Last Updated : 15 Jun, 2018 09:49 AM

 

Published : 15 Jun 2018 09:49 AM
Last Updated : 15 Jun 2018 09:49 AM

‘பிக் பாஸ் 2’ வீட்டில் ஒருநாள்: செய்தியாளரின் நேரடி அனுபவம்

காலை 7 மணி

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் விஜய் டிவி அலுவலகத் தில் இருந்து தொடங்கியது நாள். என்னையும் சேர்த்து மொத்தம் 15 இதழியலாளர்களுடன் பூந்தமல்லி அடுத்துள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டி நோக்கிப் புறப்பட்டது வேன். கடந்த வருடமே பிக் பாஸ் வீட்டில் ஒருநாளைக் கழித்த 4 மூத்த பத்திரிகையாளர்கள், டிவியில் நிகழ்ச்சியைப் பார்த்து, ‘விமர்சித்த’ என்னைப் போன்ற பத்திரிகையாளர்கள், ‘ஆக்சுவல்லி, பிக் பாஸ்னா என்ன புரொகிராம்?’ என்ற ரகத்தைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளர்கள்.. இப்படி பலதரப்பட்டவர்கள் இருப்பது புரிந்தது.

காலை 8 மணி

‘காலா’வுக்காகப் போட்ட தாராவி குடிசை செட் உட்பட ஆங்காங்கே பலவற்றை அவதானித்தபடி பல ஏக்கரில் விரிந்திருந்த ஃபிலிம் சிட்டிக்குள் நுழைந்தோம். செல்ஃபிக்கு பிறகு, பரஸ்பரம் அறிமுகமானோம்.

‘என்டமால்ஷைன் இந்தியா’ நிறுவனத்தின் பிக் பாஸ் தயாரிப்புக் குழுவினர் எங்களை வரவேற்று காலை சிற்றுண்டி அளித்து, ஒரு அறையில் உட்காரவைத்தார்கள். “யாருக்காவது போன் பேசணுமா? மெசேஜ் அனுப்பணுமா? டூ மினிட்ஸ் டைம்” என்று அறிவித்தனர். மிகச்சரியாக ‘டூ மினிட்ஸில்’ எங்களது செல்போன், கைக்கடிகாரம், பத்திரிகையாளரின் கவச குண்டலமான பேனா - நோட்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

‘கலந்துக்கிறவங்களுக்குதானே இந்த ரூல்ஸ். சும்மா பார்த்துட்டுப் போக வந்த எங்களுக்குமா? செல்போன் இல்லாம எனக்கு கிறுக்கு பிடிச்சிடும்’ என்று ஒரு செய்தியாளர் புலம்பியதை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

அடுத்து, உடைமைகள் சோதனை படலம். நீட் தேர்வு சோதனையே தேவலாம் என்று ஆகிவிட்டது. எங்களது அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொண்டனர். சக பத்திரிகையாளரின் மாத்திரை உட்பட. “உங்களது மாத்திரையை நாளை காலை உள்ளே அனுப்பிடுவோம்”என்றார்கள்.

அடுத்ததாக, எங்கள் எல்லோருக்கும் எண்கள் கொடுக்கப்பட்டு, அந்த எண்கள் அச்சடிக்கப்பட்ட பெரிய ஸ்டிக்கர்கள் முதுகு, வயிறு, கைகளில் ஒட்டப்பட்டன. “நான் எண் அல்ல; மனிதர்” என்று நான் உரிமைக் குரல் எழுப்ப, ஆதரவுக் குரல் எழ, ஒருவழியாக ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டன.

பிறகு, ஒவ்வொருவருக்கும் மைக்குடன் கூடிய ஒரு பட்டை அணிவிக்கப்பட்டது. கழிப்பறைக்குச் செல்லும்போது, இரவு உறங்கும்போது தவிர மற்ற நேரத்தில் மைக்கை கழற்றக்கூடாது என்று நிபந்தனை விதித்தனர்.

ஸ்டிக்கர் சண்டையில் குதித்ததாலோ, என்னமோ.. எடுத்த எடுப்பில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய நானும் இன்னும் இருவரும் அழைக்கப்பட்டோம். கண்களைக் கட்டி அழைத்துச் செல்லப்பட்டோம். கட்டு அவிழ்க்கப்பட்டபோது, நீண்ட பச்சைப் பசேல் புல்வெளியைத் தாண்டி பிரம்மாண்டமாகத் தெரிந்தது பிக் பாஸ் வீடு.

டிவியில் மட்டுமே பார்த்த அந்த வீடு, நேரில் பார்க்க பிரமிப்பாக இருந்தது. வீடு முழுக்க ஒளிவிளக்குகளும் 60-க்கும் மேற்பட்ட கேமராக்களும் என்னையே உற்றுப் பார்ப்பதுபோல தோன்றியது. ‘பிக் பாஸ் 1’ வீட்டில் இருந்து இந்தப் புதிய பிக் பாஸ் வீட்டை வேறுபடுத்திக்காட்ட, கண்கவர் உள்வடிவமைப்புகள் செய்யப்பட்டிருந்தன. பிரதான கூடத்தில் பளீர் மஞ்சளில் சோபா செட். இளஞ்சிவப்பு வண்ணத்தில் சுவரில் மரங்கள், பட்டாம்பூச்சி ஓவியங்களுடன் ஒரு படுக்கை அறை ஒளிர்கிறது. வெறும் ஒரு கண்ணாடி கதவால் பிரிக்கப்பட்ட மற்றொரு படுக்கை அறை நீல நிறக் கண்கவர் உள்வடிவமைப்பில் அட்டகாசமாக இருக்கிறது. இரு அறைகளிலும் தலா 8 படுக்கைகள். 8 ஆண், 8 பெண் என 16 பேர் பங்கேற்கக்கூடும் என்பது தெரிகிறது.

வெளி உலகில் இருந்து வரும் வெவ்வேறு நபர்கள் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து குடும்பமாக இணைந்து வாழ்வதுதான் பிக்பாஸ் கான்செப்ட் என்று கமல்ஹாசன் அடிக்கடி சொல்வார். எல்லோரும் அப்படி ஒற்றுமையாக இருந்துவிட்டால், என்ன சுவாரசியம் இருக்கப்போகிறது! அதனால், பிரச்சினைகள், முரண்பாடுகள், மோதல்களை ஏற்படுத்தும் விதமாகப் பல்வேறு அம்சங்கள் பிக் பாஸ் வீட்டில் ஆங்காங்கே நிரம்பி வழிகின்றன.

சண்டை, சச்சரவுகள் வரத்தானே குடும்பத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது, பிடிக்காதவரை ‘எலிமினேட்’ செய்வது என்பதெல்லாம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

ஒரே ஒருநாள் தங்கிய எங்களுக்கு இடையிலும் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும்படியும், பிடிக்காதவரை அதற்கான காரணம் சொல்லி வெளியேற்றும்படியும் பிக்பாஸ் கட்டளையிட்டார்.

தமிழ்கூறும் நல்லுலகுக்கு பிக்பாஸ் கொடையான ‘கன்ஃபெஷன் அறை’க்கு போனேன். அதன் தோற்றத்திலும் புதிய மாற்றங்கள். அங்கு போய், ஒரே நாளில் எனக்குப் பிடிக்காமல்போன இருவரின் பெயர்களை உச்சரிக்கச் சொன்னார் பிக்பாஸ். கேட்டால் சொல்லித்தானே ஆகணும்! சொன்னேன்.

இந்த முறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான குளியலறையில் ஒரு பகுதியாக புகைப்பதற்கான அறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

முக்கியமான அதிர்ச்சி... வீட்டுக்கு வெளியே புல்வெளி பகுதியை ஒட்டிய நீச்சல்குளத்தின் அருகில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ‘ஜெயில்’. இரும்புக் கம்பிகளால் பூட்டப்பட்ட அறை. மெத்தை இல்லாத இரும்புக் கட்டில், ஒரு பெரிய குண்டு பல்பு. இரவானால் பூச்சி கள் மொய்க்கும் பகுதி. மின் விசிறியோ, கழிப்பறையோ கிடையாது. தண்டனைக்குரிய தவறு செய்பவர்கள் இங்கு அனுப்பப்படுவார்களாம்!

மறுநாள் காலை 10.30 மணி

இதுகூட, அவர்கள் சொல்லித்தான் தெரிந்தது. ஒருவழியாக, என்னை ‘ரிலீஸ்’ செய்தார்கள். வேலை வெட்டி இல்லாமல் சும்மா இருப்பவர்களை, வேலையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தொலைக்காட்சி வழியாகப் பார்க்க வைப்பதற்கு எப்படி எல்லாம் மெனக்கெட வேண்டி இருக்கிறது என்பதை இந்த ஒருநாள் ‘பிக்பாஸ் வீட்டு’ வாசம் நன்றாகவே புரியவைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x