Last Updated : 22 Nov, 2018 02:15 PM

 

Published : 22 Nov 2018 02:15 PM
Last Updated : 22 Nov 2018 02:15 PM

வெறும் உணவு மட்டுமே பேரிடர் நிவாரணம் அல்ல: குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயன் பேட்டி

டெல்டா மாவட்டங்களை பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கி  இழுத்துச் சென்றுள்ளது 'கஜா' புயல். தென் தமிழகத்தில் பல மாவட்டங்கள் ’கஜா’ புயல்  ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து முழுமையாக மீளப் பல ஆண்டுகள் ஆகும் என்று அங்கிருந்து வரும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

கஜா புயல் பாதிப்பால் 63 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழக அரசு நிவாரணப் பணிகளில் தோல்வி அடைந்துவிட்டதாக மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்கள் விமர்சனத்தை முன் வைத்த வேளையில், புயல் பாதித்த இடங்களை அரை நாளில்  பார்வையிட்ட  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புயல் நிவாரணப் பணிகளுக்காக ரூ.1,000 கோடியை உடனடியாக விடுவித்து  உத்தரவிட்டார்.

மேலும் புயல் நிவாரண நிதியாக  மத்திய அரசிடமிருந்து ரூ.15,000 கோடி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இவற்றை எல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு,  இந்தப் புயல் பாதிப்புகளிலிருந்தும், நிவாரணப் பணிகளில் தொடரும் தோல்விகளிலிருந்தும் நாம் எத்தகைய படிப்பினையைக் கற்றுள்ளோம் என்பதை அலச வேண்டிய தேவை தற்போது வந்துள்ளது.

கடந்த 13 வருடங்களில் மட்டும் நிஷா (2008), ஜல் (2010), தானே (2011), வர்தா ( 2016 ), ஒக்கி (2017), கஜா (2018) என்ற பெரும் புயல்களைத் தமிழகம் சந்தித்திருக்கிறது. ஒவ்வொரு புயலும் ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்தும் முழுவதுமாக மீள்வதற்குள் அடுத்த புயலால் தாக்கப்பட்டு மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தங்களது வாழ்வாதாரத்தைத் தொடங்க வேண்டிய சூழலுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலை தொடர்வதற்கான காரணங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

நமது மாநிலப் பேரிடர் மேலாண்மைத் துறை இன்னும் கூர்தீட்டப்படாமல் இருப்பதையும், வெறும் உணவு வழங்குவது மட்டுமே பேரிடர்  நிவாரணம் ஆகாது என்பதையும் அழுத்தமாகச் சொல்கிறார் தேவநேயன்.

கஜா புயலுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும்  சமூக ஆர்வலர், தோழமை தொண்டு நிறுவன அமைப்பின் இயக்குனர், குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயனிடம் இது குறித்து விரிவாகப் பேசினோம்.

”ஒவ்வொரு பேரிடரிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்தப் பேரிடர் பாடங்களிலிருந்துதான் நம்மைத் தற்காத்துக்கொள்ளும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள முடியும்.

எடுத்துக்காட்டாக,  சுனாமிக்குப் பிறகுதான்  மீட்புப் பணிகள் என்ற துறையையே நாம் உருவாக்கினோம்.  அதுவரை தீயணைப்புத் துறைதான் இருந்தது. ஆனால், அதனை நாம் எந்த அளவு மேம்படுத்தி இருக்கிறோம் என்பதுதான் கேள்வி.

குறிப்பிட்ட வேகத்தில் காற்று வீசினால் மரங்கள் கண்டிப்பாக விழும். இதனால் போக்குவரத்து தடை, தொலைத்தொடர்பு பாதிப்புகள் ஏற்படுவது இயல்புதான். ஆனால் அதனை அறிவியல் பூர்வமாக எதிர்கொள்வதற்கான தயாரிப்புப் பணிகள் நம்மிடம் இல்லை. அதை  நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இவை, தற்போது பொதுவாக பேசப்பட்டு வரும் விவாதங்கள். இவற்றைத் தவிர்த்து விவாதிக்கக்கூடிய முக்கியத் தலைப்பு உள்ளது. ’குழந்தைகள்’.  இந்தப் புயலினால் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது  குழந்தைகள்தான். அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த புரிதல் நமது சமூகத்தில் இல்லை. பல இடங்களில் பால், தண்ணீர், சாப்பாடு இல்லாமல் குழந்தைகள் தவித்து வருகிறார்கள். இவை எல்லாம் பேரிடர் காலங்களில் ஒவ்வொரு பிரிவாக  நமக்கு கவனம் தேவை என்பதை உணர்த்துகிறது.

புயல் வருவதற்கு முன்னர் இவ்வளவு நுணுக்கமான வானிலை முன்னறிவிப்புகள் கொடுத்த பின்னரும்  110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்போது  மரங்கள் எல்லாம் கீழே விழும் என்று தெரிந்தும், நுண் திட்டங்கள் நம்மிடம் இல்லாததால் நாம் தோல்வி அடைந்துள்ளோம்.

உலகமே மிகப் பெரிய பருவ கால பாதிப்பினால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.  இன்றைய சூழ்நிலையில் 13 பேரிடர்கள், கடந்த சில ஆண்டுகளில் இந்த நாட்டைத் தாக்கியுள்ளது.  ஒவ்வொரு பேரிடருக்குப் பின்னரும் இதற்கான காரணம் என்ன? பேரிடர் பாதிப்புகள் வராமலிருப்பதற்கான முன்னேற்பாடுகள் என்ன?

இதற்கான ஒருங்கிணைப்பு குழுக்கள் என்ன செய்கின்றன?  ஒவ்வொரு பேரிடர் தாக்கிய பிறகு இரண்டு நாட்களுக்குப் பின்னர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூடுகிறார்கள். இதனைத் தவிர்த்து பேரிடரால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைக்க வேண்டும்.

பேரிடருக்கான தயாரிப்புப் பணி?

நாம் அனைவரும் பின் தங்கிய மாநிலமாகக் கருதும், பிஹார், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பேரிடர் காலங்களில் அதற்கான தயாரிப்புப் பணிகளைப் பாடமாக பள்ளிகளில் வைத்துள்ளனர். நான் நேரிடையாக இதனைப் பார்த்தேன். அங்கு பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு தங்கள் புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை  பேரிடர் காலங்களிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பாடங்களின் மூலம் சொல்லிக் கொடுக்கின்றனர். அவர்களைக் காணும்போது ஆச்சரியமாக இருந்தது.  ஆனால் நமது குழந்தைகள்  பல இடங்களில் கஜா புயல் காரணமாக புத்தகங்களை இழந்துள்ளனர்.

கடலூரைத் தாக்கிய ’தானே’ புயல் இதே வேகத்தில்தான் வந்தது. பலா மரங்கள், முந்திரிக் காடுகள்  பலத்த பாதிப்படைந்தன. இவற்றிலிருந்து நாம் எந்தப் பாடத்தைக் கற்றோம். இல்லையே...

கேரளா கூட சமீபத்தில் பெரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு ஒரு வாரத்தில் மீண்டது. அதிலிருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன? எனவே ஒவ்வொரு வட்டார அளவிலிருந்து மாநிலம் வரை ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும். முன்னேற்பாடுகள் நேரத்தில் காட்டும் ஆர்வத்தை நிவாரண நேரத்திலும் காட்ட வேண்டும்.

நிவாரணப் பணிக்காகச் செல்லும்போது பல இடங்களில் மெழுகுவர்த்திகள் கிடைப்பதில்லை. சென்னையில்  பெரிய கடைகளிலும் மெழுகுவர்த்திகள் இல்லை என்கிறார்கள். இந்தக் குறைபாடுகளை எல்லாம் அரசு கவனிக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் நிவாரணத் தயாரிப்பு என்பது வெறும்  உணவு மட்டுமல்ல என்பதை அரசு உட்பட  நாம் அனைவரும் அறிய வேண்டும்.

ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன. அவற்றை அகற்றுவதற்காக நாம் என்ன செய்திருக்கிறோம்.  இதன் காரணமாக ஏற்படப்போகும் நோய்களுக்காக நாம் என்ன தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்? இவை எல்லாம் அவசியம்.

பள்ளிகளிலிருந்து தொடங்க வேண்டும்

பள்ளி, கல்லூரி மாணவர்கள்  மற்றும் அரசுத் துறையின் ஒவ்வொரு அலுவலகங்களிலும் பேரிடரைக் கையாள்வது எவ்வாறு என்பதைக் கற்றிருக்க வேண்டும். கிராமம் தொடங்கி நகரம் வரை இதனை அமல்படுத்த வேண்டும்.

தானே புயலில் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மீண்டும் அவற்றை வான் வழியே வைத்ததால் கஜா புயலிலும் இவை சரிந்துள்ளன.

சென்னை போன்ற பெரும் நகரங்கள் மட்டும்தான் மக்கள் வாழக் கூடிய இடமா? அங்குதான் மின் இணைப்புகள் தரைவழியாகச் செல்ல வேண்டுமா? தரைக்கடியில் மின்சாரம் போவதை பிற மாவட்டங்களிலும் அரசு ஏன் செயல்படுத்தக் கூடாது?

கடலூரில் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து நாம் எதையும் கற்காததால்தான் பாதிப்பை நாம் மீண்டும் அனுபவிக்கிறோம். நம்மிடையே பேரிடர் குறித்த நீண்ட காலத் திட்டங்கள் இருக்க வேண்டும்.

பருவநிலை கால மாற்றத்தை எதிர்கொள்வதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாம் என்ன திட்டம் வைத்திருக்கிறோம்? இனி வரும் காலங்களில் நாம் நிறையப் பேரிடர்களை சந்திக்க உள்ளோம்.

பிற மாநிலங்களிலும் நாடுகளிலும் பேரிடர் தயாரிப்புக்கான பணிகள் என்ன நடக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொண்டு வர வேண்டும். இதற்கான குழுக்களை அமைக்க வேண்டும். அதில் சரியான நபர்கள் இடம்பெற வேண்டும். 

இந்தக் குழுக்கள் பேரிடரில் நிபுணத்துவம் கொண்டவர்களின் கருத்துகளைப் பெற வேண்டும். பேரிடர் வராமல் இருப்பது, வந்தால் அதனை எப்படி எதிர் கொள்வது குறித்த பாடங்கள் பள்ளிப் பாடத்தில் இருக்க வேண்டும்''.

இவ்வாறு தேவநேயன் தெரிவித்தார்.

பேரிடர் கால நிவாரணங்களில்  நாம் இன்றளவும் பின்னோக்கித்தான் இருக்கிறோம் என்பதை ’கஜா’  மீண்டும் நமக்கு நினைவூட்டியுள்ளது.  நிவாரணப் பணிகளில் உள்ள குறைபாடுகளை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு இனி வரும் காலங்களில் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதில் கூடுதல் பொறுப்புடன் நமது அரசு செயல்படும் என்று நம்புவோமாக.

தொடர்புக்கு > indumathy.g@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x