Last Updated : 11 Jul, 2018 09:24 AM

 

Published : 11 Jul 2018 09:24 AM
Last Updated : 11 Jul 2018 09:24 AM

ஒன்றாய் இணைந்தோம்... நன்றாய் செய்தோம்... ஒரே நாளில் ஆற்றில் நடைபாலம் அமைத்து இளைஞர்கள் சாதனை

டலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது ஜெயங்கொண்டபட்டினம் கிராமம். பழைய கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள இக்கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.

பழைய கொள்ளிடம் ஆறு மற்றும் புதிய கொள்ளிடம் ஆறுகளின் நடுவே தீவு போன்ற சில கிராமங்கள் உள்ளன. அவை அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலபாடி, திட்டுக்காட்டுர் ஆகிய கிராமங்களாகும். இக்கிராமங்களில் சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த 3 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆற்றின் மற்றொரு புறத்தில் உள்ள ஜெயங்கொண்டபட்டினம் கிராம பள்ளியில் படித்து வருகின்றனர். நாள்தோறும் பள்ளிக்குச் செல்ல ஆற்றுத் தண்ணீரில் இறங்கி சென்று வந்தனர். வேறு வழியாகச் செல்ல வேண்டும் என்றால் சுமார் 5 கிமீ தூரம் சுற்றி நடந்து செல்ல வேண்டும். நீண்ட தூரம் நடந்து செல்வது மாணவர்களுக்கு சிரமமாக இருப்பதால் தினமும் ஆற்றில் இறங்கியே செல்லும் அவல நிலைக்கு இப்பகுதி மாணவர்கள் தள்ளப்பட்டனர். தொடர்ந்து வைக்கப்பட்ட கோரிக்கைகளால் ஆற்றை கடந்து அக்கரைக்கு செல்ல சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் அப்பகுதியில் சிறிய நடைபாலம் ஒன்று கட்டப்பட்டது. கட்டப்பட்டு 3 ஆண்டுகளில் ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக இந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

அன்று முதல் கடந்த 7 ஆண்டுகளாக இந்த கிராமங்களில் இருந்து ஜெயங்கொண்டபட்டினம் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் ஆற்றில் இறங்கித்தான் சென்று வருகின்றனர். இதுபோல் அக்கரைக்குச் செல்லும் பொதுமக்களும் ஆற்றில் இறங்கியே சென்று வந்தனர். தண்ணீர் அதிகமாக ஓடும் நேரங்களில் பள்ளி மாணவர்களை பெற்றோர் தூக்கிக் கொண்டு அக்கரைக்குச் செல்லும் அவலமும் நீடித்து வந்தது.

ஒன்று கூடிய இளைஞர்கள்

‘அரசையும், அதிகாரிகளையும் நம்பி பயனில்லை’ என முடிவெடுத்த இளைஞர்கள் தங்களுக்குள்ளேயே சுமார் 20 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து பாலம் கட்டும் பணியை தொடங்கி ஒரே நாளில் முடித்து விட்டனர். பழைய கொள்ளிடம் ஆற்றில் நேற்று முன்தினம் காலையில் திரண்ட கிராமத்து இளைஞர்கள், ஆற்றில் பழைய நடைபாலம் இருந்த இடத்தில் சிமெண்டால் ஆன பில்லர்களை அமைத்து, அதன்மேல் மூங்கில் கழிகளால் 4 அடி அகலத்தில், 75 அடி நீளத்துக்கு நடைபாலத்தை கட்டத் தொடங்கினர். ஆர்வத்துடனும், சுறுசுறுப்புடனும் பணிகள் நடந்ததால் காலையில் தொடங்கிய நடைபாலம் கட்டும் பணிகள் மாலையிலேயே முடிவடைந்தன.

கிராமங்களுக்கிடையே நடைபாலம் கட்டும் பணிக்காக இளைஞர்களை ஒன்றிணைத்த இளைஞர் ரகுராமன் கூறும்போது, “கடந்த 7 ஆண்டுகளாக இங்கு பாலம் கட்டச் சொல்ல வலியுறுத்தி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. அதனால் கிராம இளைஞர்கள் ஒன்று திரண்டு பாலம் கட்டியுள்ளோம்” என்றார். இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை இவர்கள் உணர்த்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x