Last Updated : 18 May, 2018 09:08 AM

 

Published : 18 May 2018 09:08 AM
Last Updated : 18 May 2018 09:08 AM

‘கிஸான் வாணி’: உழவர் குரலை ஒலிக்கும் வானொலி

நீ

ங்கள் கேட்டுக் கொண்டிருப்பது காரைக்கால் பண்பலை 100.3” என்ற வானொலிக் குரல் டெல்டா மாவட்டங்களின் மூலை முடுக்குகளில் எல்லாம் கேட்கிறது. நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும், தஞ்சை, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் நேயர்களின் குடும்பத்தில் ஒருவராக மாறி இருக்கிறது, அகில இந்திய வானொலியின் காரைக்கால் பண்பலை (100.3)

தென்னிந்திய அளவில் விளம்பர வருவாயில் முதல் இடத்தில் உள்ளதும் அதிகமான நேயர்களைக் கொண்டதும் இந்த வானொலிதான்.

மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் நேரடி நிதியுதவியுடன் விவசாயிகளுக்காக ஒலிபரப்பாகும் ‘கிஸான் வாணி’ (உழவர்களின் குரல்) நிகழ்ச்சி ஏகப் பிரபலம்.

‘கிஸான் வாணி’ நிகழ்ச்சிப் பிரிவு பொறுப்பாளர் ஆர்.வெங்கடேஸ்வரன் கூறியபோது, “மத்திய அரசின் வேளாண் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் நேரடி நிதியுதவியுடன் 2004 பிப்ரவரி முதல், நாட்டில் தேர்வு செய்யப்பட்ட 96 வானொலி நிலையங்களில் கிஸான் வாணி நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டு வருகிறது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 12 வானொலி நிலையங்களில் காரைக்கால், நாகர்கோவில் ஆகிய 2 வானொலி நிலையங்களுக்கு மட்டுமே இந்நிகழ்ச்சிக்கென மத்திய வேளாண் அமைச்சகத்தின் மூலம் நேரடியாக ஆண்டுக்கு ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

உழவர்களுக்கு தேவையான வானிலை அறிக்கை, பருவ காலத்துக்கேற்ற விவசாயப் பரிந்துரைகள், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை நிலவரம், சந்தை விலை, விவசாயிகளை அதிகமாக பங்கேற்கச் செய்வது உள்ளிட்ட சில வரையறைகளை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்படுகிறது. செவ்வாய்தோறும் கிராமங்களுக்குச் சென்று நேரடியாக வயல் வெளிகள் உள்ளிட்ட பகுதியில் இருந்து முன்னோடி விவசாயிகளை சந்தித்து அவர்களது அனுபவங்களை நேரலை நிகழ்ச்சியாக ஒலிபரப்புகிறோம்” என்றார்.

இவ்வானொலியின் விளம்பர வருவாய் சாதனை குறித்து மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றிய வி.ரமேஷ்பாபு கூறியபோது, “இந்த வானொலி நிலையம் கடந்த 3 ஆண்டுகளாக ஆண்டுக்கு சராசரியாக ரூ.2 கோடி விளம்பர வருவாய் ஈட்டியுள்ளது. உள்ளூர் வானொலி நிலையப் பிரிவில்(எல்ஆர்எஸ்), இந்திய அளவில் விளம்பர வருவாயில் முதல் இடத்தில் உள்ளது” என்றார்.

நிலைய உதவி இயக்குநர் ஜி.சுவாமிநாதன் கூறியபோது, “விளம்பர வருவாய்க்காக நிகழ்ச்சிகளின் தரத்தில் சமரசம் செய்து கொள்வதில்லை. விளம்பரதாரர்களுக்கேற்ற வகையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது என்பதைக் காட்டிலும், மக்களுக்கான சேவை என்ற நோக்கில், வானொலி நிலையத்தால் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்கே விளம்பரம் என்றே செயல்படுகிறோம்” என்றார்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள நாங்குடியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஜி.ஜீவானந்தம் கூறியபோது, “ஒரு விவசாயி, நெல் ஆராய்ச்சி நிலையத்துக்குச் சென்று விஞ்ஞானிகளை சந்தித்து சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் காரைக்கால் வானொலி, விஞ்ஞானிகள், வல்லுநர்களையும், விவசாயிகளையும் ஒருங்கிணைக்கிறது” என்றார்.

மயிலாடுதுறை அருகே உள்ள ஆனைமட்டம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எஸ்.குஞ்சிதபாதம் கூறியபோது, “நிகழ்ச்சிகள் சம்பிரதாயமாக இல்லாமல், விவசாயிகளின் தேவைக்கேற்ற வகையில் உயிரோட்டத்துடன் உள்ளன. நம்பகத்தன்மையும் இருக்கிறது” என்றார்.

காரைக்காலில் இந்த வானொலி நிலையம் அமைந்தது குறித்து காரைக்கால் சப்தஸ்வரம் இசைப் பேரவை செயலாளர் கே.கேசவசாமி கூறியபோது, “அகில இந்திய வானொலியின் துணைத் தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்ற ஷிண்டே, புதுச்சேரி வானொலி நிலைய இயக்குநர் அகிலா சிவராமன், அதிகாரிகள் உள்ளிட்டோரின் முயற்சியால் காரைக்கால் வானொலி நிலையம் தொடங்கப்பட்டது”என்றார்.

எத்தனையோ பண்பலைகள் பெருகிவிட்ட போதிலும், அவை வணிகமயமாகி, சினிமாவை முதன்மைப்படுத்தி விளம்பர வருவாய் பார்ப்பதிலேயே குறியாக இருக்கும் நிலையில், உழவர்களுக்காக இயங்கும் காரைக்கால் பண்பலை பண்புமிக்க அலையாகவே இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x