Published : 16 Oct 2018 12:00 PM
Last Updated : 16 Oct 2018 12:00 PM

‘ஒலிம்பிக் பதக்கத்திற்கு இணையான ஒரு மருத்துவ சாதனை!’- ‘மயக்கும்’ ஒரு மயக்கவியல் நிபுணர்

‘ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நம் வீரர்கள் ஏதாவது ஒன்றில் தங்கம் பெற மாட்டார்களான்னு ஏங்கறோம். அப்படி ஒரு தங்கம் வந்து விட்டால் ஏகபோகமாக கொண்டாடுகிறோம். மற்ற துறைகளில் சர்வதேச சாதனைகள் நிகழ்த்தும்போது அதை நம்மவர்கள் பேசுவது கூட இல்லை. எங்கள் மயக்கவியல் துறைக்கும் அதுவே நடந்து கொண்டிருக்கிறது!’

இப்படி சொல்லும் டாக்டர் பாலவெங்கட் சுப்பிரமணியம் ஆசியா ‘ஓசியானிக் சொசைட்டி ஆப் ரீஜனல் அனஸ்தீசியா’ (Asia oceanic society of regional anesthesia) எனும் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், மியான்மர், மங்கோலியா உள்ளிட்ட 33 நாடுகள் அங்கம் வகிக்கும் இவ்வமைப்பு சர்வதேச அளவில் பாதுகாப்பான மயக்கவியல் மருத்துவும் நடைமுறைகள் குறித்து ஒவ்வொரு நிமிஷமும் அப்டேட் செய்து வருகிறது.

இதற்கு இந்தியர் தலைவராக தேர்வு பெற்றிருப்பது இதுவே முதன் முறை. ஜப்பானில் (இங்கேதான் இந்த அமைப்பின் தலைமையிடம்) 18 ஏப்ரல் 2019 அன்று நடத்தும் மாநாட்டில் பதவி ஏற்கும் இவர் இரண்டாண்டுகள் அப்பதவி வகிப்பார்.

கோவை கங்கா மருத்துவமனையின் மயக்கவியல் துறை மூத்த ஆலோசகராக இருக்கும் இவர் உலக அளவிலான மயக்கவியல் மருத்துவம் சார்ந்து ஆச்சர்ய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

‘அறுவை சிகிச்சைகளுக்கு மயக்க மருந்து செலுத்தினாலே குளோரபார்ம் போடப்பட்டுள்ளது; நோயாளி மணிக்கணக்கில் மயக்கமாகவே இருப்பார் என்றே இன்றும் மக்கள் கருதுகிறார்கள். அப்படியில்லை. அந்த முறைகள் 1970-80களிலேயே வழக்கொழிந்து விட்டது. இப்போதைய அப்டேஷன் ‘சிஓ ஃபுளோரினா’ (Co Flurane), ‘டெஸ் ஃபுளோரினா’ (desFlurane) என்பதாகும்.

அனஸ்தீசியா கருவி வழியாக எப்பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்கிறோமோ, அந்த இடத்தில் வலி ஏற்படுத்தும் நரம்பிற்கு மட்டுமே செலுத்தப்படுகிறது. எனவே அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நபர் முழுமையாகவோ, உடலின் ஒரு பகுதியிலோ மயக்கப்படுத்தப்படுவது இல்லை. இடது கையில் நடுவிரலில் அறுவை சிகிச்சை என்றால் அப் பகுதிக்கு செல்லும் நரம்பு அல்ட்ரா ஸ்கேனில் கண்டுபிடிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட விரல் பகுதி மட்டும் மரத்துப் போகிற அளவு மருந்து செலுத்தப்படுகிறது. இப்படி மருந்து செலுத்தும்போது மூளைக்கான அலைக் கற்றைகள் (Brain Waves) மானிட்டர் மூலம் முழுமையாக கண்காணிக்கப்படுகிறது. மிகப்பெரிய இதய அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு கூட இந்த மூளை அலைக் கற்றைகள் 40 முதல் 60 சதவீதம் இயக்கம் குறையாத நிலையிலேயே கண்காணிக்கப்பில் வைக்கப்படுகிறது.

இதனால் மயக்க மருந்தால் இறப்பு என்பது ஜீரோ புள்ளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மனித உறுப்புகளை மயக்கமடையச் செய்ய லிவர் (கல்லீரல்) வேலை செய்ய வேண்டும் என்பது விதி. ஏனென்றால் அந்த கல்லீரல் மூலமாகவே மயக்க மருந்து மற்ற அவயங்களுக்கு சென்று குறிப்பிட்ட பகுதியை மரத்துப் போக செய்யும்.

இப்போதெல்லாம் கல்லீரலே செயலிழந்து, அதை மாற்றும் (Liver transplantation) பிரதான சிகிச்சைக்கு கூட கிட்னி வழியாக மருந்து செலுத்தி குறிப்பிட்ட கல்லீரல் பகுதியை மரத்துப் போக வைக்கும் தொழில் நுட்பங்கள் வந்து விட்டது.

இந்த தொழில்நுட்ப பயன்பாட்டில் அமெரிக்கா மட்டுமே முன்னணியில் இருந்தது. இப்போது நாமும் அந்த வரிசையில் இடம் பிடித்து உலகிலேயே மயக்கவியல் மருத்துவத்தில் முன்னேறிய நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம்!’ என விளக்கிய பாலவெங்கட், அது எப்படி சாத்தியமானது என்பதை தன் அனுபவத்திலிருந்தே ஆரம்பித்தார்

‘அமெரிக்கன் சொசைட்டி ஆப் ரீஜனல் அனஸ்தீசியன்ஸ் என்ற அமைப்பு 1976லிருந்தே சர்வதேச அளவில் செயல்படுகிறது. அதில் 1999லிருந்தே நான் உறுப்பினர். இந்தியாவிலேயே அதில் முதல் உறுப்பினர் ஆனதும் நான்தான். குத்து மதிப்பாக மயக்க ஊசி செலுத்தும் முறை மாறி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் மூலம் குறிப்பிட்ட வலிக்கான நரம்பைக் கண்டுபிடித்து அப்பகுதியை மட்டும் மரத்துப் போகச் செய்யும் மயக்க ஊசியை போடும் முறையை அங்கே அறிந்து அதன் வழி சிகிச்சை கொடுக்க ஆரம்பித்தேன்.

அதற்காக 2005லேயே கங்கா மருத்துவமனையில் ஒரு மையத்தை ஏற்படுத்தினோம். புதிய இம்முறையை நாட்டில் உள்ள மயக்க மருத்துவர்கள் பலரும் இங்கேயே வந்து மாதத்தில் ஆறு நாட்கள் பயிற்சி எடுத்து சென்றனர் இந்த இலவச பயிற்சியை மட்டும் இந்தியாவில் இதுவரை 1800 பேர் எடுத்துள்ளார்கள். மிகப்பெரிய மருத்து வசதி கொண்டதாக சொல்லப்படும் மும்பை நகர மருத்துவமனைகளிலிருந்து மட்டும் இதுவரை 400 பேர் இங்கே வந்து பயிற்சி எடுத்துள்ளார்கள்.

இதற்கிடைப்பட்ட காலங்களில் எனது இந்த பயிற்சி அனுபவங்களை அமெரிக்கன் சொசைட்டியில் பகிர்ந்து கொள்ள, அவ்வமைப்பின் ஜெர்னலில் வர ஆரம்பித்தது. அதை படித்து பல நாடுகளை சேர்ந்த மயக்கவியல் மருத்துவர்கள் ஃபாலோ செய்தார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் இந்தியாவிற்கு இப்படியொரு அமைப்பு தேவை என 2012ல் அகடாமி ஆப் ரீஜனல் அனஸ்தீசியா ஆப் இந்தியா உருவாக்கினோம். என்னைத் தலைவராக கொண்டு 5 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் இப்போது 1480 உறுப்பினர்கள் உள்ளனர். அதன் மூலமாகவே மயக்கவியல் மருத்துவர்களுக்கு இங்கே பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

இப்படியான எங்கள் செயல்பாடுகள் 2014ல் வேர்ல்டு ஃபெடரேஷன் ஆப் அனஸ்தீசியா என்ற அமைப்பின் கவனத்திற்கு வந்தது. இந்தியா உட்பட 150 நாடுகள் அங்கம் வகிக்கும் இவ்வமைப்பு வளர்ந்து வரும் நாடுகளில் மயக்கவியல் மருத்துவத்திற்கு முதல் மையமாக எங்கள் மருத்துவமனையை அறிவித்தது. அதன் மூலம் அந்த அமைப்பு வருஷம் நான்கு பேரை தேர்ந்தெடுத்து எங்கள் மருத்துவமனை மையத்திற்கு பயிற்சிக்கு அனுப்புகிறது. அவர்கள் இங்கே 6 மாதங்கள் தங்கி முழுமையாக இலவச பயிற்சி எடுத்து செல்கிறார்கள்.

இப்படி இதுவரை பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மியன்மார், ருவாண்டா, உகாண்டா, கென்யா, நைஜிரியா, ஜிம்பாப்வே, டான்சானியா, சியாரோலியே, மங்கோலியா, நேபால் போன்ற நாடுகளின் 16 பேர் பயிற்சி பெற்று வேர்ல்டு ஃபெடரேசுன் கங்கா ஆஸ்பிடல் ஃபெலோ ஷிப் சான்றிதழ் பெற்றுச் சென்றுள்ளார்கள். அதோடு அவர்கள் அவங்க நாடுகளில் அங்குள்ள மயக்க மருத்துவர்களுக்கு இந்த பயிற்சியை அளிக்கிறார்கள்!’ என்றவர்.

‘ஆசியா ஓவியானிக் அமைப்பும் சர்வதேச அமைப்புதான். இது 33 நாடுகளை உறுப்பினராக கொண்டது. இதன் தலைவர் பொறுப்புக்கு இதன் உறுப்பினர்களே பரிந்துரைத்துள்ளனர். அதன்மூலமே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறேன். இதில் தலைவராக பொறுப்பேற்றதன் மூலம் பல்வேறு நாடுகளில் மட்டுமல்ல, நம் நாட்டிலும் மேலும் திறமையான மயக்கவியல் நிபுணர்களை உருவாக்க முடியும்.

‘World Congress Of Anaesthesiologists என்ற சர்வதேச மாநாடு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு நாடுகளில் கூடுகிறது. அதில் The Olimpics of Anaesthesiology பற்றி முக்கியமானவர்கள் ரெப்ரசன்ட் பண்றாங்க. அதன் 17வது மாநாடு வரும் 2020ல் செக்கோஸ்லேவேக்கியா நாட்டில் பிராக் நகரில் நடக்க உள்ளது.

அதில் ஆசியா நாடுகள் சார்பா மயக்கவியல் துறை அருமை பெருமைகளை ரெப்ரசன்ட் செய்ய என்னைத்தான் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.!’என்றும் குறிப்பிட்டவர், ‘ஐடியில் சாதனை படைத்து விட்டோம். விண்வெளியில் சாதனை செஞ்சுட்டோம். மருத்துவத்துறையில் மயக்கவியலிலும் நாம் சாதனை படைச்சிட்டோம். ஆசியன் பசிபிக் நாடுகளில் நாம்தான் இதில் சிறப்பாக இயங்கி கூடுதலாக சாதிச்சு கவனிக்கப்பட்டிருக்கிறோம்.

தற்போது உலகில் 82 நாடுகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் இந்தியாவில் எப்படி மருத்துவம் செய்கிறோமோ அதையே ஃபாலோ செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய சாதனை!’ என்றும் உளம்பொங்க சொன்னார். சரி, மயக்கவியல் மருத்துவத்தில் இன்றும் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? என்று கேட்டேன்.

‘ஒரு காலத்தில் மயக்க மருந்து செலுத்துவதில் நிறைய சவாலான சவாலான விஷயங்கள் இருந்தது. இப்போது அப்படியில்லை. ஒரு பாட்டியோ, தாத்தாவே பாத்ரூமில் வழுக்கி விழுந்து இடுப்பு எலும்பை உடைத்துக் கொண்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த எலும்பை ஆபரேட் பண்ணி சிகிச்சை செய்யும்போது அவர்களின் பிபி. சுகர் எல்லாம் கண்ட்ரோலில் வைக்க முடியாது.

ஆனால் இப்போது குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் மயக்க ஊசி செலுத்தி மரத்துப் போவதை செய்வதன் மூலம் அந்த தாத்தா பாட்டிக்கு வலி மறந்து, பிபி, சுகர் நார்மல் நிலையிலேயே இருக்க வைத்து, இளையவர்களுக்கு செய்வது போல் சிகிச்சை செய்து முடிக்க முடிகிறது. தற்போது இந்திய அளவில் சொசைட்டியில் பதிவு செய்யப்பட்ட மயக்கவியல் மருத்துவர்கள் மட்டும் 28 ஆயிரம் பேர் உள்ளனர். உலக அளவில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் மயக்கவியல் மருத்துவர்களை கொண்ட நாடுகளில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. முதல் இடம் அமெரிக்கா. அங்கே சுமார் 46 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள்! ’என முடித்துக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x