Published : 16 Sep 2017 12:14 PM
Last Updated : 16 Sep 2017 12:14 PM

‘தி இந்து’ தமிழ் நியாயத்தின் பக்கம் நிற்கிறது: பா. செயப்பிரகாசம்

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாசகர்களின் ஊக்கத்தாலும், பங்களிப்பாலும் மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது. இந்த சூழலில் வாசகர்கள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்து தமிழகத்தின் மிக முக்கியமான முன்னோடிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

பா. செயப்பிரகாசம். எழுத்தாளர்

மனசாட்சியுள்ள ஞானிபோல் ‘தி இந்து’ உண்மைகளைப் பேசுகிறது. செய்திக்கு முன்னும் பின்னும் உள்ள உண்மைகளை, ஆழ்கிணற்றின் அடியில் விழுந்தவற்றை மேலே கொண்டுவரும் பாதாளக்கரண்டிபோல் எடுத்துவந்து தருகிறது. சாதி, மதம், குழு, கட்சி, மையவாதம், ஒற்றை மதம், ஒற்றை ஆட்சி, ஒற்றை தேசம் எனப் பல ரூபங்களில் பெருக்கெடுத்துவரும் இன்றைய ஆதிக்கச் சூழலை எதிர்த்து மக்கள் முன்னடி வைக்க ‘தி இந்து’ ‘ஏதுகாரம்’ செய்துதருகிறது.

‘ஒவ்வொரு கவளத்தையும் உணர்ந்து சுவைப்போம்’ என்று எழுத்தாளர் போப்புவும், ‘ஒவ்வொரு சொட்டையும் மறு சுழற்சி செய்யலாம்’ என்று இயற்கை வேளாண் வல்லுநர் பாமயனும் , உடல்நலக் கேடுகள் பற்றி நிறையக் கேள்விகளை எழுப்பிப் பதில் கொடுக்கிற மருத்துவர் கு.கணேசனும் வழிகாட்டுகிறார்கள்.

‘நீட்’ எதிர்ப்பு உள்ளிட்ட வீரியமிக்க போராட்டங்களை ‘தி இந்து’ அடையாளம் காட்டுகிறது. மாணவப் பருவத்தில் 1965-ல் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவப் போராளி நான். இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றின் ஆதிக்கங்களை எதிர்க்கும் போராட்டமாகவே மாணவர்களின் இன்றைய ‘நீட்’ தேர்வு எதிர்ப்புப் போராட்டதைக் காண்கிறேன். மாணவர்களின் போராட்ட நியாயத்தின் பக்கம் நிற்கிற ‘தி இந்து’ என்னை இப்போதும் போர்க்குண உயிர்ப்போடு வைத்திருக்கிறது. அதன் இலக்கியப் பக்கங்களோடு மட்டும் எனக்கும் என் போன்றோருக்கும் தீராத முரண்பாடுகள் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x