Last Updated : 29 Mar, 2019 03:59 PM

 

Published : 29 Mar 2019 03:59 PM
Last Updated : 29 Mar 2019 03:59 PM

குக்கரைப் பார்த்து பயந்தவர்கள் இனி பரிசுப் பெட்டியையும் குறிவைப்பார்கள்: அமமுக ஐடி பிரிவு மாநிலத் தலைவர் பேட்டி

குக்கரைப் பார்த்து பயந்து அதை முடக்கியவர்கள் இனி பரிசுப் பெட்டியின் வெற்றிக்குப் பின்னர் அதையும் குறிவைப்பார்கள் எனக் கூறுகிறார் அமமுகவின் ஐடி பிரிவு மகிளரணி மாநிலத் தலைவரான இஷிகா.

எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் அமமுகவினை சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார்.

அமமுக கட்சிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து சின்னத்தை கொண்டு சேர்க்கும் பணி தொடர்பாக அவரை அணுகினோம்.

அமமுக வேட்பாளர்களிடம் சின்னம் பற்றி கேட்டபோது அத்தனை பேரும் சொல்லி வைத்தார் போல் சின்னம் எதுவாக இருந்தாலும் அதை அரைமணி நேரத்தில் மக்களிடம் கொண்டு செல்வதை எங்கள் ஐடி பிரிவு பார்த்துக் கொள்ளும் என்றனர்? அப்படி என்ன வியூகம் வைத்திருக்கிறீர்கள்?

எந்த தனிச்சிறப்பான வியூகமும் எங்களிடம் இல்லை. எங்களது துணை பொதுச் செயலாளரின் செல்வாக்குதான் அது. மக்கள் செல்வராக அவர் இருக்கிறார். டிடிவிக்கான மக்களின் செல்வாக்கை தான் எங்கள் வேட்பாளர்கள் அப்படி சொல்லியிருப்பார்கள்.

பரிசுப் பெட்டி சின்னத்தை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கப்போகிறீர்கள்?

சின்னம் ஒதுக்குவது முன்னர் இருந்தே சொல்லியதைத்தான் இப்போதும் சொல்வேன். சின்னம் எங்களின் வெற்றியை தீர்மானிக்கப் போவதில்லை. எங்கள் வெற்றியின் அடையாளம் எங்கள் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். ஆதலால் எந்தச் சின்னம் கொடுத்தாலும் அது டிடிவி தினகரனின் சின்னம் என்றுதான் பேசப்படுமே தவிர சின்னம் மட்டும் தனித்த அடையாளமாக இருக்காது. சின்னம் காலையில் அறிவித்தார்கள். அதற்குள்ளதாகவே எங்கள் கடைநிலைத் தொண்டர்வரை அது சென்று சேர்ந்துவிட்டது. ஐடி பிரிவு சார்பாக இன்று ஒரு நாள் சின்னத்தை புரோமோட் செய்யும் வேலை நடைபெறும். அதன்பின்னர் தொண்டர்களே மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுவார்கள்.

 

 

எந்தச் சின்னம் வந்தாலும் சரி என்று சொல்லும் உங்கள் கட்சி குக்கர் சின்னத்துக்காக நீதிமன்றம்வரை போராடியது ஏன்?

ஆர்.கே.நகர் தேர்தலில் எங்களிடமிருந்து இரட்டை இலை பறிக்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தோம். ஆளுங்கட்சியையும் எதிர்க்கட்சியையும் வீழ்த்தினோம். அதே அடையாளத்துடன் மக்களவைத் தேர்தலையும், இடைத்தேர்தலையும் சந்திக்க விரும்பினோம். அதற்காகவே போராடினோம். ஆனால் இப்போது அதைவிட பெரிய பரிசாக பரிசுப் பெட்டி கிடைத்திருக்கிறது.

இரட்டை இலை, உதய சூரியன் என சின்னத்தைப் பார்த்து வாக்களித்த தமிழ் மக்களிடம் சின்னம் பெரிய விஷயமே இல்லை என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களே? அதன் பின்னணி என்ன?

அது சின்னத்தைக் குறைத்து மதிப்பிடும் நோக்கம் அல்ல. டிடிவி தினகரன் 'அம்மா'வால் அறிமுகப்படுத்தப்பட்டவர். அவர் 'அம்மா' வழியில் ஆட்சி செய்ய விரும்புகிறார். அவரது செயல்பாடுகள் 'அம்மா'வை அடையாளப்படுத்தும் வகையில் உள்ளன. கட்சியின் செயல்பாடுகள் மூலமாகவே சின்னம் மக்கள் மனதில் நிலைக்க வேண்டும். எதுவுமே செய்யாமல் சின்னத்தை மக்கள் மனதில் எப்படி திணிக்க முடியும்? எங்கள் தலைவரின் செயல்பாடுகளால்தான் குக்கர் இப்போது பரிசுப் பெட்டி மக்களைச் சென்று சேர்ந்திருக்கிறது.

"டோக்கன் கொடுத்தவர்களுக்கு பரிசுப் பெட்டி கிடைத்திருக்கிறது" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டல் செய்திருக்கிறாரே?

பயத்தில் சொல்கிறார். குக்கர் வெற்றிச் சின்னம் என்ற பயம் ஏற்பட்டதால்தானே அதனைத் தடுத்தனர். இனி பரிசுப் பெட்டி 40-லும், 18-லும் வெற்றி பெற்ற பின்னர் அதைத் தடுக்கவும் நீதிமன்றம் செல்வார்கள். அவர்களின் பயம்தான் எங்கள் பலம். 

தேர்தலில் ஐடி பிரிவின் பங்கு என்னவென்று நினைக்கிறீர்கள்?

மேடைப் பிரச்சாரங்களைப் போல் இதுவும் முக்கியமானது. மக்களுடன் ஒன் டூ ஒன் தொடர்பை ஏற்படுத்தக்கூடியது. எல்லோரிடமும் இணைய வசதி உள்ள செல்போன் இருக்கும் காலத்தில் இத்தகைய பிரச்சாரம் அவசியமானது. ஆனால், கட்சியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்றால் செயல்பாடுகள் ஏதாவது இருக்க வேண்டும். எங்கள் கட்சியின் செயல்படுகளை செல்வாக்கைத்தான் நாங்கள் கொண்டு சேர்க்கிறோம்.

உங்கள் ஐடி பிரிவு தனி அலுவலகம் ஏதும் கொண்டு இயங்குகிறதா?

அப்படி எல்லாம் எந்தக் கட்டமைப்பும் இல்லை. கொள்கைகளை பிரபலமாக்கும் பணியை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம். மற்றபடி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐடி பிரிவுக்காக இளைஞர்கள் செயல்படுகிறார்கள். தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆடவர் அணியும் இருக்கிறது. அதற்கும் ஒரு மாநிலத் தலைவர் இருக்கிறார்.

நீங்கள் பட்டதாரியாக இருக்கிறீர்கள், இளம் பெண்ணாக இருக்கிறீர்கள்? இளைஞர்களுக்கு உங்கள் கட்சி சார்ந்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிப் படுகின்றனர். படித்த இளைஞர்கள் பல நேரங்களில் தங்கள் தகுதிக்குக் குறைந்த வேலையையே செய்கின்றனர். எங்கள் கட்சி இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. அவர்களின் வேலைவாய்ப்பைப் பெருக்க திட்டம் வைத்திருக்கிறது. எங்கள் தலைவரும் இளைஞர்கள் விரும்புபவராக இருக்கிறார். வேட்பாளர் தேர்வில்கூட இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்திருக்கிறோம். அதனால் இளைஞர்கள் வாக்கை அதிகமாக எதிர்நோக்கியுள்ளோம்.

இவ்வாறு இஷிகா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x