Last Updated : 23 Jan, 2014 07:57 PM

 

Published : 23 Jan 2014 07:57 PM
Last Updated : 23 Jan 2014 07:57 PM

ஊர்க்காவல் படை பயிற்சியில் திருநங்கைகள்: முன்னோடியாகத் திகழ்கிறது மதுரை மாவட்ட காவல் துறை

ஊர்க்காவல்படையில் சேர்க்கப்பட்டுள்ள 6 திருநங்கைகளுக்கு திருமங்கலம் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

திருநங்கைகள் அனைத்து துறைகளிலும் கால்பதித்து முன்னேற்றம் கண்டு வருகின்றனர். இவர்களுக்கு சமூகரீதியான அங்கீகாரத்தை அளிக்கும் வகையில், நாட்டிலேயே முதல்முறையாக திருநங்கைகளை ஊர்க்காவல்படையில் சேர்த்துக் கொள்ள மதுரை மாவட்ட காவல்துறை முடிவு செய்தது.

இதையடுத்து மதுரையைச் சேர்ந்த திருநங்கைகள் 14 பேர் கடந்த மாதம் மதுரை எஸ்.பி. வீ.பாலகிருஷ்ணனிடம் இதற்கான விண்ணப்பங்களை அளித்தனர். அதனைப் பரிசீலனை செய்ததில் 7 பேர் நிராகரிக்கப்பட்டனர். மீதமுள்ள 7 பேருக்கு சேர்க்கை அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் ஒருவர் வர மறுத்துவிட்டார். எனவே மீதமுள்ள 6 பேருக்கு திருமங்கலத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மைதானத்தில் கடந்த 17-ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

எம்.சி.ஏ. பட்டதாரி

இந்த 6 திருநங்கைளில் ஒருவர் எம்.சி.ஏ. பட்டதாரி. 2 பேர் பி.ஏ. முடித்தவர்கள். மற்றவர்கள் 10, பிளஸ் 2 படித்தவர்கள். தற்போது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்ந்து வரும் இவர்கள், தங்களுக்குள் மறைந்திருக்கும் திருநங்கை என்ற மற்றொரு முகம் வெளி உலகுக்குத் தெரிய வேண்டாம் என்பதால் பெயர், முகவரி உள்ளிட்ட எந்த அடையாளத்தையும் வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் அவர்கள் பேசத் தொடங்கினர்.

அவர்களில் மதுரையைச் சேர்ந்த 26 வயதுடைய திருநங்கை கூறுகையில், ‘திருநங்கைகள் சமூகத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இந்த பணி எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நான் சென்னையிலுள்ள ஐ.டி கம்பெனி ஒன்றில் அதிகாரி நிலையில் 2 ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது எனது நடை, பேச்சு ஆகியவற்றில் சந்தேகம் ஏற்பட்டதால், அந்நிறுவனத்தினர் நான் திருநங்கை என உறுதி செய்து பணியிலிருந்தே நீக்கிவிட்டனர். எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும், சமுதாயம் இன்னும் எங்களை ஏற்றுக்கொள்வதில் எந்தளவுக்கு தயக்கம் காட்டுகிறது என்பதை இந்த ஒரு நிகழ்வே உணர்த்தும். அதுபோன்ற காயங்களை மறக்கச் செய்யவும், என்னைப்போல் உள்ள திருநங்கைகளின் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் இந்த பணி பேருதவியாக இருக்கும்’ என்றார்.

திருந்தியதால் கிடைத்தது பலன்

மற்றொரு திருநங்கை கூறுகையில், சிறு வயதிலேயே உடல்ரீதியாக பெண்தன்மை ஏற்பட்டதால் வீட்டிலிருந்து வெளியேறி கேரளம் சென்றேன். அங்கு 10 ஆண்டுகள் முறையற்ற பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த என்னை, பெற்றோர் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் மதுரைக்கு கொண்டு வந்தனர். தற்போது திருந்தி வாழ்கிறேன். மேலும் சமூக நல மேம்பாட்டுச் சங்கம் என்பதில் என்னை இணைத்து, எச்.ஐ.வி. விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறேன். திருந்தி வாழும் திருநங்கைகளுக்கு இதுபோன்ற பணி வாய்ப்பு இருப்பதால் இன்னும் பலர் இதில் சேர முன் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இந்த முயற்சியை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கும், மதுரை எஸ்.பி.க்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்’ என்றார்.

35 நாள் பயிற்சி

இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து எஸ்.பி. வீ.பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘ஊர்க்காவல்படையில் காலியாக இருந்த இடங்களுக்கு அண்மையில் ஆட்களைத் தேர்வு செய்தோம். அதில் ஆண் என்ற பிரிவின் கீழ் 6 திருநங்கைகளுக்கு பணி வாய்ப்பு வழங்கி, அணிவகுப்பு, லத்தி சுழற்றுதல், போக்குவரத்து மேலாண்மை, நெரிசலைக் கட்டுப்படுத்தும் முறை போன்றவை குறித்து பயிற்சி அளித்து வருகிறோம்.

35 நாள் பயிற்சிக்குப் பின் இவர்கள் சீருடையுடன் ஊர்க்காவல்படையில் ஈடுபடுவர். மதிப்பூதியமாக நாளொன்றுக்கு ரூ.150 வழங்கப்படும். பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், நீதிமன்றப் பணி, தபால் பணி, காவல்துறையினருடன் ரோந்து போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுவர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x