Published : 15 Mar 2019 12:37 PM
Last Updated : 15 Mar 2019 12:37 PM

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் எண்ணம் ஆண்களுக்கு எதனால் வருகிறது? வளரும் போதே கண்டறிவது எப்படி?

ஒட்டுமொத்த சமூகமாக எங்கோ நாம் தோற்றிருக்கிறோம் என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கிறது பொள்ளாச்சி பாலியல் சம்பவம். 100-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் தேவைகளுக்காகவும், பணத்திற்காகவும் மிரட்டி பயன்படுத்துவதை 7 வருடங்களாக தொடர்ச்சியாக செய்யும் அளவுக்கு, ஒரு ஆண் எப்படி உருவாகின்றார்? பெற்றோர்களின் பங்கு இதில் என்ன, ஒவ்வொரு பாலியல் கொடுமைகள் நடக்கும்போதும் குழந்தைகள் வளர்ப்பு, குறிப்பாக ஆண் பிள்ளைகள் வளர்ப்பு குறித்து உரக்கப் பேசினாலும், ஏன் அவை சாத்தியமாகவில்லை என்ற கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. இந்த கேள்விகளுக்கான பதில்களை நோக்கி உளவியல் நிபுணர் டாக்டர். அபிலாஷாவிடம் பேசினோம்.

எப்படி ஆண்கள் சமூக வலைதளங்கள் மூலமாக ஒரு பெண்ணுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்? என்ன மாதிரியான வழிமுறைகளை அவர்கள் கையாள்வர்?

பெரியவர்கள், சிறியவர்கள் எல்லோரிடமும் இப்போது செல்போன் இருக்கிறது. அதனால், சமூக வலைதளங்கள் மூலமாக ஒரு பெண்ணிடம் எளிதில் பேச முடிகிறது. சமூக வலைதளங்களில் தான் அனுப்பும் 'ஹாய்', 'ஹலோ' போன்ற மெசேஜ்களுக்கு, பெண் மறுமொழி அளித்துவிட்டால், அவர்கள் அடுத்தபடிக்கு செல்வார்கள். அந்த பெண்ணை வர்ணிப்பார்கள், பாராட்டுவார்கள்.

மெல்ல மெல்ல அந்த பெண் தன் தனிப்பட்ட பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ளலாம். தன் வீட்டில் நடப்பவை, தன்னை யாரும் ஊக்குவிக்கவில்லை என்பது குறித்து சொல்ல ஆரம்பிப்பர். பதிலுக்கு, அந்த நபர்கள் அப்பெண்களுக்கு ஆறுதல் கூறுவார்கள். இதன்மூலம் ஒரு சமயத்தில் அந்த குறிப்பிட்ட நபர் அப்பெண்ணின் நம்பிக்கையை முழுமையாக பெறுவர். அப்பெண்ணுக்கும் ஒரு நம்பிக்கையும் ஈர்ப்பும் உருவாகும்.

தவறான நோக்குடன் சமூக வலைதளங்களில் அணுகுபவர்களை அடையாளம் காணுவது எப்படி?

இம்மாதிரியானவர்கள், ஒருவரை ஏமாற்ற வேண்டும் என முடிவெடுத்து விட்டால் அதற்கேற்றாற் போல் இனிக்க இனிக்க பேசுவார்கள். இதனை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். யாரோ ஒருவர் சம்மந்தமில்லாதவர் எதற்கு நம்மிடம் அன்பாக இருக்க வேண்டும், அதனால் அவர்களுக்கு என்ன ஆதாயம் என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். மிகக்குறுகிய காலத்தில் அறிமுகமாகி, முன்பின் அறியாதவர்களை நம்பக்கூடாது. இந்த விழிப்புணர்வும், உஷார் நிலையும் இப்போது இணையத்தைப் பயன்படுத்தும் பெரும்பாலான பெண்களுக்கு இல்லை. பெண்கள் ஒரு எல்லையை நமக்குள் வகுக்க வேண்டும். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இம்மாதிரியான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

இயல்பாக பெண்களுக்கு இருக்கும் உள்ளுணர்வு இம்மாதிரியான விஷயங்களில் செயல்படாதது ஏன்? எங்கு அதனை தவறவிடுகிறார்கள்?

நாம் நினைத்தால் நிறுத்திக் கொள்ளலாம் என்ற அதீத நம்பிக்கை. ஆனால், தன்னை அறியாமலே அந்த வலைக்குள் விழுந்துவிட்டதை அவர்கள் அறிவதில்லை. முகநூல் நண்பர்கள் என்பது என்ன? அவர்கள் யார்? முகநூல் நண்பர்கள் என்று யாரும் கிடையாது. ஏற்கெனவே தெரிந்த, நன்றாக அறிந்த நண்பர்களுடன் முகநூலில் தொடர்பில் இருக்கலாம். மற்றவர்களுடன் முகநூலில் தொடர்பில் இருப்பது நல்லதல்ல.

இப்படிப்பட்ட அறிவுரைகளால் பெண்கள் இயல்பான அன்பை கூட ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுவார்கள் தானே? பாதிக்கப்பட்ட பெண்களை குற்றம் சொல்வது ஏற்படையதல்லவே?

இல்லை, தேவையில்லாத ஆபத்துகளுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்பதற்காகத் தான் இவையெல்லாம் சொல்லப்படுகிறது. டிக்-டாக் போன்றவையும் இதற்குக் காரணம். அது ஆபத்து என சொன்னபோது விமர்சித்தார்கள். ஆனால், அதனை ஏன் சொன்னோம் என்பது இப்போது புரிந்திருக்கும். பல காரணிகளை இதில் கவனிக்க வேண்டும். மறுபடியும் இம்மாதிரியான பாலியல் கொடூரங்கள் நடக்கக் கூடாது என்பதற்காகத் தான் இவை சொல்லப்படுகிறது.

தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தி விடுவோம் என்றுதான் அப்பெண்கள் மிரட்டப்பட்டுள்ளனர். அப்படியொருவர் மிரட்டினால், அதிலிருந்து பயப்படாமல் பெண்கள் செய்யவேண்டியது என்ன?

உடை, அழகு இதைத் தாண்டி துணிவு பெண்களுக்கு முக்கியம். எல்லை வகுப்பது, உங்களை நீங்களே வழிநடத்துவது முக்கியம். இதையெல்லாம் பார்த்துவிட்டு வீட்டுக்குள் இரு என பெற்றோர்கள் சொல்ல வேண்டாம். பிரச்சினைகளை சமாளிக்கலாம் என சொல்ல வேண்டும். சமூகத்தின் பார்வை தவறாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களை ஒதுக்கக் கூடாது. நம் நிர்வாணம் வெளிப்படுவதை பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும்.

இதில் பெற்றோர்களுடைய பங்கு என்ன? குடும்ப சூழல் இதற்கு எத்தகைய காரணமாக இருந்திருக்கிறது?

யாரும் தெரியாத ஒருவர் பேசினால், பெண்கள் அவர்களை நம்புவதோ, அவர்கள் மீது ஈர்ப்பு கொள்வதோ எப்படி வருகிறதென்றால், வீட்டின் சூழல் அப்பெண்ணுக்கு வெறுமையை அளித்திருக்கலாம். அல்லது அப்பெண்ணுக்கு பெற்றோர்கள் அதிகமாக செல்லம் கொடுத்திருக்கலாம். 18 வயதுக்குட்பட்டவர்கள் குழந்தைகள் தானே. அவர்களுக்கு பெற்றோரின் வழிகாட்டல் அவசியம். பெற்றோர்கள் அமர்ந்து பேச வேண்டும். மகன்/மகள் யாராக இருந்தாலும், அவர்களின் நண்பர்கள் யாரென தெரிந்துகொள்ள வேண்டும். பெற்றோர்கள் அதிகப்படியான வேலைகள் காரணமாக பிள்ளைகளை கவனிக்காமல் தன்னிச்சையாக விடுவது தவறு.

ஒரு குழந்தையிடம் இணையத்தைக் கொடுத்துவிட்டு கண்டுக்காமல் இருப்பது, ஒரு சின்ன குழந்தையை கவனிக்காமல் சாலையில் விடுவதற்கு சமம். பெற்றோர்களுக்கு இதில் அறியாமை இருக்கிறது. "எந்த பிரச்சினை வந்தாலும் என்னிடம் சொல், நான் உன்னை குற்றம் சொல்ல மாட்டேன்" என்று பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டும். பிரச்சினையிலிருந்து காப்பாற்றிக் கொள்வது எப்படி என பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோமோ, அதேபோன்று ஆண் குழந்தைகளுக்கு "நீ பிரச்சினை செய்யாதே" என்றும் சொல்லித் தர வேண்டும்.  சமூக அக்கறையுடன் இருக்க வேண்டும். பெண்களை அடிமையாக பார்க்கும் நிலைமை மாற வேண்டும்.

ஆண்களுக்கு இந்த குற்றம் செய்யும் மனநிலை எப்படி உருவாகிறது. வீட்டில் உள்ள தந்தை உள்ளிட்ட ஆண்கள் எந்தளவுக்கு இதில் தாக்கம் செலுத்துகின்றனர்?

பல குழந்தைகள் தன் தந்தையை ரோல் மாடலாக எடுத்துக் கொள்வர். நிறைய பணம், அதீதமான செல்லம் இதுவும் ஆண் பிள்ளைகளை கெடுக்கும் சூழலை உருவாக்கும். ஏற்கெனவே சிறு வயதில் குடும்ப சூழல், பெற்றோர்களின் உறவு முரண்பாடுகளால் அநீதி இழைக்கப்பட்ட குழந்தைகள், "எனக்கும் இந்த அநீதி நடந்திருக்கிறதே, நானும் அதனை செய்வதில் தவறில்லை" என இத்தகைய குற்றங்களை செய்ய துணிவார்கள். நல்ல விஷயங்கள் சொல்லித் தராமல் வளர்க்கப்பட்ட குழந்தைகள் இத்தகைய குற்றங்களை செய்யும். பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக பள்ளி இதனை சொல்லிக் கொடுக்க வேண்டும். கல்வி இன்றைக்கு மிகப்பெரிய தோல்வி அடைந்திருக்கிறது. நன்னெறி, ஒழுக்கம், மனிதாபிமானத்தை பள்ளிகள் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும். மனநலம் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். தன்னுடைய தேவையை மட்டுமே முக்கியமாக கருதும் நிலையில் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர்.

பல பெண்கள் பொள்ளாச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் தாய் அவருக்கு சார்பாக வாதாடுவதை எப்படி பார்ப்பது?

"காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு". அவரவர் பிள்ளைகளை யாரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். பெற்றோர்களுக்கு இத்தகைய நியாய தர்மம் தெரிந்திருந்தால் பிள்ளைகளையும் நியாயமாக தானே வளர்த்திருப்பார்கள். எவ்வளவோ ஆண்களுக்கு இத்தகைய பாலியல் ரீதியான குற்ற மனநிலை இருக்கலாம். ஆனால், எத்தனை பெற்றோர் தன் மகன்களை மனநல மருத்துவரிடம் அழைத்து வருகிறார்கள்?

பெற்றோர்கள் அத்தகைய குழந்தைகளை எப்படி அடையாளம் காண்பது?

தங்கள் குழந்தைகளிடம் அன்பாக, நெருக்கமாக இருந்தால் எளிதில் கண்டுபிடிக்கலாம். குழந்தைகளின் பழக்கவழக்கங்கள், நட்பை கவனிக்க வேண்டும். அதிக நேரம் தனியாக இருந்தால் ஏன் என்ற காரணத்தைக் கண்டறிதல் அவசியம். எத்தனையோ பிள்ளைகள் மன அழுத்தத்தில் கைகளைக் கீறி தங்களை காயப்படுத்திக் கொள்வார்கள். தேவையில்லாமல் நாய் உள்ளிட்ட பிராணிகளை துன்புறுத்துதல், அழகான பொருட்களை உடைத்தல், பொய் சொல்வது, சம்பவத்தை திரித்து சொல்வது இந்த மாதிரியான செயல்களை வைத்துக் கண்டறியலாம். படிப்படியாக இதனை மாற்ற வேண்டும். பயம் கலந்த மரியாதை, அன்பு குழந்தைகளுக்கு பெற்றோரிடத்தில் இருக்க வேண்டும். நண்பர்களாக வேண்டாம், பெற்றோர்களாக இருந்து பிள்ளைகளை வழிநடத்துங்கள். எதற்கு மகனுக்கு பண்ணை வீடு வாங்கித் தர வேண்டும்? ஏன் பிரத்யேகமாக செய்துகொடுத்து அன்பை வெளிப்படுத்த வேண்டும்? கண்காணிப்பது என்பது சந்தேகம் அல்ல, பாதுகாப்பு என்பதை பிள்ளைகள் உணர வேண்டும்.

குற்ற மனநிலையில் உள்ளவர்களை அதிலிருந்து எப்படி மீட்பது?

பிரச்சினையை மாற்றுவதைவிட, பிரச்சினை வராமல் தடுப்பது தான் நல்லது. தொலைக்காட்சியில் வன்முறை அதிகம் உள்ளது. அதனைப் பார்த்துக்கொண்டே சாதாரணமாக சாப்பிடும் குழந்தைக்கு மனிதாபிமானத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைத்தனத்தையும், மனிதாபிமானத்தையும் குழந்தைகளிடத்தில் திருப்பிக் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு உளவியல் நிபுணர் டாக்டர். அபிலாஷா கூறினார்.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x