Published : 31 Jan 2017 11:59 AM
Last Updated : 31 Jan 2017 11:59 AM

புல் கூரை வீடுகள்; மூங்கில் பாலிதீன் தண்ணீர் தொட்டிகள்- பரிதாப நிலையில் நீலகிரி பழங்குடிகள்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நிலாக்கோட்டை. இங்கு பாட்டவயல்- அய்யன்குடி சாலையில் அமைந்துள்ளது வெள்ளேறிவயல் கிராமம்.

இந்தக் கிராமத்திலிருந்து சற்று தொலைவில், அடர்ந்த வனப் பகுதியில் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளது மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதி. இங்கு 12 குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கு அரசு சார்பில் 10 ஆண்டுகளுக்கு முன் 5 கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டன. அவை தற்போது சிதிலமடைந்தும், பாழடைந்தும் கிடக்கின்றன.

இந்த வீடுகளுக்கு உரியவர்கள், அருகிலேயே சிறிய மண் குடிசைகளை அமைத்து, புல்லால் கூரைவேய்ந்து குடியிருக்கின்றனர். இந்த புல் கூரை வீடுகள், களிமண், தூர்ந்துபோன மூங்கில்கள், கிழிந்த பாலிதீன் பைகளால் அமைந்துள்ளன.

காற்று, மழை, வெயிலால் சிதைந்துள்ள இந்த வீடுகள், அந்த மக்களின் வறுமையை எடுத்துக்காட்டுகின்றன. இந்த வீடுகளில் வசிக்கும் மக்கள், குடிநீருக்கு வித்தியாசமான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

நிலத்தில் குழியைத் தோண்டி, மேல் பகுதியில் மூங்கில்களை பிணைத்து தொட்டிபோல உருவாக்கியுள்ளனர். மூங்கில் தொட்டியின் உள்புறத்தில் பாலிதீன் காகிதங்களைப் பொருத்தி, அதில் தண்ணீர் வைத்துள்ளனர். இந்தக் குடியிருப்புக்கு மின்சாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி கிடையாது. எனவே, இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவுக்குச் சென்று, ஓடைகள் அல்லது கிராமத்துக் குடிநீர்க் குழாய்களில் இருந்து குடங்களில் தண்ணீர் எடுத்துவந்து, மூங்கில் பாலிதீன் தொட்டிகளில் சேமித்து வைக்கின்றனர்.

இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாட்டவயல் கிராமத்தை ஒட்டியுள்ளது முக்குப்பாடி மலைக் கிராமம். இங்குள்ள பழங்குடியினர் குடியிருப்பிலும் 17 குடும்பங்கள் வசிக்கின்றன. அங்கும் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள வீடுகள் சிதிலமடைந்து, பயன்படாமல் உள்ளன. இப்பகுதி மக்களும் மண் சுவர், புல் கூரை குடிசைகள், மூங்கில் பாலிதீன் தண்ணீர் தொட்டிகளுடன்தான் வாழ்க்கை நடத்துகின்றனர்.

இதுகுறித்து பழங்குடி மக்கள் சங்கப் பிரதிநிதிகள் கூறும்போது, “கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அருகே அமைந்துள்ள, இந்த தமிழகப் பகுதியில் பழங்குடியி கிராமங்கள் அதிகம் உள்லன. இங்கு, குரும்பர், பளியர், காட்டுநாயக்கர் உள்ளிட்ட பிரிவினர் வசித்து வருகின்றனர்.

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நிலம்பூர் கோயிலகத்துக்குச் சொந்தமான சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள், ‘ஜென்மி’ ஒழிப்புச் சட்டத்தின்கீழ் அரசுக்கு சொந்தமாகின. அந்த வகையில், தமிழகப் பகுதியில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருந்தன.

அதில் சுமார் 28 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் 1969-ம் ஆண்டு வனத் துறை உட்பட்ட பிற பிரிவுகளுக்கு செட்டில்மென்ட் செய்யப்பட்டன. மீதமுள்ள குத்தகை நிலம் 52 ஆயிரம் ஏக்கர், பிரிவு-17 நிலமாக வகைப்படுத்தப்பட்டது. இந்த நிலங்களில் தனியார் எஸ்டேட்டுகளும் உள்ளன. பல்வேறு கிராம மக்கள் வசிக்கின்றனர். இதில் பெரும்பாலான ஆக்கிரமிப்புகளை அகற்றும் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.

இது தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்றன. அதன்படி, இந்த நிலங்களில் புதிய கட்டுமானப் பணிகள், விற்பனை ஏதும் செய்யக் கூடாது என்று விதிமுறை உள்ளது. அதை மீறி ஏதாவது பணிகள் நடைபெற்றால், வனத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட வன உரிமைச் சட்டப்படி, பழங்குடியின மக்களுக்கு வாழ்வாதார உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முறையில் சில சீர்திருத்தங்களை அரசு அனுமதித்துள்ளது. அதன்படி, இந்த கிராம மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரவும்,

வெள்ளறிவயல் பகுதியில் பயனற்றுக் கிடக்கும் சிதிலமடைந்த வீடுகள். (அடுத்த படம்) மூங்கில், பாலிதீன் காகிதத்தால் உருவாக்கப்பட்ட தண்ணீர்த் தொட்டி.

முக்குப்பாடி கிராமத்தில் காணப்படும் புல்லால் கூரை வேயப்பட்ட வீடு.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட வன உரிமைச் சட்டப்படி, பழங்குடியின மக்களுக்கு வாழ்வாதார உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முறையில் சில சீர்திருத்தங்களை அரசு அனுமதித்துள்ளது. அதன்படி, இந்த கிராம மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரவும்,

ஏற்கெனவே கட்டித் தரப்பட்ட வீடுகளைச் சீரமைக்கவும், மின்சாரம், குடிநீர் வசதி செய்துதரவும் முடியும். அதற்காக பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நிதியும் ஒதுக்கப்படும். ஆனால், பல்வேறு துறைகளின் ஒப்புதலுக்காக செல்லும்போது, தடை வந்துவிடும். இதனால்தான், இப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகளின்றி உள்ளனர்” என்றனர்.

இந்தப் பகுதி மக்கள் கூறும்போது, “எங்கள் முன்னோர் காலத்தில் எங்களுக்கு பல ஏக்கர் நிலம் இருந்தது. அதில், விவசாயமும் நடைபெற்றது. பின்னர், ஜென்மி சட்டத்தால் எங்களது நிலம் 3 சென்ட், 4 சென்ட்-ஆக குறைந்துவிட்டது. சிலருக்கு மட்டும் அரை ஏக்கர், கால் ஏக்கர் நிலம் உள்ளது.

இதில், குருமிளகு, காய்கறிகள் சாகுபடி செய்கிறோம். மற்றபடி அனைவருமே கூலி வேலைக்குத்தான் செல்கிறோம்.

அருகில் உள்ள நிலங்களுக்கு கூலி வேலைக்குச் சென்றால் ரூ.200 வரை ஊதியம் கிடைக்கும். காபி, தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்றால் ரூ.100-லிருந்து ரூ.150 மட்டுமே கிடைக்கும்” என்றனர்.

மாவோயிஸ்ட் ஊடுருவல்?

இந்த கிராமங்களைப் போலவே, சேரம்பாடி, நாடுகாணி, தேவாலா, தாளூர் உள்ளிட்ட கேரள எல்லையோரப் பகுதிகளிலும் ஏராளமான பழங்குடியினர் வசிக்கின்றனர். அவர்களின் நிலையும் மோசமாகத்தான் உள்ளது. அண்மையில், இந்தப் பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவல் காரணமாக அதிரடிப்படை போலீஸார் கண்காணிப்பு தீவிரப்பட்டுள்ளது. அவர்கள், இந்தப் பகுதி மக்களின் வசிப்பிடங்களைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர்.

“பரிதாப நிலையில் வாழும் மக்களிடையே மாவோயிஸ்ட்கள் ஊடுருவுகின்றனர். பழங்குடி மக்களை சமூகவிரோத செயல்களுக்கும் அவர்கள் ஈடுபடுத்த வாய்ப்புள்ளது. எனவே, இவர்களுக்கு அடிப்படை வசதிகளையும் செய்துதரவேண்டும். இல்லாவிட்டால் நிலைமை சிக்கலாகும்” என்று அவர்களது உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்கின்றனர்.

எனினும், “போலீஸார் பரிந்துரைத்தாலும், வருவாய்த் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதியில்லை. இதனால், இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகிடைப்பது அரிதாகவே உள்ளது” என்கின்றனர் இப்பகுதி இளைஞர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x