Published : 22 Mar 2017 10:06 AM
Last Updated : 22 Mar 2017 10:06 AM

உள்ளாட்சி: ஐந்து ஆண்டுகள்... ஏழரை லட்சம் வேலைகள்... ரூ.25 ஆயிரம் கோடிகள்... எங்கே போனது மக்கள் பணம்?

ஒரு சுற்றுலா செல்வோமா? இன்பச் சுற்றுலா. ஆனால், கற் பனைச் சுற்றுலா. விளையாட்டு அல்ல, சொல்லப்போனால் மன நல மருத்துவத்தில் கையாளப்படும் உளவியல் சிகிச்சைகளில் முக்கிய மான ஒன்று இது.

வரலாறு காணாத வறட்சியை காணப்போகும் தமிழகத் துக்கு இத்தகைய அவசர சிகிச்சை மிக, மிக அவசியம். சிகிச்சையை தொடங்குவோம். கண்களை மூடிக் கொள்ளுங்கள். தமிழகத்தை கழுகுப் பார்வையில் பாருங்கள்.

சென்னை எவ்வளவு அழகாக இருக்கிறது, செம்பரம்பாக்கம் ஏரி யும் மணிமங்கலம் ஏரியும் நிரம்பி வழிகின்றன. கூவத்திலும் பக்கிங் ஹாம் கால்வாயிலும் படகுகள் ஓடு கின்றன. பச்சைப் பசுமையாக காட்சியளிக்கிறது காஞ்சிபுரம். எங்கு பார்த்தாலும் ஏரிகள். சூரிய ஒளி பட்டு நீல நிற வைரங்களாக அவை கண்களை கூச வைக்கின்றன.

வேலூரில் கரை புரண்டு ஓடுகிறது பாலாறு. நொய்யலின் கழுத்தில் வைர மாலையைத் தொங்க விட்டதுபோல இருபுறமும் வரிசையாக இருக்கும் குளங்களில் தண்ணீர் தளும்புகிறது. சிறுவாணியும் பவானியும் மோயாறும் பளிங்குபோல தெளிந்து ஓடுகின்றன.

டெல்டாவை பார்க்கும்போதே குளிர் கிறது. எங்கும் பச்சை தரித்திருக்கிறது பூமி. வளைந்து நெளிந்து ஓடுகிறாள் காவிரி. வீதிதோறும் ஓடும் கால் வாய்களில் சிறுவர்கள் குதித்து விளையாடுகிறார்கள். விவசாயிகள் கலகலப்பாக வேலை செய்கிறார்கள். மதுரையிலும் ராமநாதபுரத்திலும் வைகை யும் அவற்றின் குழந்தைகளான குளங்களும் கண்கொள்ளாக் காட்சி களாய் விரிகின்றன. தவழ்ந்து வரும் தாமிரபரணியையும் நிரம்பிக் கிடக்கும் பாண்டியர் அணைக்கட்டுகளையும் காண கண்கோடி வேண்டும். சுற்று லாவை முடித்துக்கொள்வோமா?

நிஜத்துக்கு வருவோம். இப்போது நீங்கள் பார்த்தது எதுவும் கற்பனை இல்லை. முழுக்க முழுக்க உண்மை. முகத்தில் அறையும் உண்மை. அத்தனையும் சத்தியம். நான் சொல்ல வில்லை. அரசாங்கம் சொல்கிறது. அரசாங்கத்தின் ஆவணங்கள் சொல் கின்றன. ஆவணங்களின் புள்ளி விபரங்கள் சொல்கின்றன.

அந்த ஆவணங்களில் தமிழகம் ஒளிர்கிறது, மிளிர்கிறது, மிடுக்கு நடை போடு கிறது. அந்த ஆவணங்களில் எழுதப் பட்டுள்ள கணக்கின்படி பார்த்தால் மேற்கண்ட வர்ணனை கூட குறைவு தான். இன்னும் சொல்லப்போனால் தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமல்ல, ஆசியாவின் முதன்மை மாநிலமாகவும் திகழக்கூடும்.

குறிப்பாக நீர் நிலைகளை மேம் படுத்தவும் வறட்சியை போக்கவும் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் செய்யப்பட்ட வேலைகளை மட்டும் எடுத்துக் கொள்வோம். ஒவ் வொரு வட்டாரத்துக்கும் இரண்டு பொறியாளர்கள், மூன்று பணி மேற்பார்வையாளர்கள், மூன்று கணினி இயக்குநர்கள், தலா ஒரு துணை வட்டார வளர்ச்சி அலுவலர், அவர்களுக்கு தலா ஒரு உதவியாளர் என 1901 பேர் பணிபுரிகிறார்கள்.

இவர்களைக் கண்காணிக்கவும், திட் டங்களைத் தீட்டவும், வேலை வாங்க வும் நூற்றுக்கணக்கான உயர திகாரிகள், ஐ.ஏ.எஸ்-கள், மாவட்டந் தோறும் ஆட்சியர்கள் இருக்கி றார்கள். இவர்களுக்கு மேல் சட்டப் பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாண்புமிகு அமைச் சர்கள், முதலமைச்சர்.

இப்படியான மாபெரும் அதி காரமும் பணபலமும் பொருந்திய தமிழக அரசு இயந்திரம் கடந்த 2012-13 நிதியாண்டு தொடங்கி, 2016-17 நிதியாண்டின் இந்த மாதம் வரை தமிழகத்தின் நீர் நிலைகளில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் மட்டும் செய்துள்ள பணிகளைப் பார்ப்போமா?

மாநிலம் முழுவதும் வெள்ளக் கட்டுப்பாடு திட்டத்தில் 4,064 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் ரூ.85 கோடி மனித உழைப்பு ஊதிய மாக வழங்கப்பட்டிருக்கிறது. கருவி களின் செயல்பாட்டுக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் செலவிடப்பட்டி ருக்கிறது. தண்ணீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேமிப்பு திட்டத்தில் 92,856 பணிகள் நடந்திருக்கின்றன. இதற்காக ரூ.2,673 கோடி ஊதியமாக வழங்கப் பட்டிருக்கிறது. கருவிகளின் செயல் பாட்டுக்கு ரூ.48 கோடி செலவிடப் பட்டிருக்கிறது.

பாரம்பரிய நீர் நிலைகள் புனரமைப்புத் திட்டத்தில் 3,13,710 பணிகள் நிறைவேற்றப்பட்டி ருக்கின்றன. ரூ.11,096 கோடி ஊதிய மாக வழங்கப்பட்டிருக்கிறது. கருவிகளின் செயல்பாட்டுக்கு ரூ.188 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. வறட்சி பாதுகாப்பு திட்டத்தில் 36,536 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரூ.326 கோடி ஊதியமாக வழங்கியி ருக்கிறார்கள். ரூ.14 கோடி கருவி களின் செயல்பாட்டுக்கு செலவிடப் பட்டிருக்கிறது.

கால்வாய்கள் புனரமைத்தல் திட் டத்தில் 72,745 பணிகள் செய்திருக்கி றார்கள். ரூ.1,875 கோடி ஊதியமாக வழங்கி இருக்கிறார்கள். ரூ.32 கோடி கருவிகளின் செயல்பாட்டுக்கு செலவிடப்பட்டிருக்கிறது. பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தினரின் பாசன ஆதாரங்களை மேம்படுத்து வதற்காக 2,57,062 பணிகளைச் செய்திருக்கிறார்கள். ஊதியமாக ரூ.325 கோடி வழங்கியிருக்கிறார்கள்.

கருவிகளின் செயல்பாட்டுக்கு ரூ.77 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. மொத்தமாக கடந்த ஐந்து ஆண்டு களில் வறட்சியை தடுப்பது, நீர் நிலைகள் மற்றும் விவசாயி களின் மேம்பாட்டுக்காக மட்டும் 7,76,973 பணிகள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. ரூ.23,552 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. இதில் ரூ.18,788 கோடி ஊதியமாக வழங்கப் பட்டிருக்கிறது.

நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் மட்டுமே இத்தனை பணிகள். சுமார் கால் லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இதுமட்டுமா? பொதுப்பணித் துறை, வேளாண்மைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, நீர் வள ஆதாரப் பிரிவு, அணைப் பாதுகாப்புப் பிரிவு, வடிவமைப்பு, ஆராய்ச்சிகள் மற்றும் கட்டுமான ஆதரவுப் பிரிவு, திட்ட உருவாக்கப் பிரிவு, நிலத்தடி நீர்ப் பிரிவு, நீர் வள மையம் என துறை வாரியாக, பிரிவுகள் வாரியாக ஏராளமான திட்டங்களைச் செயல் படுத்தியிருக்கிறார்கள். மேற்கண்ட புள்ளிவிபர தொகையுடன் சேர்த்தால் தோராயமாக ஐந்து ஆண்டுகளில் அரை லட்சம் கோடி ரூபாயாவது நீர் நிலை ஆதாரங்களை மேம்படுத்த செலவழித்திருக்கக் கூடும்.

அரசு ஆவணங்கள் சொல்வது உண்மையெனில் எங்கே போயின தூர் வாரிய குளங்கள்? எங்கே போயின தூர் வாரிய ஏரிகள்? எங்கே போயின தூர் வாரிய கண்மாய்கள்? எங்கே போயின கால்வாய்கள்? சேகரித்த தண்ணீர் எல்லாம் எங்கே போனது? மக்களின் உழைப்பெல்லாம் என்ன ஆனது? ஆவணங்களில் கணக்கு காட்டியது போல அரசாங்கம் செய்திருந்தால் தமிழக விவசாயி செத்து நாற்றமெடுக்கும் எலியை வாயில் கடித்துக்கொண்டு ஏன் போராட வேண்டும்?

மானங்கெட வெறும் கோவணத்தைக் கட்டிக் கொண்டு தலைநகரில் ஏன் தலையில் அடித்துக்கொள்ள வேண்டும்? யோசித் துப் பாருங்கள், நல்ல மன நிலையில் இருந்தால் அவர்கள் இவ்வாறு எல்லாம் செய்வார்களா? விவசாயிகளின் பணத்தைச் சாப்பிடுவது அசிங்கம் இல்லையா? அது பெற்ற தாயை விற்பதற்கு சமம் இல்லையா?

- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x