Last Updated : 20 Jul, 2018 11:02 AM

 

Published : 20 Jul 2018 11:02 AM
Last Updated : 20 Jul 2018 11:02 AM

வழிகாட்டிய அறிவுக் கண்: கல்லூரி முதல்வரான பார்வையற்றவர்

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார் க.வேலு. இவர் முற்றிலும் பார்வை இல்லாத மாற்றுத் திறனாளி. எம்எஸ்சி, எம்ஃபில், பிஎச்டி முடித்தவர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த பொன்னியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த வர் வேலு. இவருக்கு 2 வயது இருக்கும்போது, டைபாய்டு காய்ச்சலில் பார்வை பறிபோனது.

பார்வையை இழந்தாலும் படிப்பை இழக்க விரும்பாத வேலுவின் கல்விப் பயணம், கடலூரில் உள்ள பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப் பள்ளியில் தொடங்கியது. பின்னர் மேல்நிலைக் கல்வியை சென்னை பூந்தமல்லி பள்ளியில் முடித்தார். இதைத் தொடர்ந்து சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் பிஏ தமிழ் பட்டப் படிப்பையும், முதுநிலை படிப்பையும் முடித்து அங்கேயே இணை பேராசிரியராக பணியாற்றத் தொடங்கினார்.

தொடர்ந்து விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றியவர், தற்போது விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

இவரது மனைவி முத்துலட்சுமியும் பார்வையற்றவர். இவர் தற்போது குன்றத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். மாணவர்களுக்கு கல்வி போதிப்பதில் தம்பதியருக்கு கனப்பொருத்தம்.

முதல்வர் வேலுவை சந்தித்தோம். அவர் நம்மிடம் கூறும்போது, “மிகவும் பின்தங்கிய கிராமமான எங்கள் கிராமத்துக்கு, நான் இந்த நிலைக்கு உயர்ந்திருப்பது தெரியாது. வாழ்வில் முன்னேற வேண்டுமானால், நாம் என்னவாக வேண்டும் என்ற விதையை ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டும். அப்போதுதான் அதற்கான ஈடுபாடும், முயற்சியும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதில் எனக்கு எந்தச் சிரமமும் இல்லை. வகுப்பு எடுக்கும்போது மாணவர்கள் கவனிக்கிறார்களா என்பதை அவர்களின் பதிலுரையில் இருந்தே புரிந்து கொள்வேன். என் வாழ்க்கை அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையோடுதான் வகுப்புகளை எடுப்பேன்” என்கிறார்.

மாணவர்கள் சிலர் கூறும்போது, “வேலு சார் வகுப்பில் சிறிது நேரம் உட்கார்ந்து கவனியுங்கள் என்று எங்களது பேராசிரியர்கள் கூறும் அளவுக்கு அவரது வகுப்புகள் இருக்கும். வகுப்பறைக்குள் உதாரணங்களுடன் அவர் பாடம் நடத்தும்போது எங்களை அறியாமலே பாடத்தின் மீது ஈர்ப்பு உண்டாகும். அவரது வகுப்பு ரசிக்கும்படியாக மட்டுமல்லாமல் உத் வேகமும், தன்னம்பிக்கையும் அளிக்கின்ற வகை யில் இருப்பதால் அவரது வகுப்பை நாங்கள் எப்போதும் தவறவிட மாட்டோம்’’ என்கின்றனர்.

பார்வை இல்லை என்றாலும் எண்ணியதை அடைய வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை கொண்டவராக இருக்கிறார். இலக்கை அடைய வேண்டும் என்பதில் குறிக்கோளுடன் உழைக்கும் யாருக்கும் வெற்றி நிச்சயம் என் பதற்கு உதாரணமாக நிற்கிறார்.

பார்வை இல்லாததுதான் குறையே தவிர, தன்னம்பிக்கை நிறைந்த மனிதராய் நமது பார்வைக்கு தெரிகிறார் வேலு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x