Last Updated : 24 Mar, 2018 09:45 AM

 

Published : 24 Mar 2018 09:45 AM
Last Updated : 24 Mar 2018 09:45 AM

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எட்டு மடங்கு எல்லை விரிவாக்கம் மக்கள் தேவைகளை நிறைவேற்றுமா?

தமிழகம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நகரமயமாகும் மாநிலமாக உள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழக மக்கள் தொகையில் 34.15 சதவீதம் பேர் நகரப் பகுதியில் வாழ்ந்தனர். இது 2011-ல் 48.45 சதவீதமாக உயர்ந்தது. வரும் 2026-ம் ஆண்டில் தமிழகத்தின் மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள் என கணிக்கப்படுகிறது.

மாநிலத்துக்குள்ளும் வேறு மாநிலத்தில் இருந்தும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகரித்து வருகின்றனர். அவர்களுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் சுகாதார சூழலுடன் சிறந்த குடியிருப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும், எரிசக்தி, தண்ணீர் மற்றும் நிலத்தையும் முறை யாக பயன்படுத்த வேண்டி இருக்கிறது.

இந்த பொதுவான விதி பெருநகரான சென்னைக்கும் பொருந்தும். சென்னை பெருநகர மும் தற்போது விரைவாக வளர்ச்சியடைந்தும் விரிவடைந்தும் வருகிறது. இதை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர் திட்டப்பகுதிக்கான சட்டரீதியான அமைப்பாக கடந்த 1975-ல் உருவாக்கப்பட்ட சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) திட்ட எல்லையும் விரிவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சென்னை பெருநகர மாநகராட்சி, 8 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 179 கிராமங்களை உள்ளடக்கி 1,189 சதுர கிமீ பரப்புக்கான திட்ட எல்லையை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கொண்டுள்ளது.

இந்நிலையில், கடந்தாண்டு சட்டப்பேரவை யில் வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவிப்பு ஒன்றை வெளி யிட்டார்.

அதில், சென்னை நகரில் ஏற்பட்டு வரும் மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்கவும் சென்னையைச் சுற்றி அதிவேகமாக நகர மயமாகி வரும் பகுதிகளில் ஏற்பட்டு வரும் வளர்ச்சிகளை ஒழுங்குபடுத்தவும் தேவை யான சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை உண்டாக்க வேண்டும். இந்த நோக்கத்துடன் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் வேலூரில் அரக்கோணத்தையும் உள்ளடக்கி 8,878 சதுர கிமீ அளவில் சென்னை பெருநகர திட்டப்பகுதியின் எல்லை விரிவாக்கம் செய்யப்படும். விரிவாக்கப்பகுதி முழுமைக்கும் மண்டல வியூகத்திட்டங்கள் தயாரிக்கப்படும். இத்திட்டங்களில் போக்குவரத்து, அடிப்படை உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வளமிக்க விவசாய நிலங்களை பாதுகாத்தல் போன்ற அம்சங்களுக்கு போதிய கவனம் செலுத்தப்படும்.

1709 கிராமங்கள் இணைப்பு

இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 22-ம் தேதி இதற்கான அரசாணையை, வீட்டுவசதித்துறை பிறப்பித்தது. அதில், வேலூர் மாவட்டத்தில் நெம்மிலி தாலுகாவும் இணைக்கப் பட்டது.

இதன்படி, தற்போது சென்னை பெருநகர திட்டத்தின் கீழ், கூடுதலாக திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள 532 கிராமங்கள் இணைகின்றன. வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் 69, நெமிலியில் 77 கிராமங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீ பெரும்புதூர், செங்கல்பட்டு, திருப்போரூர், உத்திரமேரூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், செய்யூர் ஆகிய 9 தாலுகாக்களின் கிராமங்களையும் சேர்த்து 1,709 கிராமங்கள் இணைக்கப்படுகின்றன. மேலும், அரசாணை வெளியிடப்பட்ட அன்றில் இருந்து 60 நாட்களுக்குள் அதாவது, மார்ச் 23-ம் தேதி வரை இந்த எல்லை விரிவாக்கம் தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளும் அரசாணையை மக்களுக்கு தெரிவித்து கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.

8 மடங்கு விரிவாக்கம்

வெறும் 1,189 சதுர கிமீயாக இருந்த சிஎம்டிஏவின் எல்லை ஏறத்தாழ 8 மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம் என்பது நேரடியாக பல்வேறு நன்மைகள் அளிப்பதாக தெரிந்தாலும் பல்வேறு சிக்கல்களையும் கொண்டுள்ளது என்கின்றனர் நகர வடிவமைப்பாளர்கள். அவர்கள், சிஎம்டிஏ உருவாக்கப்பட்டு கடந்த 45 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைத்துள்ளது. 1975-ல் முதலாவது மாஸ்டர் பிளான், 2008-ம் ஆண்டு இரண்டாவது மாஸ்டர் பிளான் போடப்பட்டது.

இவை மறுஆய்வு செய்யப்படவில்லை. மாஸ்டர் பிளான் அடிப்படையில் செய்ய வேண்டிய திட்டங்கள் முழுமை பெறவில்லை என்றும் அவர்கள் குற்றச்சாட்டுக்களை வைக்கின்றனர். சிஎம்டிஏ எல்லை தேவைக்காக விரிவுபடுத்தப்படுகிறதா அல்லது மற்ற மெட்ரோபாலிடன் சிட்டியைவிட சென்னையைப் பெரியதாக்கிக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் விரிவுபடுத்தப்படுகிறதா என்பதும் அவர்கள் கேள்வியாக உள்ளது.

மேலும், எல்லை விரிவாக்கம் செய்து வரியை உயர்த்தி, மக்கள் மீது நெருக்கடியை திணிப்பதாக இருக்கக் கூடாது. சிஎம்டிஏ எல்லை விரிவாக்கப் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு உயர்ந்துவிடும் அபாயம் உள்ளது என்றும் கட்டுமானத்துறையினர் தெரிவிக்கின் றனர்.

அரசுக்கே லாபம்

சிஎம்டிஏ விரிவாக்கத்தால் அரசுக்கு வரைபட அனுமதி யில் அதிக வருவாய் கிடைக்கும். அதேநேரம், உலக வங்கியி டம் இருந்து பல் வேறு கட்டமைப்பு வசதிகளுக்கு கடன் கிடைக்கும் என்கின்றனர் நில மேம்பாட்டாளர்கள்.

இது தொடர்பாக, நிலம் மற்றும் கட்டுமான மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது:

அரசின் இந்த திட்டம், துணை நகர திட்டத்துக்கு எதிரானதாகும். இந்த விரிவாக்கத்தை செயல்படுத்துவதன் மூலம், கழிவுநீர் மேலாண்மை, குடிநீர் வழங்கல், சாலை, மின் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஆயிரக்கணக்கான கோடி உலக வங்கியில் இருந்து கடன் கிடைக்கும். அதேபோல், வரைபட அனுமதிக்கு ஊராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சியில் செலுத்தும் தொகையைவிட 5 மடங்கு செலுத்த வேண்டி வரும். இது அரசுக்கு வருவாயை அதிகரிக்கும்.

பொது மக்களை பொறுத்தவரை, வீட்டு வாடகை அதிகரிக்கும். நிலத்தின் விலையும் உயரும். இதுமட்டுமின்றி, வீட்டுக்கு செலுத்த வேண்டிய வரித்தொகையும் இரு மடங்காக உயரும். வீடு கட்ட நினைக்கும் ஒருவர், வரைபட அனுமதிக்காக விண்ணப்பிக்கும்போது, 5 மடங்கு செலவு அதிகரிக்கும். கட்டுமான பிரிவினரும் நகர மற்றும் ஊரமைப்பு அனுமதியை இனி சிஎம்டிஏ அனுமதி என்று கூறி அதிக தொகை வசூலிக்க வாய்ப்புள்ளது.

இதுதவிர, நிர்வாக ரீதியாகவும் டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ இடையில் அலுவலர்கள் பரிமாற்றத்திலும் சிக்கல்கள் ஏற்படும். இவற்றை கடந்துதான் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியும். ஒரேயடியாக இவ்வளவு பகுதிகளை தன் திட்ட எல்லைக்குள் கொண்டுவர முயற்சிக்கும் சிஎம்டிஏ, ஒவ்வொரு பகுதியாக எல்லையை விரிவாக்கம் செய்திருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நடைமுறை சிக்கல்கள் களையப்படுமா?

விரிவாக்கம் செய்யப்படும் பகுதி அரக்கோணம் வரை நீள்வதால், அங்கிருந்து சென்னை வரை வந்து அலைய வேண்டாம் என்ற எண்ணத்தில் அருகிலேயே ஆன்-லைனில் பதிவு செய்து திட்ட அனுமதி பெறுவதற்கு ஏற்பாடு செய்யலாம். அதற்கான ஆட்கள், கட்டமைப்பு வசதிகள் இல்லை. என்னதான் ஆன்-லைன் மூலம் திட்ட அனுமதி தர முயற்சி மேற்கொண்டாலும், நிர்வாகத்தில் இருப்பவர்கள் வேண்டுமென்றே தவறு செய்து, அதில் திருத்தம் செய்ய நேரில் வர வைக்கிறார்கள். அப்போது தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்கின்றனர்.

எது எப்படியானாலும், திட்ட அனுமதி பெறுவதற்கு அலைச்சல், அதிக செலவு, நேர விரயத்தை தவிர்க்க இயலாது. இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களை களைவதற்கு எந்த திட்டமும் இல்லை. எப்படியாகினும், சிஎம்டிஏ-வின் விரிவாக்கப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும் என்கிறார் தொழில்முறை நகரமைப்பாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சதானந்த்.

ஆதாயம் பெறவே விரிவாக்கம்

காஞ்சிபுரம் மாவட் டம் வாலாஜாபாத் ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் பரந்தூர் து.சங்கர் கூறியதா வது:

திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், வேலூர் மாவட்டத்தின் இரு தாலுகாக்கள் ஆகியவற்றில் பெரும்பகுதி கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்துக்கும் இடைவெளி குறைந்தபட்சம் 5 கிமீ அளவில் உள்ளது. இங்கு வசிப்போர் அனைவரும் நகர மனப்பக்குவம் இல்லாதவர்கள். இவர்களை சிஎம்டிஏ எல்லை விரிவாக்கம் என்ற பெயரில், நகர நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்வது ஏற்புடையதாக இல்லை. இந்த நடவடிக்கையை பார்க்கும்போது, இம்மாவட்டங்களை முன்னேற்ற நினைப்பதாக தெரியவில்லை. இத்திட்டத்தின் மூலமாக ஆளும் தரப்பினர் ஆதாயம் பெற நினைக்கிறார்களோ என்றே எண்ணத் தோன்று கிறது.

அண்மையில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் வரன்முறை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அந்த சட்டத்தை வைத்து சிலர் பணம் பார்த்து வருகின்றனர். அதே போன்று எல்லை விரிவாக்கத்தால், மக்களுக்கு ஏற்படும் நன்மையை விட, ஒரு சிலருக்கு ஏற்படும் நன்மைதான் அதிகமாக இருக்கும். எல்லை விரிவாக்கப்பட்டதே தவிர, அதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது மர்மமாகவே உள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாத கிராமப்புற மக்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

வளர்ச்சி ஏற்படாது

காஞ்சிபுரம் நகர குடியிருப்போர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு செயலர் இ.முத்துகுமார் கூறியதாவது:

சிஎம்டிஏ நிர்வாக எல்லையில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்த்திருப்பதால் ஏழை மக்கள் கடுமையான நிதி சுமையையும், வரி விதிப்பையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அது ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும். கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதியை நகரமைப்பு குழுமம் மூலமாக எளிதில் பெற முடிந்தது. இனி எதற்கும் சென்னைக்கு ஓட வேண்டியிருக்கும். அதில் சிக்கல்கள் ஏதே னும் இருப்பின் அதை தீர்க்கவும் எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கிராமப்புற மக்கள் தவம் கிடக்க வேண்டியிருக்கும்.

அரசின் இந்த நடவடிக்கை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேண்டுமானால் உயர்ந்த அந்தஸ்தை கொடுக்கும். கிராமப்புற மக்களுக்கு எந்த பயனும் இல்லை. எல்லை விரிவாக்கத்தால் வளர்ச்சி ஏற்படும் என்கிறார்கள். ஏற்கெனவே சிஎம்டிஏவுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் இன்றும் மண் சாலையாக உள்ளன. பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாத பகுதிகளும் ஏராளமாக உள்ளன. அதனால் கிராமப்புறங்களை சிஎம்டிஏவுடன் இணைப்பதால் வளர்ச்சி ஏற்பட்டு விடாது. இவ்வாறு அவர் கூறினார்.

நீர் நிலைகள் பாதுகாக்கப்படுமா?

எல்லை விரிவாக்கம் என்பது நீர் நிலைகளை பாதுகாக்கும் நோக்கத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் கோ.வெங்கடாசலம் கூறுகிறார். அவர் மேலும் கூறியதாவது:

சிஎம்டிஏ எல்லை யை விரிவாக்கம் செய்யும்போது அரசு முத லில் நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். அதனால் ஆக்கிரமிப் பில் இருந்து நீர் நிலைகளைப் பாதுகாப்பதுடன் மழைக்காலத்தில் தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பது போன்ற நிலை யைத் தவிர்க்க முடியும். குடிநீர் ஆதாரங்களை பெருக்க வேண்டும். குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் இல்லாத லே-அவுட்டுகளுக்கு திட்ட அனுமதி அளிப்பதில்லை என்பதில் சிஎம்டிஏ உறுதியாக இருக்க வேண்டும். இதில், எந்த சமரசத்துக்கும் இடம் தரக்கூடாது. நவி மும்பையைப் போல பெருநகரை உருவாக்கினால் பொது மக்கள் சென்னை மாநகரத்தில் இருந்து நிச்சயம் புறநகர் பகுதிக்குப் போய் குடியேறுவார்கள்.

இதற்காக, தமிழக அரசின் பொதுப்பணித் துறை, சென்னைக் குடிநீர் வாரியம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட துறைகள் என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு, அந்தப் பணிகளை அனைத்து துறைகளும் குறித்த காலத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். இதைச் செய்யாவிட்டால் ஆக்கிரமிப்பு, வெள்ள பாதிப்பு, போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுப்பாடு, குடிநீரில் கழிவுநீர் கலப்பது போன்ற அவலங்களுடன் மற்றொரு சென்னை மாநகர் தான் உருவாகும். அவசர கோலத்தில் அள்ளித் தெளித்ததாக சிஎம்டிஏ விரிவாக்கத் திட்டம் அமைந்துவிடக்கூடாது.

இவ்வாறு வெங்கடாசலம் கூறினார்.

பணியாளர் எண்ணிக்கை

ஏற்கெனவே இருந்த சிஎம்டிஏ எல்லையில் விதிமீறல் கட்டிடங்களை கண்டுபிடிப்பது, விதிமீறலில் ஈடுபட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு போதிய பணியாளர்கள் இல்லை. போதிய பணியாளர்களை நியமிக்காமல் எல்லையை மட்டும் விரிவாக்கம் செய்வதால், மக்களுக்கு காலத்தோடு சேவை கிடைக்காது.

எனவே, பணியாளர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்கிறார், இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) சென்னை பிரிவு தலைவர் சுரேஷ்கிருஷ்ணா. அவர் மேலும் கூறியதாவது:

காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்களும் விரிவாக்கத்துக்குள் வருவதால் அங்குள்ள மக்கள் வந்து செல்ல வசதியாக சிஎம்டிஏ கிளை அலுவலகங்களைத் திறக்க வேண்டும். சிஎம்டிஏ நிர்வாகத்தை மேம்படுத்தி, குறிப்பாக பணியாளர்கள், அதிகாரிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் தொலைதூரத்தில் உள்ள கிராமத்துக்கும் அதிகாரிகள் சென்று தல ஆய்வு செய்ய முடியும்.

இந்த விரிவாக்கத்தால், பொதுமக்களுக்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கும். திட்டமிட்ட வளர்ச்சி வரப் போகிறது என்பதால், அந்தப் பகுதிகளில் ரியஸ் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் லே-அவுட் போடும்போது நிலத்தின் விலை அதிகரிக்கும். இத்திட்டத்தின் வெற்றி, முறையாகத் திட்டமிட்டு செயல்படுத்துவதில்தான் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முறையான திட்டமிட்ட வளர்ச்சி

இந்நிலையில் சென்னையில் கட்டுமானத் துறையினர் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிஎம்டிஏ எல்லை விரிவாக்கத்தை ஒட்டி புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

சென்னை பெருநகர திட்டப் பகுதியில் எல்லை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மக்கள் தொகை பெருக்கம், தொழில் வளர்ச்சி, அதனால் உருவாகும் வேலைவாய்ப்பு வசதி ஆகியவற்றால் பெருநகர பகுதியின் எல்லைக்கு வெளியிலும் நகர்மயமாதல் நடந்து வருகிறது. அதை நெறிமுறைப்படுத்தி, கட்டுப்பாடின்றி நடந்து வரும் நகர்மயமாதலை தடுத்து, முறையான திட்டமிட்ட வளர்ச்சியை உண்டாக்கும் வகையில் புதிய திட்டங்களை அரசு உருவாக்கும்.

அதன்மூலம் சென்னையில் நெரிசல் வெகுவாகக் குறையும். புதுநகர்கள் அமைக்கத் தேவையான இடங்கள் கண்டறியப்படும். போக்குவரத்து திட்டங்கள் ஏற்படுத்தி புதுநகரங்களும் தற்போதுள்ள நகரங்களும் இணைக்கப்படும். எல்லை விரிவாக்கம் குறித்த கருத்துகள், ஆலோசனைகள், ஆட்சேபணைகளை பொது மக்களும், அமைப்புகளும் அரசுக்கு தெரிவிக்கலாம். அனைத்து துறையினர் கருத்துக்களைப் பெற்று கலந்தாய்வு கூட்டம் நடத்தி, பொது மக்களிடம் பெறப்பட்ட கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு, தகுந்த முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல் வம் தெரிவித்தார்.

விரிவாக்கத்தால் இதுவும் நடக்கும்!

தற்போது சிஎம்டிஏவின் எல்லை விரிவாக்கத்துக்கான கருத்துக்கேட்பு நடக்கிறது. இப்பணிகள் முடிந்த பின், பொதுமக்கள், ரியல் எஸ்டேட் துறையினரின் கருத்துக்கள் மீதான பரிசீலனை நடக்கும். அதன்பின், நகர் ஊரமைப்புத் துறையிடம் இருந்து விரவாக்கப் பகுதிகள் விடுவிக்கப்பட்டு சிஎம்டிஏவுடன் சேர்க்கப்படும்.

இவ்வாறு இணைக்கப்படுவதால், பல்வேறு சாதகங்கள் இருக்கின்றன.

காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் எதிர்காலத்தில் ஏற்படும் நகர்ப்புற வளர்ச்சியை இப்போதே நாம் திட்டமிட்டுவிட முடியும். அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தலாம்.

கல்வி, வேலைவாய்ப்பு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்படும் நெரிசலை குறைக்கலாம்.

நிலங்களின் பயன்பாடு, நீர்நிலை பாதுகாப்பு, விவசாய நிலங்கள் பாதுகாப்பு இவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கலாம்.

புதிய தொழில் மற்றும் பொருளாதார மண்டலங்கள் அமைக்க இடம் ஒதுக்கப்படும் பகுதிகளின் அருகில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய துணை நகரங்கள் ஏற்படுத்தலாம்.

சாலை, குடிநீர், மின்சாரம், பள்ளிகள், மருத்துவமனைகள், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை திட்டமிட்டு உருவாக்க முடியும்.

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு மின்சார ரயில்போல, செங்கல்பட்டு- காஞ்சிபுரம்- திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையில் புதிய ரயில் பாதைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

நில மதிப்புதான் உயரும்

கடந்த 2010 திமுக ஆட்சியின் போது, சென்னை மாநகராட்சியின் எல்லை 174 சதுர கிமீயில் இருந்து 426 சதுர கிமீயாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது சென்னையின் மேயராக இருந்தவர் மா.சுப்பிரமணியன். தற்போது சைதாப்பேட்டை எம்எல்ஏவாக இருக்கும் அவர், சிஎம்டிஏவின் எல்லை விரிவாக்கம் பயனளிக்காது என்கிறார்.

அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:

சிஎம்டிஏவின் திட்ட எல்லை 1,809 சதுர கிமீயில் இருந்து, 8,878 சதுர கிமீட்டராக 8 மடங்கு அளவுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்காகவும் முத்திரைத் தீர்வை மற்றும் வழிகாட்டி மதிப்பு உயர்வு இவற்றின் மூலம் அரசின் வருவாயை பெருக்க மட்டுமே இதை செயல்படுத்தியுள்ளனர்.

கடந்த 2010-ல் சென்னை மாநகராட்சியின் எல்லை 174 சதுர கிமீயில் இருந்து 426 சதுர கிமீட்டராக உயர்த்தப்பட்டது. அப்போது 9 நகராட்சி, 8 பேரூராட்சி, 25 ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. ஒருபுறம் அம்பத்தூர், வடக்கில் மாதவரம், எண்ணூர், தெற்கில் செம்மஞ்சேரி, ஜல்லடியான்பேட்டை வரை எல்லை விரிவுபடுத்தப்பட்டது. இப்பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட வசதிகளுக்காக ரூ.3, 830 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. இத்தொகையை மானியமாக அளிப்பதாக அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்தார்.

ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக இந்த வசதிகள் எல்லா பகுதிகளிலும் வந்து சேராத நிலையில், 8 மடங்கு உயர்த்தப்படும் பகுதிகளில் எப்போது வசதிகள் வரும். இதனால், நிலமதிப்பு உயருமே தவிர வேறு பொதுமக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x