Last Updated : 15 Sep, 2018 07:54 AM

 

Published : 15 Sep 2018 07:54 AM
Last Updated : 15 Sep 2018 07:54 AM

வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கு குறித்து ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பில் மாற்றம்: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்குகளில் யாரையும் கைது செய்யக் கூடாது என்று ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பில் மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருமணமான பெண்களுக்கு புகுந்த வீட்டில் கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களால் வரதட்சணை கொடுமை ஏற்படும்போது, அதை எதிர்த்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498ஏ-ன் கீழ் புகார் தெரிவிக்க முடியும். இப்பிரிவின் கீழ் புகார் தெரிவிக்கும்போது கணவன் மற்றும் அவரது பெற்றோர், உறவினர்களை உடனே கைது செய்து விசாரிப்பது வாடிக்கை. இதில் பொய் புகார்கள் கூறப்படுவதாகவும் கணவன் வீட்டார் கொடுமைக்கு உள்ளாவதாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக ராஜேஷ் சர்மா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் அமர்வு கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், வரதட்சணை புகார்கள் வரும்போது கணவன் மற்றும் அவரது பெற்றோரை தன்னிச்சையாக கைது செய்யக் கூடாது. உரிய அதிகாரி மூலம் விசாரணை நடத்தி உண்மை இருந்தால் மட்டுமே கைது செய்ய வேண்டும்.

மேலும், நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்குகளை பரிசீலிக்க குடும்ப நல கமிட்டிகளை அமைக்க வேண்டும். இக்குழு விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும். அதுவரை பிரிவு 498ஏ-ன் கீழ் யாரையும் கைது செய்யக் கூடாது. வெளிநாடுகளில் இருக்கும் கணவன் வீட்டாருக்கு இயந்திரத்தனமாக சிகப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடக்கூடாது போன்ற பல உத்தரவுகளை பிறப்பித்திருந்தனர்.

இந்த உத்தரவு பெண்கள் அமைப்புகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்புக்கு எதிராக 16 பெண்கள் அமைப்புகள் இணைந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தனர். ‘நியாயதார்’ என்ற தொண்டு நிறுவனம் உள்ளிட்ட பெண்கள் அமைப்புகள் சார்பில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு ஏற்புடையதல்ல. சட்டத்தில் உள்ள இடைவெளியை நீதிமன்றங்கள் நிரப்ப முடியாது. மாவட்டந்தோறும் குடும்பநல கமிட்டி அமைக்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் அறிக்கை அளிக்கும்வரை கைது செய்யக் கூடாது என்ற உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. சமரசம் ஏற்படும்போது குற்றவியல் நீதிமன்றங்கள் வழக்குகளை ரத்து செய்யலாம் என்ற உத்தரவில் மாற்றம் செய்கிறோம். அதாவது, வழக்கில் சமரசம் ஏற்பட்டால் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று வழக்குகளை ரத்து செய்யலாம்.

நேரடியாக ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தாமல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கலாம், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட்டை முடக்க சிகப்பு நோட்டீஸ் வழங்கும் நடைமுறையை இயந்திரத்தனமாக உத்தரவிடக் கூடாது போன்ற உத்தரவுகள் நீடிக்கும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x