Published : 23 Jan 2014 10:10 AM
Last Updated : 23 Jan 2014 10:10 AM

மனைவியை கௌரவ கொலை செய்ய முயற்சி- டி. ஜி. பி.யிடம் காதல் கணவர் புகார்

காதல் மனைவியை அவரது பெற்றோர் கௌரவ கொலை செய்ய முயற்சிப்பதாக சோலைச்சாமி என்ற தலித் இளைஞர் டி.ஜி.பி-க்கு புகார் மனு அனுப்பி இருக்கிறார்.

கல்லூரியில் பிறந்த காதல்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுக்கா அயன்ராஜா பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சோலைச்சாமி (27). தற்போது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் முனைவர் பட்டயப் படிப்புப் படித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு பொறையார் டி.பி.எம்.எல். கல்லூரியில் படித்தபோது, பண்ருட்டி அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த காஞ்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவிக்கும் சோலைச்சாமிக்கும் காதல் மலர்ந்தது. காஞ்சனா பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு அவரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பதிவுத் திருமணம்

இந்நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறிய காஞ்சனாவும் சோலைச்சாமியும் கோயிலில் திருமணம் செய்து கொண்டதுடன் கடந்த 9.1.14 அன்று வானூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை முறைப்படி பதிவும் செய்திருக்கிறார்கள். இந் நிலையில்தான், தனது காதல் மனைவி காஞ்சனாவை அவரது பெற்றோர் கடத்திச் சென்று வீட்டில் அடைத்து வைத்து சித்ர வதை செய்வதாகவும் அவரை கௌரவ கொலை செய்வதற்கு முயற்சிகள் நடப்பதாகவும் டி.ஜி.பி-க்கு புகார் அனுப்பி இருக்கிறார் சோலைச்சாமி.

சட்ட நடவடிக்கை

சோலைச்சாமிக்கு ஆதரவாக சட்ட நடவடிக்கையில் இறங்கி இருக்கும் எவிடென்ஸ் அமைப்பு, காஞ்சனாவை ஆஜர் படுத்தக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. ’தி இந்து’விடம் பேசிய எவிடென்ஸ் செயல் இயக்குநர் கதிர், “சோலைச்சாமியும் அவரது மனைவியும் எம்ஃபில் படித்த பட்டதாரிகள். அண்மைக்காலமாக சாதியின் பெயரால் கௌரவ கொலைகள் நடப்பது அதிகரித்து விட்டன. எனவே தமிழக அரசு நீதிமன்றம் தலையிடும் வரை காத்திருக்காமல் அந்தப் பெண்ணை மீட்டு, கணவன் மனைவியைச் சேர்த்து வைக்க வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x