சங்க இலக்கியத்தின் சாட்சியமான கீழடி கிராமத்தை திறந்தவெளி அருங்காட்சியகமாக பராமரிக்க வலியுறுத்தல்

Published : 14 Sep 2015 10:51 IST
Updated : 14 Sep 2015 11:12 IST

சங்க இலக்கியத்தின் சான்றாவண மாகத் திகழும் சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தை வெளிநாடுகளைப்போல திறந்தவெளி அருங்காட்சியகமாக பராமரிக்க வேண்டும் என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.

வைகை நதியின் தென்கரையில் மதுரையில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்த கீழடி கிராமத்தில் கடந்த 6 மாத காலமாக இந்திய தொல் லியல் துறை சார்பில் மிகப்பெரிய அளவில் அகழாய்வு நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும். இங்கு 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்க கால மக்களின் தொல் எச்சங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத் துமே இங்கு கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்களும், சங்கத்தமிழ் ஆர்வலர்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக் கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்மணிகள் மட்டுமே 600 கிடைத் துள்ளன. முத்துமணிகள், பெண் களின் கொண்டை ஊசிகள், பெண் கள் விளையாடிய சில்லு, தாயக் கட்டை, சதுரங்க காய்கள், சிறு குழந்தைகள் விளையாடிய சுடு மண் பொம்மைகள் ஆகிய சங்க காலம் குறிப்பிடும் பல தொல்பொருட்களும் இங்கு அதிக அளவில் கிடைத்திருக்கின்றன. அதேபோல இங்கு கிடைத்துள்ள நூல் நூற்கும் தக்ளி, அக்கால மக்கள் நூல் நூற்று ஆடை நெய்து அணிந்து வாழ்ந்திருப்பதை உறுதி செய்கிறது.

பட்டினப்பாலையில் குறிப்பிடப் படும் சுடுமண் உறைகேணிகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடு களின் அருகே இக்கேணிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதிக அளவில் செங்கல் வீடுகளும், வீடுகளின் மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்டிருந்ததையும் இங்கு கிடைத்துள்ள சான்றுகளின் மூலம் உணர முடிகிறது.

வீடுகள்தோறும் குளியலறைகள் இருந்திருக்கின்றன. இப்பகுதியில் மட்டும் சுமார் ஒரு டன் அளவுக்கு கருப்பு, சிவப்பு மட்கல ஓடுகள் கிடைத்துள்ளன. பல ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. மதுரை பகுதியில் அதிக அளவில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் இருப் பது குறிப்பிடத்தக்கது. அதனை யொட்டியே இங்கு கிடைத்துள்ள மட்கலன்களிலும் தமிழ் பிராமி எழுத்துகள் காணப்படுவது மொழி ஆராய்ச்சியாளர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த சூதுபவள மணிகளும், ரோமானிய நாட்டு அரிட்டைன் வகை மட்கல ஓடுகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. இது அக்கால மக்களின் வாணிகத் தொடர்பையும், வணிகச் சிறப்பையும் நமக்கு உணர்த்துகிறது.

இவற்றையெல்லாம் தொகுத் துக் குறிப்பிடும் வரலாற்று ஆராய்ச் சியாளர்கள், கீழடி பகுதியை திறந்தவெளி அருங்காட்சியகமாக அறிவித்து பராமரிக்க வேண்டும் என்கின்றனர்.

இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியரும், தொல்லியல் ஆய்வு நிபுணருமான சிவராமகிருஷ்ணன் கூறியபோது, “எகிப்து, சீனா, ஜோர் டான் போன்ற நாடுகளில் மக்கள் வாழ்விடங்களில் நடத்தப்பட்ட அக ழாய்வுகள் மூலம் வெளிக் கொண ரப்பட்ட அத்தனை இடங்களையும் மூடிவிடாமல் திறந்தவெளி அருங் காட்சியகமாகப் பாதுகாத்து வரு கின்றனர்.

கீழடியில் கிடைத்துள்ள சான்று கள் சங்கத்தமிழ் இலக்கியங் களுக்கு சாட்சியமாகவும், வைகைக் கரை நாகரிகத்தை உலகுக்கு உரத்துச் சொல்வதாகவும் அமைந்துள்ளன.

இங்கு கிடைத்துள்ள ஒவ் வொரு பொருளுமே ஒரு தொல்லியல் ஆவணம் எனலாம். மிகப் பெரிய அளவில் நமது பண்டைய நாகரிகத்தை எடுத்துச்சொல்லும் கீழடியை மூடாமல் திறந்தவெளி அருங்காட்சியகமாக அமைக்க வேண்டும். இதன் மூலம் தமிழரின் பழம்பெருமையை உலகறியச் செய்யலாம்” என்றார்.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor