Published : 09 Oct 2018 05:31 PM
Last Updated : 09 Oct 2018 05:31 PM

தமிழகத்தில் குளோரியோசா சூபர்பா பூஞ்செடி சாகுபடி: பூத்துக்குலுங்கும் விவசாயிகள் வாழ்க்கை

திண்டுக்கல் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தற்போது குளோரியோசா சூப்பர்பா (Gloriosa superba) எனும் மலர்த்தாவரத்தை பயிரிடத் தொடங்கியுள்ளனர். சற்றே மிகையாகத் தோன்றலாம்... உண்மை அதுதான் இப்பூஞ்செடி விவசாயிகளுக்கு தங்கச்சுரங்கம் என்கிறார்கள்.

ஆண்டுதோறும் பருவமழையை நம்பித்தான் நமது விவசாயிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதில் பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதனால் பல விவசாயிகள் மாற்று விவசாயத்திற்கு நகர்ந்து வருகின்றனர். அவ்வகையில் குளோரியோசா சூபர்பா தமிழக விவசாயத்தில் ஒரு புது வரவு!

அங்கங்கே காட்டில் மேட்டில் மலைப்பாங்கான இடங்களில் புதர்வெளிகளில் இம்மலர்களை சிலர் பார்த்திருக்கக் கூடும். ஆனால் அதற்கு இவ்வளவு மவுஸா என்று நிச்சயம் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இம்மலர் தாவரம் அல்கலாய்டுகள் (நைட்ரஜன் கரிம சேர்மங்கள்) மற்றும் அமினோ அமிலங்களில் இருந்து உருவாகாத அல்கலாய்டு போன்ற கலவைகள் 24 வகைகளில் உள்ளனவாம். மருத்துவ மருந்துக் கலவையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது இச்செடி. மூட்டுப்பிடிப்பு மற்றும் கீல்வாத சிகிச்சையில் வலி நிவாரணியாக தரப்படும் ஆங்கில மருந்தில் இம்மலர்ச்செடியின் மருந்துக் கலவைகள் இடம்பெற்றுள்ளன.

சிற்சில நிலப்பகுதிகளுக்கு மட்டுமே சொந்தமான இந்த சாகுபடி சமீப ஆண்டுகளில் பரவலாக எல்லா இடங்களிலும் பயிர்வைக்க ஆரம்பித்துள்ளனர். குளோரியோசா சூபர்பா பூஞ்செடி சாகுபடிக்கு விவசாயிகள் மாறியதே ஒரு சுவாரஸ்யமான கதைதான்.

சிவகாசி விவசாயி டி. பி. ராஜேந்திரன்

சிவகாசியைச் சேர்ந்த விவசாயி டி. பி. ராஜேந்திரன், 1970 ல் தன்னுடைய பண்ணை நிலத்தில் வினோதமாக காணப்பட்ட ஒரு கிழங்கைப் பார்த்து இது என்ன கிழங்கு தடுமாறினார். அதை என்னவென்று தெரிந்துகொள்ள, லண்டனில் உள்ள வெப்ப மண்டல உற்பத்தியாளர்கள் நிறுவனத்திற்கு அதை அனுப்பினார். அங்கிருந்து வந்த ஆதாரப்பூர்வமான தகவலின்படி அங்கு மருந்து தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு செடியின் விதை இது என்று அவருக்கு உறுதிப்படுத்தப்பட்டது.

பின்னர் ஒரு சில மாதங்கள் கழித்து, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் அருகே வனப்பகுதி வழியே அவர் செல்லும்போது அங்கே ஒரு உயரமான செடியைக் கண்டார். இதென்ன இவ்வளவு உயரமாக இருக்கிறது என்று வியந்தார். பிறகு அச்செடிதான் இவர் தடுமாறிய விதையின் தாவரம் என்பதைக் கண்டார்.

பின்னரே 1972ல் ஒரு இத்தாலிய மருந்து நிறுவனம் இம்மலரை ஒரு கிலோ ரூ.250க்கு எடுத்துக்கொள்ள தயாராக இருந்தது என்பதையும் அறிந்தார். அதிலிருந்து அவரே அதை பயிரிடத் தொடங்கினார்.

அந்நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துகொண்டு திண்டுக்கல் மற்றும் தற்போதைய திருப்பூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இப்பூச்செடிகளை பயிரிட்டு தொடர்ந்து அனுப்பிவைக்க ஆரம்பித்தார்.

1980ல் இம்மலர் அரிய வகை தாவரங்கள் பட்டியலில் இடம்பெற்றதால் ஏற்றுமதி செய்ய தடை செய்யப்பட்டது. அதே ஆண்டில் பண்ணையில் பயிரிடப்பட்ட விதைகளை மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டதாக ராஜேந்திரன் தெரிவிக்கிறார். பின்னர் பல்வேறு விவசாயிகளும் இவரது முயற்சியைக் கண்டு வியந்ததோடு அவரைப் பின்பற்றத் தொடங்கினர்.

தங்கள் விவசாய வாழ்க்கைக்கு ஒரு தங்கச் சுரங்கம் என்றே நினைக்கத் தொடங்கினர். நெல், நிலக்கடலை, கரும்பு போன்ற பயிருக்கு செய்வதுபோன்றே நீர்க்காப்பு செய்து கண்ணும் கருத்துமாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டலாயினர்.

இதன்மூலம் கிடைக்கும் வருவாய், விவசாயிகளை உற்சாகப்படுத்தியுள்ளது. தற்போது திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சில ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இப்பூச்செடிகள் வளர்கின்றன.

இம்மலர்ச்செடிக்கு ''காந்தள்'' என்பதுதான் நம் பூர்வீகப் பெயர். சங்க இலக்கியத்தில்கூட இம்மலர் இடம்பெற்றுள்ளது. ஆனால் உலக அளவில் மருந்து கம்பெனி தொழிற்சாலைகளினால் தற்போது நமது விவசாயிகளும் குளோரியோசா சூபர்பா என்றே அழைக்கின்றனர்.

குளோரியோசா விவாசயத்தைப் பொறுத்தவரை சராசரியாக ஏக்கருக்கு 100 கிலோ மகசூல் கிடைக்கும். ஆனால் நமது விவசாயிகள் 500 கிலோவுக்கு குறையாமல் விதைகள் எடுக்கமுடிவதாக தெரிவிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் கிலோ ஒன்றுக்கு ரூ.250 லிருந்து தற்போது ரூ. 3,430 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.

சும்மா சொல்லக்கூடாது, உண்மையிலேயே குளோரியோசா சூப்பர் பா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x