Published : 04 May 2018 07:42 AM
Last Updated : 04 May 2018 07:42 AM

ரூ.100 கோடி சொத்து சேர்த்த பியூன் கைது: நிலம், மனை, பங்களா ஆவணங்கள், நகைகள், சேமிப்பு பத்திரங்கள் பறிமுதல்

ஆந்திராவில் ரூ.100 கோடிக்கு சொத்து சேர்த்த போக்குவரத்து துறை பியூன் ஒருவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி (ஆர்டிஓ) அலுவலகம் உள்ளது. இங்கு கடைநிலை ஊழியராக (அட்டெண்டர்) பணியாற்றி வருபவர் நரசிம்மா ரெட்டி (55). இவர் சட்ட விரோதமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் 2 நாட்களாக நெல்லூரில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர், நண்பர்களின் வீடுகள் என ஒரே நேரத்தில் 6 இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் நரசிம்மா ரெட்டி 50.36 ஏக்கர் விவசாய நிலங்கள், 18 வீட்டு மனைகள் மற்றும் பெரிய பங்களா வாங்கியிருப்பதற்கான ஆவணங்கள் சிக்கின. மேலும் 2 கிலோ தங்க நகைகள், 7 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.7.70 லட்சம் ரொக்கம், ரூ.20 லட்சம் வங்கி சேமிப்பிற்கான ஆவணங்கள், ரூ.1.01 கோடி மதிப்பிலான எல்ஐசி காப்பீடு பத்திரங்கள் உள்ளிட்டவையும் சோதனையில் சிக்கின.

இதுதவிர நெல்லூர் கூட்டுறவு வங்கியில் உள்ள அவரது லாக்கரில் 2.5 கிலோ தங்க ஆபரணங்கள் இருப்பதும் தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.100 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நரசிம்மா ரெட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்திருப்பதும், அவர்களில் பலர் எம்எல்ஏக்களாக இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ரூ.40 ஆயிரம் ஊதியம் பெறும் நரசிம்மா, பதவி உயர்வு வந்தும் ஏற்காமல் 35 வருடங்களாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடைநிலை ஊழியர் இவ்வளவு சொத்து சேர்த்திருப்பது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்து நெல்லூர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர் படுத்தினர். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x