Published : 05 Oct 2013 09:23 AM
Last Updated : 05 Oct 2013 09:23 AM

எங்களோடு இந்தத் தொழில் போகட்டும்! - தலை நிமிர்ந்து வாழும் பாலியல் தொழிலாளர்கள்

கணவன் இறந்துவிட்டார், சொந்தங்கள் இல்லை, கையில் பத்து மாதக் குழந்தையுடன் பாலியல் தொழிலுக்கு வந்தவர்தான் ஜெயா. இன்று அவர் தன்னைப் போன்ற பாலியல் தொழிலாளர்களுக்கு அவர்களுடைய வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும் ஆலோசகராக மாறியுள்ளார்.



சினிமாவுக்குத் துணை நடிகையாக வந்தவர் கலைவாணி. சிங்கப்பூருக்குக் கடத்திச் செல்லப்பட்ட அவர், அவருக்கே தெரியாமல் பாலியல் தொழிலாளியாக மாற்றப்பட்டார். இன்று தன் சக பாலியல் தொழிலாளிகள், சட்டரீதியான பாதுகாப்பைப் பெறுவதற்கு உதவுகிறார்.

கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த சாந்தி என்ற பெண்ணுக்கு நான்கு குழந்தைகள். கணவர் ஓடிப்போன பின்புதான் அவருக்கே தெரிந்தது, தான் பாலியல் தொழிலுக்காக விற்கப்பட்டிருக்கிறோம் என்பது. 'தொழிலுக்கு' செல்லாவிட்டால் குழந்தைகள் கொல்லப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டதால் நான்கு ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு குழந்தைகளுடன் தப்பினார். பின்னர் அந்த நான்கு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்குவதற்கு உதவியது அதே தொழில்தான். இன்று பிற பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு அவர் ஒரு களப்பணியாளராகச் செயல்பட்டு வருகிறார்.

இப்படி பல சோகங்களைக் கொண்டதுதான் ஒவ்வொரு பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையும். சமீபத்தில் சென்னையில் நடந்த பாலியல் தொழிலாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள்தான் இவை.

சமூகத்தால் ஒதுக்கப்படும் பிரிவினர்களில் முக்கியமான இந்தப் பாலியல் தொழிலாளர்களுக்கு வெளிச்சத்துக்கு வராத இன்னொரு குணம் உண்டு. பாலியல் தொழிலுக்கு தான் ஆளாக்கப்பட்டிருந்தாலும் தன் குழந்தைகள் இந்தத் தொழிலுக்கு வந்துவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வுதான் அது.

பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படும் பிற பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்டும் இவர்கள், இதற்காகவே அமைப்பு ஒன்றை தொடங்கினர். பெண் பாலியல் தொழிலாளர்களின் நலன்களுக்காகத் தொடங்கப்பட்ட 'இந்திரா பெண் முன்மாதிரி கல்வியாளர்கள் குழு' நாளடைவில் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படும் பெண் குழந்தைகளைக் காப்பாற்றும் பணியையும் செய்யத் தொடங்கியது. இதுவரை சுமார் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறது இந்த அமைப்பு.

வேதனைகளையோ சாதனைகளின் சாயல்களையோ முகத்தில் காட்டிக் கொள்ளாமல் பேசத் தொடங்கினார் 'இந்திரா' அமைப்பின் செயலாளார் கலைவாணி. "குடும்பத்தாலோ, கணவனாலோ கைவிடப்பட்ட பெண்கள், முறையான படிப்பறிவு இல்லாததால் வேறு வேலைகள் கிடைக்காத விரக்தியில் இருக்கும் விதவைகள், காதலன் அல்லது நண்பர்களால் ஏமாற்றப்பட்ட பெண்கள், வெளி மாநிலங்களில் இருந்து கடத்தப்பட்டு வந்த பெண்கள்தான் அதிகமாகப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

காவல்துறையினர், ரெளடிகள், இடைத்தரகர்கள் சில சமயம் வாடிக்கையாளர்கள் எனப் பலரின் தாக்குதல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் பயந்துதான் இந்தத் தொழிலைச் செய்து வருகிறோம். அப்போதெல்லாம் எங்களுக்கு உதவ யாரும் முன் வந்ததில்லை. எங்களின் நிலை வேறு எந்தப் பெண்களுக்கும் வந்துவிடக் கூடாது என்பதால்தான் 2003-ம் ஆண்டு சென்னையில் உள்ள பாலியல் தொழிலாளிகளை ஒன்று சேர்த்து 'இந்திரா' என்கிற அமைப்பை உருவாக்கினோம்.

இந்த அமைப்பு இதுவரை பாலியல் தொழிலாளர்கள் தொடர்பான 58 வழக்குகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 120-க்கும் அதிகமான‌ பாலியல் தொழிலாளர்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கியிருக்கிறது. 250-க்கும் அதிகமான முன்னாள் பாலியல் தொழிலாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது.

"ஆரம்பத்தில் 20 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட எங்கள் அமைப்பில் தற்போது சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2,312 பாலியல் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். எங்கள் அனைவரின் நோக்கமும் ஒன்றுதான். அது எங்கள் குழந்தைகள் எந்தச் சூழ்நிலையிலும் இத்தொழிலுக்கு வந்துவிடக்கூடாது" என்கிறார் இந்த அமைப்பின் பொருளாளர் சாந்தி.

பாலியல் தொழில் செய்யும் பெண்களில் பலர் தங்களின் குழந்தைகளுக்குத் தெரியாமல்தான் தொழில் செய்து வருகிறார்கள். சமூகம் ஏற்கெனவே ஒதுக்கிவிட்டது. தாங்கள் செய்யும் தொழிலால் தங்கள் குழந்தைகளும் தங்களை ஒதுக்கிவிடக் கூடாது என்கிற அச்சம் இவர்களை எப்போதும் துரத்திக்கொண்டே இருக்கிறது.

"பல ஆண்டுகளாக இந்தத் தொழிலில் இருந்தாலும் யாரும் விருப்பத்துடன் இத்தொழிலைச் செய்வதில்லை. எங்களுக்குத் தனியாக நலவாரியம் அமைத்து அதன் மூலம் மாற்று வேலைவாய்ப்பு, ஓய்வூதியம் போன்று அரசின் நலத்திட்டங்கள் முறையாகக் கிடைத்தால் போதும். யாரும் இத்தொழிலைத் தொடரமாட்டோம்" என்றார் இந்த அமைப்பைச் சேர்ந்த மாலதி.

இந்த அமைப்பின் இன்னொரு ஆச்சரியமான விஷயம், பாலியல் தொழில் செய்யும் அனைத்துப் பெண்களையும் ஹெச்.ஐ.வி. பரிசோதனைக்குக் கட்டாய மாக்கியது. இதன் மூலம் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு எய்ட்ஸ் பரவலாக்கத்தை பெருமளவு குறைத்திருக்கிறோம் என்கிறார், இந்த அமைப்புக்கு வழிகாட்டும் 'இந்தியன் கம்யூனிட்டி வெல்ஃபேர்' அமைப்பின் நிறுவனர் ஹரிஹரன்.

"பொதுவாக பாலியல் தொழிலாளர்கள் மூலம்தான் அதிகளவில் எய்ட்ஸ் பரவுகிறது எனும் தவறான கருத்து மக்கள் மத்தியில் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வில் இந்த அமைப்பில் உள்ள பாலியல் தொழிலாளர்களிடமிருந்து எய்ட்ஸ் பரவுவது பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்தது. அதற்குக் காரணம் அவர்களுக்குள்ளாகவே விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டதுதான்" என்கிறார் ஹரிஹரன்.

'தன்னம்பிக்கையுடன் வாழ நினைக்கிற எங்களின் நிலையை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்' என்பதுதான் இவர்களின் அனைவரின் வேண்டுகோள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x