எது கனவு, எது உண்மை?

Published : 31 Oct 2013 15:44 IST
Updated : 06 Jun 2017 12:42 IST

ஜனகர் ஒருநாள் துயில் கலைந்து எழுந்தார். சுற்றுமுற்றும் பார்த்தார். சப்பர மஞ்சம், மெல்லிய விளக்கொளி, நறுமணம், கைகளில் சந்தனம், விரல்களில் மோதிரம், மார்பில் தங்கச் சங்கிலி...

சற்று முன் இருந்த கோலத்தை நினைத்துப் பார்த்தார்.

அழுக்கேறிய கந்தல் ஆடைகள். தள்ளாடும் நடை, மெலிந்த உடல், பிசுபிசுப்பேறிய தலை முடி, பேன் பிடித்த தாடி, அழுக்கான தகரக் குவளை. பிச்சை கேட்டு நீளும் கரங்கள்.

ஜனகரால் அதைக் கனவு என்று நம்ப முடியவில்லை. அவ்வளவு நிஜமாக இருந்தது அந்த அனுபவம்.

சத்திரத்தில் சாப்பாடு கிடைக்கவில்லை. வேறு யாரும் சாப்பாடு போடவில்லை. கதறி அழுகிறார். நாய்கள் அவரைப் பார்த்துக் குரைக்கின்றன. தெருவில் போகும் ஒருவர் ஒரு பழத்தை அவர் பிச்சைப் பாத்திரத்தில் போடுகிறார். அதை ஆவலோடு சாப்பிட முனையும்போது ஒரு நாய் வந்து தட்டி விடுகிறது.

ஜனகர் தேம்பித் தேம்பி அழுகிறார்.

மன்னருக்கு வியர்க்கிறது. மனதில் குழப்பம் சூழ்கிறது. எது உண்மை? பிச்சை எடுத்ததா, இதோ இங்கே சொகுசான படுக்கையில் அமர்ந்திருப்பதா?

எது உண்மை?

சபை கூடியதும் ஜனக மகாராஜா அந்தக் கேள்வியை அரசவைப் பண்டிதர்களிடம் கேட்டார். கனவு வெறும் மனப்பிரமை என்றார்கள். அவர்கள். கனவுக்குப் பொருள் சொன்னார்கள். அவ்வளவு நிஜம்போல் இருந்ததே என்று கேட்டதற்கு, அதுதானே கனவின் தன்மை என்றார்கள்.

மன்னருக்குத் திருப்தி இல்லை.அஷ்டாவக்கிரரை அழைத்தார். அஷ்டாவக்கிரர் கருவில் திரு உற்றவர்.

முறையாகப் படிக்காத தன் தகப்பன் தப்புத் தப்பாக வேத மந்திரங்களைச் சொல்வதைக் கேட்டுப் பொறுத்துக்கொள்ள முடியாமல் கருவில் இருந்த குழந்தை உடலை முறுக்கிக்கொண்டது. இதனால் குழந்தையின் உடல் எட்டு விதமான கோணல்கள் கொண்டதாக ஆனது. எனவே அஷ்டா (எட்டு) வக்கிரன் (கோணல் கொண்டவன்) என்று பெயர்.

அஷ்டாவக்கிர் மாபெரும் ஞானி. அரசனின் சந்தேகத்தைக் கேட்டதும் அவர் முகத்தில் புன்னகை.

இரண்டுமே உண்மைதான் என்றார். ஜனகரின் புருவங்கள் நெரிந்தன.

இரண்டுமே பொய்தான் என்றார் அஷ்டாவக்கிரர்.

ஜனகரின் குழப்பம் அதிகரித்தது. அஷ்டாவக்கிரர் தொடர்ந்தார்.

கனவு கண்டபோது கனவில் கொண்ட அனுபவம் உண்மை. விழித்திருக்கும்போது விழிப்பில் ஏற்படும் அனுபவம் உண்மை. நீ கனவில் பிச்சை எடுத்தது விழித்ததும் பொய்யாகிவிடுகிறது. விழிப்பில் நீ அனுபவிப்பதும் ஒரு விதமான கனவுதான். இந்த விழிப்பைத் தாண்டிச் செல்லும்போது விழிப்பின் அனுபவங்களும் கனவைப் போலவே பொய்யாகிவிடுகின்றன. ஜனகர் கூர்ந்து கவனித்தார்.

கனவின் அனுபவம் விழிப்பில் பொய்யாகிவிடுகிறது. விழிப்பின் அனுபவம் விழிப்பைத் தாண்டிய நிலையில் பொய்யாகிவிடுகிற்து. ஜனகனின் முகத்தில் தெளிவு. விழிப்பைத் தாண்டிய நிலை எது என்னும் கேள்வி அவருள் எழுந்தது.

கனவு, ஆழ் உறக்கம், விழிப்பு, துரீயம் என்னும் நான்கு நிலைகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு நிலையில் நாம் பெறும் அனுபவங்களும் அடுத்த நிலையில் மறைந்துவிடுகின்றன. விழிப்பைத் தாண்டிய துரீய நிலையை அடைந்துவிட்டால் விழிப்பில் பெறும் அனுபவங்களும் பொய்யாகிக் கரைந்துவிடும். அப்போது ஏற்படும் அனுபவங்களைச் சொற்களால் விவரிக்க இயலாது. அந்த நிலையை எய்துபவனே ஜீவன் முக்தன் என்றார் அஷ்டாவக்கிரர்.

ஜனகரின் முகத்தில் பேரமைதி.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor