Published : 14 Aug 2015 10:44 AM
Last Updated : 14 Aug 2015 10:44 AM

நிழற்குடை இல்லாத ரேஸ் கோர்ஸ் பஸ் நிறுத்தம் - உங்கள் குரல்: வாசகர்களின் புகார்கள்

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட புகார்கள்:

நிழற்குடை இல்லாத ரேஸ் கோர்ஸ் பஸ் நிறுத்தம்

கிண்டி ரயில் நிலையம் அருகில் உள்ள ரேஸ் கோர்ஸ் பஸ் நிறுத்தத்தை தினமும் பயன்படுத்தும் ஹரிநாராயணா ‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ சேவையை தொடர்புகொண்டு கூறியதாவது:

கிண்டி ரயில் நிலையம் அருகில் தாம்பரம் மார்க்கத்தில் உள்ள ரேஸ் கோர்ஸ் பஸ் நிறுத்தத்தை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். அந்த வழியாக ஷேர் ஆட்டோக்களும் செல்வதால், ரேஸ் கோர்ஸ் பஸ் நிறுத்தம் எப்போதும் கூட்டமாகவே இருக்கும். ஆனால் அங்கு நிழற்குடை இல்லாததால், பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் அவதிப்படுகின்றனர். தற்போது மாலை நேரத்தில் மழை பெய்தால் ஒதுங்குவதற்குக்கூட இடமில்லை. எங்காவது நிழல் கிடைக்கும் இடத்தில் நின்றுகொண்டிருந்தால், பஸ் வரும்போது ஓடி வர வேண்டியுள்ளது. வயதானவர்கள் சிரமப்படுகின்றனர்.

இந்த இடத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மரம் விழுந்தது. அதை இன்னும் அப்புறப்படுத்தவில்லை. பஸ் நிறுத்தத்தில் இருப்பவர்கள் மரத்தை சுற்றி சாலைக்கு வர வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி தெரிவிக்கும் போது, “கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையை விரிவாக் கம் செய்யும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சென்னை மாநகராட்சியும், ரயில்வே துறையும் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் பணிகள் மீண்டும் தொடங்கவுள்ளன. இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ரூ.2 கோடி செலவில் சாலை விரிவாக்கம், புதிய பேருந்து நிறுத்தம், நடை பாதைகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்” என்றார்.

***

அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் எந்த ஒரு வசதியும் இல்லை என்று உங்கள் குரல் மூலமாக அயனாவரம் வாசகர் செல்வம் புகார் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் மேலும் கூறியதாவது:

அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனை யில் சரியாக சிகிச்சை அளிப்பதில்லை. மருந்து, மாத்திரைகளை சரியாக வழங்கு வதில்லை. ஸ்கேன் வசதி இல்லை. சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் படி திருப்பி அனுப்புகின்றனர். கடந்த மாதம் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட என் நண்பரின் மகன் சிகிச்சை பெற முடியாமல் இறந்துவிட்டார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனை கண்காணிப்பாளர் திரு நாவுக்கரசு கூறும்போது, “நோயாளி களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம். எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் வசதி மருத்துவமனையில் இல்லை. அதனால் இதுபோன்ற ஸ்கேன் எடுப்பதற்காக நோயாளிகளை வெளியிடங்களுக்கு பரிந்துரை செய்து அனுப்புகிறோம். மற்றபடி எந்த பிரச்சினையும் இல்லை” என்றார்.

***

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை ஊதியம்

அரசு கலைக் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் தங்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை ஊதியம் வழங்கப்படுவதாக கவுரவ விரிவுரையாளர்கள் உங்கள் குரல் சேவையில் புகார் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,600-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒரு நாளுக்கு 4 மணி நேரம், வாரத்துக்கு 16 முதல் 19 மணி நேரம் வகுப்பு எடுக்கும் அவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங் கப்படுகிறது.

நிரந்தர உதவிப் பேராசிரியர் செய்யும் அதே வேலையைத்தான் கவுரவ விரிவுரையாளர்களும் செய் கின்றனர். யுஜிசி பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அப்படி வழங்கவில்லை.

கொடுக்கும் குறைந்த ஊதியத் தையும் 6 மாதங்களுக்கு ஒருமுறை மொத்த மாக சேர்த்து தருகின்றனர். காலதாமதம் குறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டால் ‘‘எங்களுக்கு தெரியாது. இது மேலிடப் பிரச்சினை’’ என்கின்றனர்.

இதனால் அன்றாட செலவுக்கே போராட வேண்டியுள்ளது. எனவே, ஊதியத்தை மாதாமாதம் வழங்க வேண்டும். யுஜிசி பரிந்துரையின்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கினால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கவுரவ விரிவுரையாளர் களுக்கு தொகுப்பூதியம் வழங்குவது தொடர்பான அரசாணை இன்னும் வரவில்லை. இதனால், கடந்த ஜூன் முதல் அவர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. அரசா ணையை எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறோம். அரசாணை வந்து விட்டால்அவர்களுக்கு உடனடியாக தொகுப்பூதியம் வழங்கப்பட்டுவிடும். ஆனால், 6 மாதங்களுக்கு ஒருமுறை ஊதியம் வழங்கப்படுவதாக இது வரை எங்களுக்கு புகார் எதுவும் வர வில்லை’’ என்று தெரிவித்தனர்.

அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x