Last Updated : 08 Jun, 2019 11:48 AM

 

Published : 08 Jun 2019 11:48 AM
Last Updated : 08 Jun 2019 11:48 AM

பொறியாளர்களின் நம்பிக்கையால் உருவான பிஏபி திட்டம்! - தமிழகம்-கேரளத்தை மனதார பாராட்டிய நேரு

ஆரம்பத்தில் பிஏபி  திட்டம் தொடர்பாக ஆய்வு செய்த பொறியாளர்கள், இந்த திட்டத்தை நிறைவேற்றுவது சிரமமாக இருக்கும் என்று  கருதினர். எனினும், சமவெளியில் குடிநீருக்காக ஆயிரக்கணக்கான மக்கள் சிரமப்படுவதைக் காட்டிலும், திட்டத்தை நிறைவேற்றுவது பெரிய சிரமமில்லை என்று கருதி, திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்று பொறியாளர் குழு அரசுக்கு அறிக்கை அளித்தது.

முதல் கட்டமாக திட்டம் தொடங்கும் காலத்துக்கு முன்பு, 30 ஆண்டுகளில் இப்பகுதியில் பெய்த மழை குறித்த புள்ளி விவரங்களை சேகரித்து, ஓராண்டில்  கிடைக்கும் மொத்தம் நீரின் அளவை மதிப்பீடு செய்தனர்.  அதில்,  நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் ஆறு, தூணக்கடவு ஆறு, பெருவாரிப்பள்ளம் ஆறு, ஆனைமலை ஆறு  ஆகியவற்றிலிருந்து  மொத்தம் 50 டிஎம்சி தண்ணீர்  கிடைக்கும் என்று  கணக்கிடப்பட்டது. மேலும், 2 லட்சத்து 20 ஆயிரம் கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான நீர் மின் திட்டங்களையும்  செயல்படுத்தலாம் என்பதால், அந்தக் குழுவினர்  பரம்பிக்குளம் திட்டத்துக்கான கருத்துருவை  அரசிடம் சமர்ப்பித்தனர்.

வன விலங்குகள் நிறைந்த காடுகள், தகவல் தொழில்நுட்ப வசதி கிடைக்காத வனப் பகுதி, அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் கட்டுமானப்  பணி, தண்ணீரை திசைதிருப்ப மலைகளைக்  குடைந்து நீண்ட சுரங்கப்பாதை அமைப்பது  போன்ற பிரச்சினைகள் நிறைந்த இந்த திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமா என்று அப்போதைய ஆட்சியாளர்கள் கருதினர்.

இதையடுத்து, பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவரும்,  காமராஜர் அரசில்  கல்வி, சட்டம் மற்றும் நிதியமைச்சராக இருந்தவருமான  சி.சுப்பிரமணியம், எம்எல்சி-யாக இருந்த வி.கே.பழனிசாமி கவுண்டர் ஆகியோர்,  மேற்குத்  தொடர்ச்சி மலையில், பாதை வசதி இல்லாத, வன விலங்குகளால்  ஆபத்து ஏற்படும் அடர்ந்த வனப் பகுதிக்குள் யானைகள் மீது  சென்று, ஆறுகள் உற்பத்தியாகும் இடம், அணைகள் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடம் ஆகியவற்றை  நேரில் பார்வையிட்டு தமிழக பொறியாளர்களிடம் ஆலோசனை நடத்தினர்.

மலைகளைக் குடைந்து சுரங்கப் பாதை அமைக்கும் தொழில்நுட்பம் புதிது என்றாலும், தங்களால் முடியும் என்று  தமிழக  பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.  இதையடுத்து, 11 அணைகள், 8 சுரங்கப் பாதைகள், 4 நீர்மின் உற்பத்தி நிலையங்கள், 10 கால்வாய்கள், 49.20 கிலோமீட்டர் தொலைவுக்கு  சம மட்ட கால்வாய் (காண்டூர் கால்வாய்)  என   பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் பிரம்மாண்டமான முறையில் தயாரானது. ஆனால், இந்த திட்டத்தை கேள்விக்குறியாக்கும் வகையில், மிகப் பெரிய சிக்கல் ஒன்று எழுந்தது.

ஆரம்பத்தில், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் கூட்டுத் திட்டமாக,  பரம்பிக்குளம் திட்டத்தை ரூ.32 கோடி  மதிப்பில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. பல துணைத் திட்டங்களை உள்ளடக்கிய பரம்பிக்குளம் பாசனத் திட்டத்தால், கேரளாவில் பாலக்காடு மாவட்டத்திலும், தமிழகத்தில் கோவை மாவட்டத்திலும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

பரம்பிக்குளம் திட்டம் குறித்த ஆரம்ப அறிக்கை தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்ற வேளையில், பரம்பிக்குளம் திட்டப் பணிகளின் ஆரம்பகட்ட ஆய்வுக்காக, கேரள மாநிலத்தில் உள்ள பகுதிகளுக்கு சி.சுப்பிரமணியம் சென்றது தொடர்பாக, கேரள நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. கேரள அரசின் அனுமதி இல்லாமல், தமிழக அமைச்சர்  அங்கு எவ்வாறு செல்லலாம் என்று நாளிதழ்கள் கேள்வி எழுப்பின.

அப்போது, கேரள மாநில முதல்வராக இருந்தவர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட். இவரும்,  சி.சுப்பிரமணியமும் சிறந்த நண்பர்கள். இதனால், இந்தப் பிரச்சினை பெரிதாகவில்லை.  பரம்பிக்குளம் திட்டம் தொடர்பாக கேரள அரசுடன்  விவாதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து,  ஆரம்பக்கட்ட திட்ட விவரங்களுடன் கேரளா சென்று, முதல்வர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், பாசனத் துறை அமைச்சர் வி.ஆர்.கிருஷ்ணய்யர்  ஆகியோருடன், பரம்பிக்குளம் திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாகப் பேசினார் சி.சுப்பிரமணியம்.

திட்டம் குறித்த முழுமையான அறிக்கையை கேட்டது கேரள அரசு. ஒரு பள்ளத்தாக்கில் இருந்து, மற்றொரு பள்ளத்தாக்கு பகுதிக்கு ஆற்றின் நீரோட்டத்தை திசை திருப்பும் முயற்சி என்பதால்,  திட்டப் பணியின் விரிவான  ஆய்வுக்காக கேரள பகுதிகளுக்குள் ஆய்வு மேற்கொள்ள தமிழகப்  பொறியாளர்களுக்கு கேரளா அரசு அனுமதி அளித்தது.

மலைகளைக் குடைந்து சுரங்கப் பாதை அமைத்து, அதன் வழியாக ஆற்று நீரை மற்றொரு பள்ளத்தாக்குக்கு கொண்டுசெல்வது  இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்பதால், தொழில்நுட்ப நிபுணர்கள் இதுகுறித்து விரிவாக விவாதித்தனர்.

1957-ல் நடைபெற்ற இந்த திட்டத்தின் தொடக்க விழாவில், அப்போதைய பிரதமர் நேரு பங்கேற்றார். இந்த திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசும்போது, “மாநிலங்கள் மொழிவாரியாக பிரிந்துள்ள நிலையில், தமிழகமும், கேரளாவும் நதி நீரைப் பகிர்ந்து கொண்டு, நாட்டுக்கே முன்னுதாரணமாக விளங்குகின்றன” என்று மனதாரப் பாராட்டினார்.

இந்த திட்டத்தை மூன்று  கட்டங்களாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.  இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் நீர்ப் பங்கீடும், மின் உற்பத்தியும் ஆகும்.  முதல்கட்டமாக பரம்பிக்குளம் ஆற்றின் நீரை திசை திருப்பி, அணை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இதனால்,  திட்டப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.

திட்டத்தின் இரண்டாவது கட்டம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் உள்ளிட்ட மூன்று சிறிய நதிகளை, பிரதான திட்டத்துடன் ஒருங்கிணைப்பதாகும். இது தொடர்பாக, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது. கேரளத்தில் கம்யூனிஸ்ட் அரசு மாறி, காங்கிரஸ் ஆதரவுடன், பிரஜா சோஷியலிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தது. முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளை.

கம்யூனிஸ்ட் அரசுடன் மிக எளிதில் முதல்கட்டத் திட்டத்துக்கு உடன்பாடு காண முடிந்துபோல, இரண்டாவது கட்டத் திட்டத்துக்கு பிரஜா சோஷியலிஸ்ட் கட்சியுடன் உடன்பாடு மேற்கொள்ள முடியவில்லை. அதேசமயம், இந்த  திட்டத்தை கிடப்பில் போடவும் இரு அரசுகளும் தயாராக இல்லை. அதற்கு காரணம்,  இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் நீர் தமிழகத்துக்கும், மின்சாரம் கேரளாவுக்கும் தேவைப்பட்டது.

நீர் பங்கீட்டுப் பிரச்சினையை சுமூகமாக முடித்தால் மட்டுமே, திட்டம் அடுத்தகட்டத்துக்கு நகரும் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்தனர். அப்போதைய சூழலில், கேரளாவுக்கு மின்சாரம் மிகவும் தேவைப்படும் ஒன்றாக இருந்தது. மேலும்,  கேரளாவில் நீர் வளம் அபரிமிதமாக இருந்ததால், மின் உற்பத்தியைக் கருத்தில் கொண்டு,  இந்த திட்டத்துக்கு கேரள அரசு ஒத்துழைக்கும் என்று தமிழக ஆட்சியாளர்கள் நம்பினர். ஆனால் நடந்தது என்ன?

பிஏபி பயணம் தொடரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x