Published : 01 Jun 2018 09:48 AM
Last Updated : 01 Jun 2018 09:48 AM

பிளஸ் 1 பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்தது ஏன்?

இந்த ஆண்டு முதல்முதலாக நடத்தப்பட்ட பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாணவர்களின் மதிப்பெண் குறைந்திருப்பது மாணவர்களை மட்டுமின்றி ஆசிரியர்கள், பெற்றோரை யும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பொதுத்தேர்வாக இருக்குமா? ஏற்கெனவே இருந்தது போல சாதாரண தேர்வாகவே இருக்குமா? என்று கடந்த டிசம்பர் மாதம் வரை நிலவிவந்த குழப்பம்.. முதல் பொதுத்தேர்வு என்பதால் மாணவர்கள், ஆசிரியர்கள் முழுமையாகத் தயாராகவில்லை.. இந்த இரண்டும் தான் மதிப்பெண் குறைவுக்கு முக்கிய காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு வரை சாதாரண வருடாந்திர தேர்வாக நடத்தப்பட்ட பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல்முறையாக பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. அதோடு ஒவ்வொரு பாடத்துக்கான மதிப்பெண்ணும் 200-ல் இருந்து 100 ஆக குறைக்கப்பட்டது. இதனால் பிளஸ் 1 மாணவர்கள் மொத்தம் 600 மதிப்பெண்ணுக்கு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த 30-ம் தேதி வெளியாகின.

மொத்தம் 36,380 மாணவர்கள் 500-க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளதாக அரசு தேர்வுத் துறை அறிவித்தது. அதாவது வெறும் 4 சதவீதம் பேர் மட்டுமே அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் பட்டியலில் வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் அதாவது 56 சதவீதம் பேர் சராசரி மதிப்பெண் எடுத்தே தேர்ச்சி பெற்றுள்ளனர். 201 முதல் 300 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கைதான் அதிகம் (29 சதவீதம்).

கடந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 500-க்கு 480-க்கு மேல் பெற்ற மாணவர்கள் பலரும் பிளஸ் 1 தேர்வில் 600-க்கு 575-க்கு மேல் வாங்கியிருக்க வேண்டும். ஆனால், 500-550 மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியலில்தான் இடம்பெற்றுள்ளனர்.

600-க்கு 500 என்றால், 1,200-க்கு என கணக்கிடும்போது, இவர்களை 1,000 மதிப்பெண் பெறுபவர்களாகவே கருத முடியும். ஆனால், வழக்கமாக பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1150-க்கு மேல் மதிப்பெண் பெறுவோர் எண்ணிக்கை அதிக மாக இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

‘‘எஸ்எஸ்எல்சி தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த பல மாணவர்கள் பிளஸ் 1 பொதுத் தேர்விலும் அதிக மதிப்பெண் பெறுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர்களது மதிப்பெண் குறைந்திருக்கிறது. பாஸ் ஆகிவிடுவார்களா? என சந்தேகப்பட்ட மாணவர்கள் பலரும் சராசரி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஆச்சரியமாகவும், குழப்பமாகவும் இருக்கிறது’’ என்று ஒருசில ஆசிரியர்கள் கூறினர்.

அதே நேரம், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்திருப்பதற்கு கல்வியாளர்கள் கூறும் காரணம் வேறுமாதிரியாக உள்ளது.

கடந்த ஆண்டு வரை பிளஸ் 1 தேர்வு சாதாரண தேர்வாகவே நடத்தப்பட்டது. பொதுவாகவே, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு எழுதிவிட்டு பிளஸ் 1-க்கு வரும் மாணவர்கள் பொதுத் தேர்வுக்கான மனஅழுத்தம் இன்றி ரிலாக்ஸாக இருப்பார்கள். இயல்பாகப் படிக்கும் அவர்கள் அடுத்த ஆண்டில் பிளஸ் 2 செல்லும்போது, பொதுத் தேர்வுக்காக கடுமையாக படிப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டதால் அடுத்தடுத்து 3 ஆண்டுகளும் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால், மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, அதனால் கூட அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்க லாம்.

தவிர, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கும் முறையான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை. கான்செப்ட், கீ-ஆன்சர், பாயின்ட்ஸ் என வெவ்வேறு அடிப்படையில் வினாத்தாளை திருத்தியுள்ளனர். இதனால்தான், நல்ல மதிப்பெண் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட மாணவர்களுக்கு மதிப் பெண் குறைந்துள்ளது. தேறுவது கடினம் என்ற நிலையில் இருந்த மாணவர்கள் ஓரளவு மதிப்பெண் பெற்று பாஸாகியுள்ளனர் என்பது அவர்களின் கருத்து.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் வெ.மணிவாசகன் கூறும்போது, ‘‘பிளஸ் 1-க்கு முதல்முறையாக பொதுத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு மட்டுமல்லாது, ஆசிரியர்களுக்கும் சரியான புரிதல் ஏற்படவில்லை. கேள்வித்தாள் எந்த முறையில் இருக்கும் என்பதுகூட தெரியாது. தவிர, இது பொதுத் தேர்வாக நடத்தப்படுமா, இல்லையா என்ற குழப்பமும் டிசம்பர் வரை நீடித்தது. ஓரிரண்டு ஆண்டுகள் சென்றால், சரியான புரிதல் உருவாகி, மாணவர்கள் இயல்பாக பொதுத் தேர்வை எதிர்கொள்ளத் தயாராகிவிடுவார்கள்’’ என்றார்.

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘பிளஸ் 1 மாணவர்கள் கடந்த ஆண்டு ‘புளு பிரின்ட்’ முறையிலான கேள்வித்தாள் அடிப்படையில் பொதுத் தேர்வு எழுதினர். ஆனால், பிளஸ் 1-ல் பாடத்திட்டம் பழையது. ஆனால், கேள்வித்தாள் முறை புதியது. புதிய கேள்வித்தாள் முறை என்பதாலும் அவர்களால் புதிய சூழலுக்கு உடனடியாக தயாராக முடியவில்லை.

வரும் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்புக்கு பாடத்திட்டமும் புதியது. கேள்வித்தாள் முறையும் புதியது. எனவே, இந்த ஆண்டு பிளஸ் 1-க்கு வரும் மாணவர்கள் நல்ல முறையில் பொதுத் தேர்வை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

பெற்றோர்கள் எதிர்பார்ப்பு

இந்த ஆண்டு முதல்முறையாக நடத்தப்பட்டுள்ள பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளது. இதன் தாக்கம் அவர்களின் மேற்படிப்பு தொடங்கி வேலைவாய்ப்பு வரை நீடிக்கும். எனவே, இந்த மாணவர்கள் அடுத்த ஆண்டு பிளஸ் 2 முடித்த பிறகு அவர்களுக்கு பிளஸ் 1 மதிப்பெண்களுடன் கூடிய ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்காமல் பிளஸ் 2 தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை 600-க்கு அல்லது அதை 1200-க்கு மாற்றி இறுதி மதிப்பெண் சான்றிதழாக வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித் துறை பரிசீலிக்கலாம்.

இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு புதிய கேள்வித்தாள் எப்படி இருக்கும் என்பது முதலிலேயே தெரிந்துவிடும். ஆசிரியர்களும் முதல் ஆண்டு அனுபவம் காரணமாக அதற்கு பரிச்சயமாகி இருப்பார்கள். எனவே, இனிவரும் மாணவர்களுக்கு புதிய முறையில் தேர்வு நடத்தி ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கலாம். முதல்முறையாக பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் விஷயத்தில் அரசு கொஞ்சம் கனிவு காட்ட வேண்டும் என்று பல மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x