Published : 26 Jul 2018 08:08 AM
Last Updated : 26 Jul 2018 08:08 AM

லாக்கப் மரணத்துக்கு காரணமான 2 போலீஸாருக்கு தூக்கு தண்டனை: கேரளாவில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு; நீதி பெற அயராது போராடிய பாசத்தாய்!

லாக்கப் மரணம் தொடர்பாக திருவனந் தபுரம் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கில் இரு போலீஸாருக்கு தூக்குத்தண்டனையும், 2 ஓய்வுபெற்ற எஸ்.பி.க்கள் உட்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் கீழாரன்னூர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் கடந்த 2005 செப்டம்பர் 27-ம்தேதி மதியம் அவரது நண்பர் சுரேஷ்குமாருடன் திருவனந்தபுரம் ஸ்ரீகண் டேஸ்வரன் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். திருட்டு வழக்குகளில் தொடர்புடைய சுரேஷ்குமாருடன் இருந்த தால் அவரோடு சேர்த்து சந்தேகத்தின் பேரில் உதயகுமாரையும் போர்ட் காவல் நிலையத்துக்கு அங்கு வந்த போலீஸார் ஜிதுகுமார், ஸ்ரீகுமார் ஆகியோர் அழைத்துச் சென்றனர்.

உதயகுமார் தனது தாயார் பிரபாவதி அம்மாவிடம் இருந்து ஓணம் பண்டிகைக்கு புதுத்துணிகள் எடுப்பதற்காக வாங்கிய பணம் 4000 ரூபாயை வைத்திருந்தார். ஆனால் இந்தப் பணத்தை எங்கே இருந்து திருடினாய் என காவல் நிலையத்தில் வைத்து உதயகுமாரை அடிக்கத் துவங்கி னர். அந்த நான்காயிரம் ரூபாயும் தான் கொடுத்தது என்று பிரபாவதி அம்மா உறுதியோடு போராடினார். ஆக போலீஸாருக்கு தலைவலியானதே அந்த 4000 ரூபாய் தான்!

போலீஸார் உதயகுமாரை ஒரு டேபிளின் மீது படுக்கவைத்து, அவரது தொடைப் பகுதியில் இரும்பு உருளைகளை வைத்து உருட்டியுள்ளனர். இதில் இரத்தநாளங்கள் வெடித்து உயிர் இழந்துள்ளார் உதயகுமார்.

‘உருட்டி கொல்லல்’ என்றே கேரளத்தில் இவ்வழக்கு பேசப்படுகிறது. காவலர்கள் ஜிதுகுமார், ஸ்ரீகுமார் ஆகியோர் முதல் இரண்டு குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்கள் இருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்ததோடு, தலா இரண்டு லட்ச ரூபாயை பிரபாவதி அம்மாவுக்கு வழங்கவேண்டும் எனவும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நாசர் தீர்ப்பளித்தார். இதேபோல் சாட்சிகளை கலைத்தல், பொய் ஆவணங்களை உருவாக்குதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக ஓய்வுபெற்ற எஸ்.பி.க்கள் டி.கே.ஹரிதாஸ், ஷாபு, டி.எஸ்.பி அஜித்குமார் ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது ஹரிதாஸ் உதவி ஆணையராகவும், ஷாபு சர்க்கிள் இன்ஸ்பெக்டராகவும் இருந்தனர்.

2005-ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி இரவு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு காவலர்கள் உதயகுமாரை அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். உடனே போலீஸார் கோட்டாட்சியர் கே.வி.மோகன்குமாருக்கு விசாரணையின்போது நெஞ்சுவலியில் உதயகுமார் இறந்துவிட்டதாக தெரிவிக்க, உடனே அரசு மருத்துவமனைக்கு சென்றார் மோகன்குமார். அங்கு மேல்சட்டை இல்லாமல் வேட்டி மட்டும் கட்டிய நிலையில் கிடந்தி வைக்கப்பட்டிருந்தார் உதயகுமார். சந்தேகத்தின் அடிப்படையில் மோகன்குமார் வேட்டியை தூக்கி பார்த்துள்ளார்.

அப்போது தொடைப்பகுதியானது பீட்ரூட் நிறத்தில் சிவந்திருந்தது. உடனே போலீஸார் இது ‘சோரியாசிஸ்’ தொட்டுவிடாதீர்கள் என சொல்லி சமாளித்தனர். ஆனால் மோகன்குமார் தொட்டுப் பார்த்தார். என்ன செய்து வைத்திருக்கீறீர்கள்? என்று கேட்ட அவரின் ஆவேசமே இவ்வழக்கின் திருப்புமுனை. பிரேதப் பரிசோதனையின் போது வீடியோ எடுக்கவும், சிறப்பு மருத்துவர்குழு மூலம் பிரேதபரிசோதனை செய்யவும் கோட்டாட்சியர் கே.வி.மோகன்குமார் உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக விரிவான அறிக்கையையும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பினார்.

2005-ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி உதயகுமார் கொலை செய்யப்பட்டார். செப்டம்பர் 30-ம் தேதி பிரேதப் பரிசோதனை முடிவில் கொலை என உறுதிபடுத்தப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி நெய்யாற்றாங்கரையை சேர்ந்த ஸ்ரீகுமார், வழுதக்காடு பகுதியை சேர்ந்த ஜிதுகுமார் ஆகியோர் காவல்துறை உயர்அதிகாரி மனோஜ் ஆப்ரகாம் முன்பு சரணடைந்தனர். அக்டோபர் 5-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அக்டோபர் 10-ம் தேதி மூன்று போலீஸார் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் நான்கே மாதங்களில் அவர்கள் மீண்டும் பணிக்கு வந்துவிட்டது தனிக்கதை! அப்போதிருந்தே நடந்த இவ்வழக்கில் 2006 பிப்ரவரி 13-ம் தேதி 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

2007 அக்டோபர் 17-ம் தேதி சிபிஐ முதல்கட்ட விசாரணையை தொடங்கியது. 2014 மே 12-ம் தேதி எஸ்.பி ஹரிதாஸ் 7ம் பிரதியாக சேர்க்கப்பட்டார். இதனிடையே கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் பிரபாவதி அம்மாவுக்கு பத்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க 2016 மார்ச் 31-ம் தேதி உத்தரவிடப்பட்டது. 2018ம் ஆண்டு மார்ச் 10ம்தேதி மூன்றாம் குற்றவாளி சோமன் இறந்தார். கடந்த ஜூலை 20-ம் தேதி சி.பி.ஐ வாதத்தை பூர்த்தி செய்தது. நேற்று முன்தினம் 5 பேர் குற்றவாளிகள் என கூறிய சிறப்பு நீதிமன்றம் நேற்று இருவருக்கு தூக்கு, மூவருக்கு மூன்றாண்டு சிறை என அதிரவைக்கும் தீர்ப்பு கூறியுள்ளது.

பிரபாவதி அம்மாவுக்கு ஒரே ஆறுதலாக இருந்தவர் மகன் உதயகுமார் தான். பிரபாவதியின் வாழ்க்கையே போராட்டக்களம்தான். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த பிரபாவதி அம்மா, பக்கத்து வீடுகளிலும், அருகிலுள்ள பள்ளியிலும் துப்புரவு பணி செய்துவந்தார். ஒரே மகனான உதயகுமாரை கருவில் சுமக்கும் போதே கணவர் தவிக்க விட்டு பிரிந்து சென்றுவிட்டார். ஒற்றை மகனையும் பறிகொடுத்த ஆக்ரோஷம் தான் தொடர்ச்சியான வழக்கு முன்னெடுப்புகள்.

தீர்ப்பு குறித்து பிரபாவதி அம்மா தி இந்துவிடம் கூறுகையில், “அப்பா பாசமே இல்லாம வளர்ந்த பையன். அன்னிக்கு பழைய இரும்பு சாமான் கடைக்கு போயிட்டு வர்ரேன்னு சொல்லிட்டுத்தான் போனான். பிணமாத்தான் வந்தான். எப்பவுமே சட்டை, பேண்ட் போட்டுகிட்டு நல்லா இருக்கான்னு என்கிட்ட வந்து கேட்பான். சாகப்போற அன்னிக்கும் கூட கேட்டான். அவனுக்கு நான் வேலைக்கு போறதே பிடிக்காது. அவனுக்குன்னு ஒரு வீடு கட்டணும்ன்னுதான் போயிட்டு இருந்தேன். அவன் இறந்ததுல இருந்து இதுவரை ஓணம் கொண்டாடுனது இல்லை. பக்கத்துல இருக்குற தேவி கோவில், நீதிமன்றம் இரண்டையும் தாண்டி எங்கையும் போனது இல்லை. என் குரல் அந்த கடவுளுக்கு கேட்டுருச்சு, தீர்ப்பு வர்றவரைக்கும் ஆயுசை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி. ஒரு தாயாக நிறைவாக இருக்கேன்” என்றார்.

சட்டப்போராட்டத்தின் வெற்றிக்கு வாழ்த்து கூறி இணைப்பை துண்டிக்கையில், ‘’தம்பி ஒரு நிமிஷம் மக்கள் வாழ்க்கையை பாதுகாப்பதுதான் காக்கிகளின் வேலை. சாவுக்கு முகவராக செயல்படுவது இல்லைன்னு நீதிபதி நாசரே சொன்னார். அதை போடுங்க..இன்னொரு தாய்க்கு இந்த நிலை வரக் கூடாது பாருங்க’’ என குரல் உடைகிறார் பிரபாவதி அம்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x