Published : 20 Nov 2018 06:52 PM
Last Updated : 20 Nov 2018 06:52 PM

கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்

சென்னையை அச்சுறுத்திய கஜா புயல் திசை மாறி, டெல்டா மாவட்டங்களில் கோரத் தாண்டவமாடிச் சென்றுவிட்டது. ஈரமற்ற அதன் தடயம் சாய்ந்துகிடக்கும் தென்னைகளிலும் வாழைகளிலும் தெரிகிறது. தங்களின் பல்லாண்டு கால உழைப்பையும் சேமிப்பையும் பறிகொடுத்த விவசாயிகள் நெஞ்சுக்கூடே காலியானது போல உணர்கின்றனர்.

தஞ்சாவூரைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இருந்த லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வீழ்ந்துள்ளன. பேராவூரணி, ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகள் இதில் பிரதானம். இயற்கைச் சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. அதனால் ஏற்பட்ட நாசத்தை எப்படிச் சரிசெய்யலாம்?

வேரோடு வீழ்ந்த தென்னை மரங்களையும் குருத்து சேதமடைந்த மரங்களையும் உயிரோடு மீட்டெடுக்கலாம் என்று நம்பிக்கை கொடுக்கிறார் வேளாண் நிபுணர் பாலசுப்பிரமணியன். இயற்கைச் சீற்றங்களால் வீழ்ந்த மரங்களையும் நோய்களால் பாதிக்கப்பட்ட மரங்களையும் மீட்டெடுத்திருக்கிறார். அதிலும் கட்டிடங்களுக்கு வேண்டி 40 தென்னை மரங்களை இடம் மாற்றி வெற்றிகரமாக வளர்த்துள்ளார். இதுகுறித்து அவரிடம் பேசினேன்.

''எனது அனுபவத்தில் இயற்கை சீற்றங்கள் மற்றும் சிவப்பு கூன் வண்டு தாக்கிய மரங்களை வெற்றிகரமாக மீட்டுள்ளேன்.

வேரோடு வீழ்ந்த மரங்களுக்கு

தென்னையில் சிறிதளவேனும் வேர்ப்பகுதி இருந்தால் நல்லது. மரத்தின் அடிப்பகுதியில்தான் வேரை உற்பத்தி செய்யும் செல்கள் அதிகம் உள்ளன. வேர்ப்பகுதி பிடுங்கப்பட்ட மரங்களில் நச்சுக்கிருமிகள் தாக்காமல் இருக்க காப்பர் ஆக்ஸி குளோரைடை எடுத்துக்கொள்ள வேண்டும். 1 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம்  என்ற அளவில் கரைத்து ஊற்ற வேண்டும். ஒரு மரத்துக்கு குறைந்தபட்சம் 10 லிட்டர் மருந்து தேவைப்படும்.

பிடுங்கப்பட்ட இடத்திலேயே நடுங்கள்

வேரோடு சாய்ந்த மரத்தை அதே இடத்தில் நட்டால் கூடுதல் பலன் கிடைக்கும். ஏனென்றால் அதே இடத்தில் வளர்ச்சிக்கு ஒத்துப்போகும் நுண்ணுயிரிகள் இருக்கும். குறைந்தபட்சம் 5 அடி ஆழத்துக்கு குழி தோண்டி நட்டு, மண் போட்டு மூடவேண்டும்.

நான்கு பக்கங்களிலும் stay (கயிறு மூலம் மூங்கில் / இரும்பு கம்பி) போட்டு இழுத்துக் கட்டிவிட வேண்டும்.  குழி நிறையத் தண்ணீர் விட வேண்டும். அடுத்த நாள்  தண்ணீரும் மண்ணும் உள்ளே இறங்கி விரிசல் ஏற்பட்டிருக்கும். அதைக் காலில் மிதித்து சரிசெய்ய வேண்டும்.

குருத்தில் உள்ள நான்கைந்து மட்டைகள் தவிர்த்து, மற்ற பச்சை மட்டைகள், தேங்காய் மற்றும் பூ என எல்லாவற்றையும் வெட்டி விட வேண்டும். 6 மாதத்தில் மரம் வளர்ச்சி பெறும். தென்னையில் ஒவ்வொரு மட்டை கணுவும் வேர் வளரக்கூடிய இடமாகும். எனவே விழுந்த மரங்களை திரும்பவும் நான் பரிந்துரைத்தவாறு நடுங்கள். நட்டு நான்கு திசைகளிலும் கம்பு நங்கூரமிட்டு கட்டினால் 6 மாதங்களுக்குள் வேர் வளர்ச்சி பெறும்.

 

குருத்து சேதமடைந்தால்

குருத்து சேதமடைந்தால் தென்னை மரத்தின் குருத்துப் பகுதி மட்டும் சேதம் அடைந்திருந்தால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி ஹெக்சாகொனோசோல் மருந்தும், ஒரு லிட்டர் தண்ணீருக்கு பொட்டாசியம் நைட்ரேட் 5 கிராமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இது இரண்டும் கலந்த தண்ணீரை குருத்துக்குள் ஊற்றிவிட வேண்டும்.

பெரிய மரமாக இருந்தால் 1 குருத்துக்கு 2 லிட்டர் தண்ணீர் தேவைப்படும், சிறிய மரத்துக்கு 1 லிட்டர் போதும். 1 - 2 மாதங்களில் அடுத்த குருத்து வெளியே வந்துவிடும். அப்படி வந்துவிட்டால் தென்னை வளர ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.

மாற்றுப் பயிர்களை யோசியுங்கள்

டெல்டா பகுதியில் களிமண் கலந்த குறுமண், மணல் கலந்த குறுமண் அமைப்பே உள்ளது. இந்த பலவீமான மண் அமைப்பால்தான் இத்தனை சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பாரம்பரிய விவசாயமும் இன்னொரு காரணம். விவசாயிகள் சரியான ஆழத்தில் தென்னைகளை நடவில்லை. வெள்ளம் போன்ற நேரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டதாலும் தென்னை மரங்கள் விழுந்துள்ளன.

புவியியல் அமைப்பை மாற்ற முடியாது என்பதால் டெல்டா விவசாயிகள் மாற்றுப் பயிர்கள் குறித்து யோசிக்க வேண்டும். குறுகிய காலத்தில் வளரக்கூடிய தென்னை மரங்களை நடலாம். அதுவரை பருத்தி, துவரை உள்ளிட்ட பணப் பயிர்களைப் பயிரிடுவது குறித்து யோசிக்கலாம்'' என்கிறார் பாலசுப்பிரமணியன்.

அவரைத் தொடர்பு கொள்ள - 9442253021

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x