Published : 15 Aug 2017 10:33 AM
Last Updated : 15 Aug 2017 10:33 AM

‘‘அன்றைக்கு தாத்தா செய்தது தப்புத்தானே..!” - பாட்டிக்காக வருந்தும் வீரன் வாஞ்சிநாதனின் பேரன்

சு

தந்திர வேள்விக்கு தனது உயிரையே தானமாகத் தந்த வீரன் வாஞ்சிநாதன். வாஞ்சியைத் தவிர்த்துவிட்டு சுதந்திரப் போராட்ட வரலாற்றை பேசவோ எழுதவோ முடியாது. ஆனால், ‘அத்தகைய மாவீரனுக்கு இந்த தேசம் உரிய அங்கீகாரம் தந்ததா?’ என்று கேள்வி எழுப்புகிறது வாஞ்சிநாதனின் வாரிசு!

வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோரை சிறையில் அடைத்தார் என்பதற்காக பிரிட்டீஷ் கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கோர்ட் ஆஷ் துரையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தன்னுயிரையும் போக்கிக் கொண்ட வீரன் வாஞ்சிநாதன். அவரது தியாகத்தைப் போற்ற, அவர் பிறந்த செங்கோட்டையில் சிலை வைத்திருக்கிறோம். ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்ற ஊரான மணியாச்சிக்கு ’வாஞ்சி மணியாச்சி’ என்று பெயர் வைத்திருக்கிறோம். இவ்வளவுதான் வாஞ்சிநாதனுக்கு நாம் செய்திருக்கும் கைம்மாறு.

தனிமையில் வாஞ்சி மகள்

வாஞ்சிநாதனுக்கு ஒரே ஒரு மகள்; பெயர் லட்சுமி. வாஞ்சிநாதனின் உயிர் பிரிகையில் அவரது மனைவி பொன்னம்மாளின் வயிற்றில் லட்சுமி ஏழுமாதக் குழந்தை. அண்மையில் 106 வயதைக் கடந்திருக்கும் லட்சுமி திருச்சி துவாக்குடி அருகே எட்டடிவயல் கிராமத்தில் வசிக்கிறார். இவருக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள். ஒரு பையன் இறந்துவிட, மற்ற பிள்ளைகள் ஆளுக்கொரு திசையில். தள்ளாத வயதில் லட்சுமியின் வாழ்க்கை தனிமையில்!

லட்சுமியின் மகன்களில் மூத்தவர் மதியழகன் என்கிற இரா.ஜெயகிருஷ்ணன். சித்த வைத்தியரான இவர், ‘வான்புகழ் வாஞ்சியார் இயக்கம்’ என்ற அமைப்பின் மூலம் இயற்கை விவசாயம் உள்ளிட்டவை குறித்துப் பிரச்சாரம் செய்துவருகிறார். 1972-லிருந்து மக்கள் பிரச்சினைகளுக்காக 53 முறை சிறை சென்றிருக்கும் இவருக்கு, வாஞ்சிநாதனின் தியாகத்தை இந்த நாடு முறையாகப் போற்றவில்லை என்ற கோபத்தைவிட தாத்தா வாஞ்சிநாதன் மீதுதான் அளவு கடந்த கோபம்.

தாத்தா செய்தது தப்புத்தானே

உங்கள் தாத்தாவை ‘கொலைகாரன்’ என்று அடிக்கடி சொல்வீர்களாமே? என்ற கேள்வியோடு ஜெயகிருஷ்ணனிடம் பேசினோம். “அப்படி எல்லாம் சொல்லல.. ஆனாலும் அன்றைக்கு தாத்தா செய்தது தப்புத்தானே. கட்டுன மனைவி கர்ப்பிணியா இருக்கையில, அவருக்கான பாதுகாப்பு ஏற்பாட்டை எல்லாம் செஞ்சு வெச்சுட்டுல்ல இவரு துப்பாக்கிய கையில எடுத்துருக்கணும்! இவரு பாட்டுக்கு ஆஷ் துரையை சுட்டுட்டு தானும் போய்ச்சேர்ந்துட்டாரு. அதுக்கப்புறம் எங்க பாட்டி என்ன பாடு பட்டுருக்கா தெரியுமா?

தாத்தா செஞ்ச காரியத்தால, எங்க பாட்டியைக் காட்டிக்குடுக்குறவங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம்னு அறிவிச்சுது பிரிட்டீஷ் சர்க்கார். ‘அவங்களுக்கு அடைக்கலம் குடுக்கிறவங்களோட சொத்துக்களை பறிமுதல் செஞ்சு சிறையில் அடைப்போம்’னு அறிவிச்சாங்க. இதுக்குப் பயந்துக்கிட்டு எங்க தாத்தாவோட அப்பா ரகுபதி ஐயர், எங்க பாட்டியை வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லி துரத்திட்டார்.

அடைக்கலம் கொடுத்த தேவர்

வயித்துல பிள்ளையோட நிற்கதியா நின்ன எங்க பாட்டி பொன்னம்மாளுக்கு அடைக்கலம் கொடுத்து, தாயையும் மகளையும் வெள்ளை ஆட்சியரின் பார்வையிலிருந்து மறைத்து பாதுகாத்தது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தந்தை உக்கிரபாண்டியத் தேவர்.

எதைப்பற்றியும் கவலைப்படாம பாட்டிய தன்னோட கூட்டு வண்டியில ஏத்திக்கிட்டு கிளம்புனவரு, மூணு மாசமா பாட்டியை கூட்டு வண்டியில வெச்சுச்கிட்டே சுத்திருக்காரு. நல்லபடியா, பாட்டிக்கு எங்கம்மா பொறந்ததும் கந்தர்வக்கோட்டையில டீக்கடைக்காரர் ஒருத்தர்க்கிட்ட 25 ஆயிரத்தைக் குடுத்து எங்கம்மாவ ஒப்படைச்சிட்டாரு. மயிலாப்பூர் கச்சேரிரோட்டுல ஒரு வீட்டைப் பிடிச்சு பாட்டியையும் மறைவா தங்கவெச்சிருக்காரு.

பிற்பாடு, வாஞ்சிநாதன் மனைவிக்கும் அவரது மகளுக்கும் தேவையான உதவிகளைத் தனது தந்தையின் வழியில் நின்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் செய்திருக்கிறார்.

ஒருவேளை, பாட்டியை போலீஸ் கைது செய்தாலும் வாஞ்சியின் வாரிசு பிழைக்க வேண்டும் என்பதற்காக இருவரையும் பிரித்து வைத்த தேவர், பிறந்த பிள்ளை இறந்துவிட்டதாக பாட்டியிடம் சொல்லிவிட்டார். பிறக்கும்போதே எனது அம்மாவும் பாட்டியும் இவ்வளவு துன்பங்களை அனுபவிக்கக் காரணம் தாத்தா வாஞ்சிநாதனின் பொறுப்பற்ற செயல்தானே. அம்மாவுக்கு திருமணம் ஆனப்பத்தான் தனது மகள் உயிரோடு இருப்பதே பாட்டிக்குத் தெரியும். அம்மாவுக்குத் திருமணம் ஆனதும் எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவார் தேவர். அவரை மாமான்னுதான் கூப்பிடுவேன்.

வயிற்றில் ஏழு மாதக் குழந்தையுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த எங்க பாட்டியை சொந்த வீடும் கண்டுக்கல; இனத்தாரும் அவருக்குக் கைகுடுக்கல. சுதந்திரம் அடைஞ்ச பின்னாடி தேவரையும் காமராஜரையும் வ.உ.சி-யையும் அவங்கவங்க சாதிக்காரங்க கையிலெடுத்துக் கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா, சுப்பிரமணிய சிவா, வ.வே.சு.ஐயர், வாஞ்சிநாதன் இவங்களை எல்லாம் அவங்களோட இனம் கொண்டாடாம விட்டது துரதிருஷ்டம்தானே!” என்று ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தார் ஜெயகிருஷ்ணன்.

கொள்ளைக்காரங்க கையில் தேசம்

தொடர்ந்து, தேசத்தின் இப்போதைய நிலவரம் குறித்த தனது ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினார். “எம்.ஜி.ஆர். ஆட்சியில் செங்கோட்டையில தாத்தாவுக்கு சிலை வைச்சாங்க. அந்த ஊரு பஸ் ஸ்டாண்டுக்கு, காஞ்சியில பொறந்த அண்ணாதுரை பெயரை வைக்கும்போதுகூட வாஞ்சிநாதன் ஞாபகத்துக்கு வரல. இதையெல்லாம் யாருய்யா கேக்குறது? ஆனா, நான் இவ்வளவு பேசுறேன்.. எங்க அம்மா, ஓட்டு மெஷின்ல உதய சூரியன் இல்லைன்னு சொல்லி ஓட்டே போடாமா வந்த புண்ணியவதி.

தாத்தா வாஞ்சிநாதன் உள்ளிட்டவங்க போராடிப் பெற்ற சுதந்திரம் இன்னைக்கி படாதபாடு படுது. சுருக்கமா சொல்லணும்னா, வெள்ளக்காரங்க கையிலிருந்த இந்த தேசம் இப்ப கொள்ளைக்காரங்க கையில் சிக்கியிருக்கு. வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு லெட்சுமணப் பெருமாளும் வாஞ்சிநாதன் வாரிசு ஜெயகிருஷ்ணனும் தெருவுல சித்தா எண்ணெய் வித்துட்டு திரியுறோம். ஆனா, எட்டப்பனின் வாரிசுகளை எம்.எல்.ஏ., எம்.பி-ன்னு கவுரவிக்குது இந்த நாடு. இதுக்கு மேல இந்த தேசத்தைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கு?” ஜெயகிருஷ்ணனின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விடைபெற்றோம்!

 

கட்டுரையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x