Last Updated : 13 Feb, 2018 06:47 PM

 

Published : 13 Feb 2018 06:47 PM
Last Updated : 13 Feb 2018 06:47 PM

ரேடியோ காலங்கள்.. நாங்கள் கேட்டவை

இன்று ரேடியோ தினம்.

இன்று உலக ரேடியோ தினம். தஞ்சைவாசியான சர்வதேச வானொலி நேயரான டி.எம்.முருகானந்தம் எனக்கு

காலையில் அனுப்பிய வாட்ஸ்அப் தகவலில் அறிந்தேன். அடுத்து அதன் அலைவரிசைக்கு இணையாக அக்காலக்கட்டத்தில் எனது பள்ளிக்காலம் இருந்ததை மனம் அசைபோட்டது.

இதில் பதிவான வடிவத்தை எழுத்தாக்கி இங்கு தந்துள்ளேன்.

ஒரு காலத்தில் நம் உடலின் மற்றொரு நாடித்துடிப்பாக இருந்தது இந்த வானொலி. இதன் அளவை பொறுத்து அது வைக்கப்பட்டிருக்கும் வீட்டாருக்கு பெருமை. வானொலி நிலையங்களின் அலைவரிசைக்கான பேண்டுகள் அதிகம் இருந்தால் கூடுதல் மதிப்பு. அதேபோல், அளவில் சிறியதாக இருப்பதற்கும் தனிமதிப்பு. கண்களை கவரும் இந்த டிரன்சிஸ்டர்களை கடற்கரை, நதிக்கரை, சாலைஓர மரத்தடிகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் வைத்து கேட்பவர்களிடம் நின்று அவர்களிடம் பேசும் சாக்கில் ஒலிக்கும் பாடலை கேட்கத் தோணும். எதுவும் பேசாமல் அமைதியாக அருகில் நின்று பாடலை மட்டும் இலவசமாகக் கேட்டுச் சென்றவர்களும் உண்டு. கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும் போது இந்த சிறிய வானொலியை வைத்திருப்பவர்களை சுற்றி ஒரு பெரிய கூட்டம் சூழ்ந்து இருக்கும். அப்போது அந்த வானொலியை விட அதை வைத்திருப்பவர்களுக்கு மரியாதை அதிகம் கிடைக்கும். இதன்மூலம் புதிய நட்புகளும் உருவானது உண்டு. செய்திகள் ஒலிபரப்பிலும் தொடரும் இந்தநிலை, தேர்தல், புயல் சமயங்களில் சிறுபொதுக்கூட்டங்களுக்கு கூடும் எண்ணிக்கை அளவிலான கூட்டங்கள் கூடி விடும்.

எனது சொந்த ஊரான சேலத்தில் நான் பள்ளிப்படிப்பின் போது காலை மணி அறிந்து எழுவது பெரிய பிரச்சனையாக இருக்கும். சிறுவயதில் எனக்கு கடிகாரத்தில் நேரம் பார்ப்பதில் குழப்பம். ஒரு எண்ணிற்கு முன்பின் முள்நின்று விட்டால் காலை மணி 7.30 மணியா அல்லது 8.30 மணியா என குழம்பி விடுவேன். சமையற்கட்டில் டிபன் தயார் செய்யும் அம்மாவிடம் கேட்டால், ‘கழுத! கழுத! கடிகாரம் பார்க்கத் தெரியல! வெட்கமா இல்ல?’ என வசைபாடுகளுடன் மணி அறிய வேண்டி வரும். இதில் இருந்து என் மானத்தை காத்த உற்ற நண்பன் இந்த வானொலி. நேரத்தை கண்டுகொள்ள வானொலியின் நிகழ்ச்சிகளை கணக்கில் எடுத்துக்கொள்வேன். எங்களை எழுப்புவதற்காக காலையில் ஏழு மணிக்கு அம்மா அல்லது அண்ணன்மார்கள் வீட்டின் பிலிப்ஸ் வானொலியை ஸ்விட்ச் ஆன் செய்வார்கள், முன்தினம் அதை அணைத்த போது பாடிக்கொண்டிருந்த இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் துவங்கிவிடும். இதில், நீங்கள் கேட்டவை, திரைவிருந்து, உங்கள் விருப்பம் எனப் பல்வேறுவகை தலைப்புகளில் திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பாகும். இதன் தலைப்பை கேட்க முடியாவிட்டாலும் அதில் வரும் பழைய, புதிய பாடல்களை பொறுத்து அந்த நிகழ்ச்சி என்ன? அப்படி எனில் இப்போது மணி என்ன? என நேரத்தை கணக்கிடும் வில்லாதி வில்லன்கள் பட்டியலில் நானும் இடம் பெற்றிருந்தேன். இதற்கு படிப்பை விட உயிர்மூச்சாக சினிமா இருந்தது அதன் காரணம்.(உதாரணம்: நினைத்தாலே இனிக்கும் 13 முறை, ஒருதலைராகம் 17 முறை).

கடைசியாக வீட்டில் இருந்து பள்ளிக்கு கிளம்பும் போதும் வானொலியின் பாடல்களை நம்பி தூரத்தை குறித்த நேரத்தில் கடந்து விடுவேன். இதற்கு நான் பள்ளி செல்லும் வழியில் பலரது வீடுகளில் அதே இலங்கை வானொலி நிலைய பாடல் நிகழ்ச்சிகள் சக்கை போடு போட்டுக் கொண்டிருப்பதும் காரணம். பள்ளிக்கு உள்ளே நுழையும் முன்பாக அதன் வாசலில் அன்னாசி பழம் விற்கும் மாணிக்கம் அண்ணனுன் அதை சீவியபடி தன் டிரான்சிஸ்டரில் கேட்கும் பாட்டு பலன் தரும். நேரத்தை வீணடிக்கக் கூடாது என எங்க வாத்தியார் அடிக்கடி கூறுவதை நான் கட்டாயம் பின்பற்றுவேன். 9.40 மணிக்கு அடிக்கும் பள்ளி பெல்லுக்கு மூன்று நிமிடத்திற்கு முன்தான் உள்ளே நுழைவேன். அதற்கு உதவியாக மாணிக்கம் அண்ணனின் டிரான்சிஸ்டர் இருந்தது. இது எனது மற்ற சில நண்பர்களையும் பள்ளிக்கு முன்னதாக உள்ளே செல்லவிடாமல் ‘டேய்! டைம் இருக்கு நில்றா மாப்ள!’ எனக் கூறி கெடுக்கவும் உதவியது. அந்த இனிய நாட்களை மறக்க முடியாமல் இருக்க வைத்த வானொலி, தொழில்நுட்ப வளர்ச்சியின் பெயரில் முடங்கிவிட்டது! இனி அதுபோன்ற காலங்களை எந்த தலைமுறையும் அனுபவிப்பது சாத்தியமல்ல!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x