Published : 10 Dec 2018 05:58 PM
Last Updated : 10 Dec 2018 05:58 PM

பெண்களின் பாதுகாப்புக்காக ஒருங்கிணைந்த ‘181’ இலவச தொலைபேசி சேவை; 24 மணிநேரமும் எப்படி செயல்படுகிறது?

பெண்கள் பாதுகாப்புக்கான இலவச உதவி எண் 181 தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவையே அதிர வைத்த நிர்பயா சம்பவத்தை அடுத்து பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த சேவை டெல்லி, குஜராத்தைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்த சேவையை இன்று (டிச. 10) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த இலவச எண்ணை அழைப்பதன் மூலம் குடும்ப வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள், குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமை, சொத்துப் பிரச்சினைகள், ஈவ் டீசிங் புகார்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தேவைகள், அரசின் பெண்கள் நலத் திட்டங்கள், மருத்துவ உதவிகள், மனநல ஆலோசனைகள் ஆகியவற்றைப் பெறமுடியும்.

181 உதவி எண் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து உதவி மையத்தின் மேலாளர் ஜெ.அருள் தங்கத்திடம் பேசினேன்.

181 எப்படி செயல்படுகிறது?

''181 பெண்களுக்கான இலவச உதவி எண்ணாகும். இதில் வரும் அழைப்புகள் முதலில் அவசர மற்றும் அவசரமில்லாத அழைப்புகள் என்று பிரிக்கப்படும்.

அவசரமான உடனடிகால உதவிகள் தேவைப்படுவோருக்கு 100க்கு அழைப்பு மாற்றப்படும். சம்பவ இடத்துக்கு போலீஸார் உடனடியாக விரைந்து தேவைப்படும் உதவிகளை மேற்கொள்வர்.

அவசரமில்லாத அழைப்புகளில் புகலிடங்கள் தேவைப்படுவோருக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் செயல்படும் 'ஒன் ஸ்டாப் சென்டர்' உள்ளிட்ட இடங்களில் தற்காலிக புகலிடம் வழங்கப்படும்.

மனநல ஆலோசனை தேவைப்படுவோருக்கு மனநல ஆலோசகர்கள் பேசுவர், மருத்துவ உதவிகளுக்கான வழிகாட்டல்களும் அளிக்கப்படுகின்றன. இதற்காகவே 5 சட்ட வல்லுநர்களும் 5 மனநல ஆலோசகர்களும் பணியில் உள்ளனர். இதுதவிர ஆவணங்களைத் தயாரிக்க தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் உள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் முகவரியும், தொலைபேசி எண்ணும் 181 மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றின் விவரங்களும் உள்ளன. குறிப்பாக சுமார் 80,000 ஆவணங்கள் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின்மூலம் உதவி தேவைப்படும் பெண்கள், தங்களுக்கு அருகிலுள்ள இடங்களில் இருந்தே வழிகாட்டலைப் பெறமுடியும்.

இதன்மூலம் 181-ஐ அழைக்கும் பெண்களின் பிரச்சினைகளுக்கு உடனடி உதவி கிடைக்கும். அதேபோல பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கான தீர்வை எட்டும் வரை தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருப்போம்.

24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கும் 181 உதவி எண் மூலம் சிறுமி முதல் மூதாட்டி வரை அனைத்துப் பெண்களுக்கும் உதவத் தயாராக உள்ளோம். தேவையுள்ள தமிழகப் பெண்கள் இதைப் பயன்படுத்திப் பயன்பெறலாம்'' என்கிறார் அருள்தங்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x