Published : 31 Aug 2018 05:01 PM
Last Updated : 31 Aug 2018 05:01 PM

காவிரியில் கூடுதல் நீரைத் திறந்த கர்நாடகம்; 2019-ல் தமிழகத்துக்கு தண்ணீர் தருமா?

இந்தாண்டு மட்டும் மேட்டூர் அணை தன் முழு கொள்ளளவான 120 அடியை நான்கு முறை எட்டியுள்ளது, அதுவும் மூன்றே மாதங்களுக்குள். அதுமட்டுமல்லாமல், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது. ஆனால், இன்னும் திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க அதிகரிக்க தொடர்ந்து காவிரியில் நீர் திறக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பவானி ஆற்றின் வெள்ளப்பெருக்கும் கல்லணையிலிருந்து முழுவதுமாகக் கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்டது. ஆனாலும், கடைமடைக்குத் தண்ணீர் சென்று சேரவில்லை. இதனால், கடைமடை விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய முடியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க உச்ச நீதிமன்றம் ஓர் ஆண்டுக்கு தமிழகத்துக்கு திறந்து விட உத்தரவிட்ட அளவை விட கூடுதலாக 133.3 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. ஆனால், கடந்த மூன்று மாதங்களில் கர்நாடகா 87.3 டிஎம்சி நீரை மட்டுமே திறந்து விட்டிருக்க வேண்டும். அதாவது, ஜூன் மாதத்தில் 9.2 டிஎம்சி, ஜூலையில் 31.9 டிஎம்சி, ஆகஸ்ட் மாதத்தில் 46.1 டிஎம்சி என்ற அளவிலே நீர் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு வெள்ளம் காரணமாக அணைக்கு வந்த உபரி நீரை எல்லாம் தமிழகத்துக்கு திறந்து விட்டது.

எந்த வாய்க்காலையும் தூர்வாராமல் தண்ணீரை திறந்து விட்டதன் விளைவால் 100 டிஎம்சி நீர், கொள்ளிடத்திற்குச் சென்று கடலில் கலந்துள்ளது.

ஓர் ஆண்டுக்குள் திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடகா மூன்றே மாதங்களுக்குள் திறந்து விட்டிருக்கிறது. இப்போது மிக இயல்பாக ஒரு கேள்வி எழுகிறது. குறுகிய காலத்திற்குள் அதிக அளவு தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டதால், அடுத்தாண்டு இதனைக் காரணம் காட்டி உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட நீரைத் திறக்க முடியாது என்றோ, அல்லது தண்ணீரின் அளவைக் குறைத்து தருகிறோம் என்றோ கர்நாடக அரசு கூற முடியுமா? என்பதுதான் அந்தக் கேள்வி.

பல மாநிலங்கள் சம்பந்தப்பட்ட காவிரி நீருக்கு எந்தவொரு மாநிலமும் முழு உரிமை கோர முடியாது. அணைகளில் நீர் இருப்பு, அணைகள் மேற்பார்வை, கொள்ளளவு, மழையின் அளவு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு காவிரி மேலாண்மை ஆணையமே நீர் திறப்பு குறித்து முடிவு செய்ய வேண்டும். ஆனால், கடந்த கால காவிரி பிரச்சினை வரலாற்றில் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை கர்நாடக அரசு உடனடியாக செயல்படுத்தாமலோ, அல்லது அந்த உத்தரவுகளை கடைசிவரை செயல்படுத்தப்படாமலேயே இருந்ததற்கான ஆதாரங்கள் ஏராளம்.

 உதாரணமாக, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கடைசி வரை உறுப்பினரை அறிவிக்காமல் இருந்தது, காவிரி மேலாண்மை ஆணையத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது உள்ளிட்டவற்றைச் சொல்லலாம்.

அதிக அளவு நீர் திறக்கப்பட்டதைக் காரணம் காட்டி கர்நாடகம் அடுத்தாண்டு தண்ணீர் தருவதில் சிக்கல் ஏதேனும் ஏற்படுமா என்ற கேள்வியை பூவுலகு நண்பர்கள் அமைப்பை சேர்ந்த வெற்றிச்செல்வனிடம் எழுப்பினோம். அதற்கு, “உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நடக அரசு அப்படிச் சொல்ல முடியாது. ஒவ்வொரு பருவத்திற்கும் குறைந்தபட்சம் குறிப்பிட்ட தண்ணீரை வழங்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சிக் காலத்தில் எப்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதை கணக்கிட்டு காவிரி மேலாண்மை ஆணையம் தான் அதனை முடிவு செய்யும். அதனால், கூடுதலாக தண்ணீர் கொடுத்து விட்டோம் என்ற வாதத்தை கர்நாடகா முன்வைக்க முடியாது. ஆனால், காவிரி விவகாரத்தில் முந்தைய உதாரணங்களின்படி பார்த்தால், அப்படிப்பட்ட வாதங்களை கர்நாடக அரசு வைக்கக்கூடும்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவு மழை பெய்து உபரிநீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளதால், இந்தாண்டு மேலாண்மை ஆணையம் எந்தவொரு பிரச்சினையையும் சந்திக்கவில்லை எனலாம். கர்நாடக அரசுக்கு தனது அணைகளிலிருந்து உபரி நீரை காவிரியின் தாழ்நிலப் பகுதிகளுக்குத் திறந்து விடுவதில் எந்தவொரு சிக்கலும் ஏற்படவில்லை. வறட்சிக் காலங்களில் தான் காவிரி மேலாண்மை ஆணையம் முக்கியமான பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வறட்சிக் காலங்களில் குறைந்த அளவு நீரை தீர்ப்பின்படி மாநிலங்களுக்கு பகிர்வதில்தான் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கடுமையான சவால் உள்ளது.

வறட்சிக் காலத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் எப்படிச் செயல்படப் போகிறது என்பதுதான் முக்கியமான கேள்வி. இப்போது அதிகமான மழை பெய்திருப்பதால் தமிழகத்திற்குப் பிரச்சினை இல்லை. மழையின் வரத்தைக் கணக்கிட்டு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது தீர்ப்பு. ஆனால், இப்போது பருவநிலை மாற்றங்களால் மழையின் தன்மை மாறிவிட்டதே. தீவிர பருவநிலை நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. அதனால், பருவமழை அளவையோ, வறட்சி-வெள்ளம் போன்ற பேரிடர்களையோ அறுதியிட்டுக் கூற முடியாது. அதனால், வறட்சிக் காலத்தில் காவிரி பிரச்சினையில் மேலாண்மை ஆணையம் எவ்வாறு செயல்படும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்றார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

வறட்சி போன்ற காலகட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீட்டில் மேலாண்மை ஆணையம் எடுக்கும் முடிவில் மாநிலங்களுக்கிடையே முரண் ஏற்பட்டால், மத்திய அரசிடம் தான் செல்ல வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பொறியாளர் கோ.சுந்தர்ராஜன் இதுகுறித்து கூறும்போது, “அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதை காரணம் காட்டி கர்நாடக அரசு அடுத்தாண்டு தண்ணீர் திறக்க மாட்டோம் எனக் கூற முடியாது. அதிகமாக திறக்கப்பட்ட தண்ணீர் கணக்கில் வராது. சட்டப்படி அப்படிச் சொல்ல முடியாது.

உச்ச நீதிமன்றம் சொல்வதை கர்நாடக அரசு எப்போதும் கேட்காது என்பதால், இதைக் காரணம் காட்டி பிரச்சினையை உருவாக்குவதற்கான வாய்ப்பிருக்கிறது. அதற்காகத் தான் காவிரி மேலாண்மை ஆணையம் மேட்டூர் அணை உள்ளிட்ட ஒட்டுமொத்த அணைகளையும் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அதிகாரம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

தீவிர பருவநிலை, முன்கூட்டியே கணிக்கப்பட முடியாத வறட்சி-வெள்ளம் இவற்றை கருத்தில்கொண்டு தமிழக அரசு சில முன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

காவிரி நீர்ப்பாசன திட்டத்தில் வரத்து கால்வாய், போக்கு கால்வாய் என மொத்தம் 29 ஆயிரம் மைல் கால்வாய்கள் உள்ளன. அவற்றுள் காவிரியால் மட்டுமே நிரப்பப்படக்கூடிய 900-க்கும் மேற்பட்ட கால்வாய்கள் உள்ளன. காவிரி டெல்டாவில் அதிக அளவில் மணல் எடுக்கப்பட்டு வாய்க்காலை விட நிறைய இடங்களில் ஆறு கீழாக இருக்கிறது. பின்பு எப்படி வாய்க்காலில் தண்ணீர் போகும்?

 இப்பொழுதும் தமிழக அரசு தாமதிக்காமல் தமிழகத்திற்கு அக்டோபரில் பருவமழைக்கு முன்பாக, நீர்நிலைகளை தூர்வாரினால் கொஞ்சமாவது தண்ணீரை மிச்சப்படுத்த முடியும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்வது போல் 50-60 தடுப்பணைகளைக் கட்டுவதற்கான இடம் எங்கிருக்கிறது? வாய்க்காலை தூர்வாரி தண்ணீரை மிச்சப்படுத்தும் போதுதான் எவ்வளவு தடுப்பணைகள் தேவையிருக்கிறது என்பதையே கண்டறிய முடியும்'' என்றார் சுந்தர்ராஜன்.

அதிக அளவு மழையினால் காவிரி பெருக்கெடுத்து ஓடும்போது கர்நாடக-தமிழக அரசுகள் அமைதியாக இருப்பதும், வறட்சியின்போது விவசாயிகள் கண்ணீரும் போராட்டமுமாக இருப்பதே கடந்த கால வழக்கமாக இருந்திருக்கிறது. இந்தாண்டு அதிக அளவு மழை பெய்தது போன்று, அடுத்தாண்டும் பெய்யும் எனக் கூற இயலாது. அதனால், அடிப்படையாக நீர்நிலைகள் தூர்வாரும் பணியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அடுத்ததாக, சாத்தியமுள்ள பகுதிகளில் தேவை ஏற்படின் தடுப்பணைகளைக் கட்ட வேண்டும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x