Last Updated : 23 Jun, 2018 10:02 AM

 

Published : 23 Jun 2018 10:02 AM
Last Updated : 23 Jun 2018 10:02 AM

தங்க வேட்டை: சாதித்த கூலி தொழிலாளி மகன்

வறுமை போன்ற பெருந்தடைகளைத் தாண்டி வெகுசிலரால் மட்டுமே சாதிக்க முடிகிறது. அவர்களில் ஒருவர்தான் கோவை சோமனூரைச் சேர்ந்த கே.கமல்ராஜ். விசைத்தறி கூலித் தொழிலாளி கனகராஜ், விஜயலட்சுமி தம்பதியரின் மகன். வறுமைதான் வாழ்க்கை என்றாலும் சாதிக்க வறுமையை படிக்கல்லாக்கி தங்கத்தை தட்டிப் பறித்திருக்கிறார் கமல்ராஜ். ஆமாம். கடந்த ஜூன் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஜப்பானில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டி மும்முறை தாண்டுதல் பிரிவில் 15.75 மீட்டர் தாண்டியதில் தங்கப்பதக்கம் இவரைத் தேடி வந்தது.

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே உள்ளூர் போட்டிகளில் சாதித்ததன் விளைவாக கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில், விளையாட்டு இட ஒதுக்கீட்டில் இலவச கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றார். தற்போது 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகளப்போட்டியில், 16.05 மீட்டர் மும்முறை தாண்டி தங்கம் வென்றார். இதன்மூலம் கடந்த 2016-ல் ஹரியானா வீரர் தீரஜ்குமார் 15.74 மீட்டர் மும்முறை தாண்டி நிகழ்த்திய சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஈரானில் நடைபெற்ற ஆசியன் இண்டோர் தடகளப் போட்டியில் 16.23 மீட்டர் மும்முறை தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். இது இந்தியாவின் தேசிய சாதனையாகும்.

அதே மாதத்தில் இந்தோனேஷியாவில் நடைபெற்ற டெஸ்ட் ஆசியன் விளையாட்டுப் போட்டியில், 15.93 தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஜனவரி மாதம் குண்டூரில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழக தடகளப் போட்டியில் 15.92 மீட்டர் தாண்டி தங்கமும், கடந்த ஏப்ரல் மாதம் கோவையில் நடைபெற்ற தேசிய தடகளப்போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் குண்டூரில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் தடகளப்போட்டியில் 16.41 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார். உள்நாட்டு போட்டிகளான தேசிய, மாநில மற்றும் மாவட்ட போட்டிகள் அனைத்திலும் தங்கம் வென்றதே அதிகம் என நீள்கிறது கே.கமல்ராஜின் சாதனைப் பட்டியல்.

மாணவர் கமல்ராஜ் நம்மிடம் கூறியதாவது: கோவை அச்சீவர்ஸ் அத்லெடிக் கிளப்பில், முகமது நிஜாமுதீனிடம் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். தடகளத்தில் மும்முறை தாண்டும் வீரராக உள்ளேன். ஜூனியர் பிரிவில் ஆசிய அளவில் முதலிடத்திலும் சர்வதேச அளவில் 7-வது இடத்திலும் உள்ளேன்.

வரும் ஜூலை மாதம் சர்வதேச அளவிலான தடகளப்போட்டி பின்லாந்தில் நடைபெறுகிறது. அதில் தங்கம் வெல்ல வேண்டும் என்று கடினமாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். நிச்சயம் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன். என்னுடைய சாதனைகளுக்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர், பயிற்சியாளர், கல்லூரி நிர்வாகம் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பயிற்சியாளர் முகமது நிஜாமுதீன் கூறும்போது, ‘வீரர், வீராங்கனைகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சென்று விளை யாட மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி அளித்து உதவுகின்றன. அதனால் தான் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களாலும் நாடு விட்டு நாடு சென்று சாதிக்க முடிகிறது. சர்வதேச அளவில் இந்திய வீரர்களை உருவாக்குவது அவசியம்.

வரும் ஜூலையில் நடைபெறவுள்ள ஆசிய தடகளம், 2020-ல் ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நாட்டின் தலைசிறந்த தடகள வீரர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு திருவனந்தபுரத்தில் பயிற்சி அளிக்க உள்ளோம். வரும் காலங்களில் இந்திய தடகள அணியில், தமிழக வீரர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்’ என்றார் நம்பிக்கையுடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x