 2015-ல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை  அறிமுகப்படுத்தியது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் நகரங்களில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, நவீன கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதையொட்டி, மாநகரம் முழுவதையும்  மேம்படுத்தும் திட்டம் மற்றும் குறிப்பிட்ட பகுதியை மேம்படுத்தும் திட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் கருத்துரு தயாரித்து,  அந்தந்த மாநகராட்சி நிர்வாகங்கள் சார்பில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

இதையடுத்து, முதல்கட்டமாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும் மாநகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமிழகத்தில் கோவை, சென்னை உட்பட நாடு முழுவதும் 20 மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த திட்டங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட மாநகரங்களுக்கு,  முதல் ஆண்டில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் தலா ரூ.200 கோடியும், அடுத்த 4 ஆண்டுகளுக்கு தலா ரூ.100 கோடியும்  ஒதுக்கப்படும் என்றும், இதைப் பயன்படுத்தி வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியைப் பயன்படுத்தி, குளங்களை மேம்படுத்தல், மாதிரி சாலைகள் அமைத்தல், பசுமைப் பகுதிகளை உருவாக்குதல், சூரிய மின்சக்தி மையங்கள் அமைத்தல், ஸ்மார்ட் பெஞ்ச் அமைத்தல், நவீன கேமராக்கள் மற்றும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்துதல், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ள  முடிவு செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சியில், குளங்களை  மேம்படுத்தும் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்,  மாநகரில் உள்ள 8 குளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்த  திட்டமிடப்பட்டது. முதல்கட்டமாக உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வசிந்தாமணி குளத்தை  மேம்படுத்த திட்டமிட்டோம். பெரியகுளத்தின் கரைப் பகுதியை சீரமைத்து ரூ.39.64 கோடி மதிப்பிலும், வாலாங்குளத்தின் வடக்கு பகுதியில் உள்ள கரையை சீரமைத்து ரூ.23.78 கோடி மதிப்பிலும், வாலாங்குளத்தின் மேம்பாலத்துக்கு அடியில் உள்ள பகுதியை சீரமைத்து ரூ.23.52 கோடி மதிப்பிலும் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், ரூ.160 கோடி மதிப்பில்,  செல்வசிந்தாமணி குளத்தைச் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக, ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் மோட்டார் இல்லாத வாகனப் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ரூ.24 கோடி மதிப்பில் மாதிரி சாலை அமைக்கும் பணியும்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்டமாக  நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, குமாரசாமி குளங்களைச் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இந்த நிதியாண்டில் முதல்கட்டமாக ரூ.250 கோடி நிதியை  மாநகராட்சி பட்ஜெட்டில் ஒதுக்கி, பணிகளைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

என்ன பணிகள் மேற்கொள்ளப்படும்?

கோவை குளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ‘குயிக் வின் புராஜக்ட்’  திட்டத்தின் கீழ் குளங்களை மேம்படுத்தும் பணிகள் நடக்கின்றன.

உக்கடம் பெரியகுளம் சுமார் 327 ஏக்கர் பரப்பு கொண்டதாகும். இக்குளத்தின் மொத்த கரை 5.2 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளது. பெரியகுளத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள  1.20 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கரைப்பகுதி, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மாநகராட்சியால் சீரமைக்கப்பட்டது.

அதைத்  தொடர்ந்து, தற்போது உக்கடம் பெரியகுளத்தின் மீதமுள்ள சுமார் 4 கிலோமீட்டர் தொலைவு மேம்படுத்தி, நடைபாதை, சைக்கிள் பாதை, ஸ்மார்ட்பெஞ்ச், பூங்கா, பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மேம்பாட்டுப் பணிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநகராட்சியால் தொடங்கப்பட்டது.

தற்போது உக்கடம்-செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள பெரியகுளத்தின் கரைப்பகுதி உயரம் குறைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆறு அடி உயரம் இருந்த கரைகள், பொக்லைன்  இயந்திரம் மூலம் தோண்டப்பட்டு குறைக்கப்பட்டுள்ளன.

இதில், முதல்கட்டமாக 100 மீட்டர் தொலைவுக்கு கரைகள் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளன.  தொடர்ந்து, சோதனை அடிப்படையில் இந்த 100 மீட்டர் தொலைவில் நடைபாதை, சைக்கிள் பாதை, இருக்கை வசதி போன்றவை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் பின்னர், கரையின் மற்ற பகுதிகளிலும் உயரத்தைக் குறைத்து, பலப்படுத்தி, நடைபாதை, சைக்கிள் பாதை ஏற்படுத்தத்  திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளத்தின் குறுக்கே செல்லும் பாதையைச்  சீரமைக்கும் பணியும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டு, துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  முதல்கட்டமாக, கிளாசிக் டவர் ஜங்ஷனில் இருந்து உக்கடம்-சுங்கம் பைபாஸ் சாலையை இணைக்கும் வகையில் உள்ள சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சாலையில், வாலாங்குளத்தின் கரைப் பகுதியில் இருந்த புதர்கள், கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. சுமார் 5 அடி அகலத்துக்கு இந்த கரை பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கரையை அகலப்படுத்தி, பலப்படுத்தப்பட்ட பின்னர், நடைபாதை, சைக்கிள் பாதை, பூங்கா வசதி, ஸ்மார்ட்பெஞ்ச் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

உக்கடம்-சுங்கம் பைபாஸ் சாலையில், ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள கீழ் பகுதி வரை  சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகள் அடுத்த 4 மாதங்களில் முடிக்கத்  திட்டமிடப்பட்டுள்ளன.  அதேபோல,  செல்வசிந்தாமணி குளத்திலும் கரையை பலப்படுத்தி, மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x