Published : 28 Jun 2016 11:05 AM
Last Updated : 28 Jun 2016 11:05 AM

உங்கள் குரல்: மின் மீட்டர் பழுதால் உயர்ந்த கட்டணம்

மின் மீட்டரில் பழுது காரணமாக கட்டணம் அதிக அளவில் வருவதால் பாதிப்புக்கு உள்ளாவதாக வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரல் சேவை வழியாக, கிழக்குத் தாம்பரத்தைச் சேர்ந்த கல்யாணி கூறியதாவது:

எங்கள் வீட்டில் ஒரு முனை மின் இணைப்பு உள்ளது. வழக்கமாக ரூ.500க்குள் தான் எங்களுக்கு மின்கட்டணம் வரும். கடந்த முறை, ரூ.2ஆயிரத்துக்கு மேல் கட்டணம் வந்தது. இது தொடர்பாக மின்வாரியத்துக்கு புகார் அளித்தபோது, மின்கட்டணத்தை கட்டுங்கள். பிறகு பார்க்கலாம் என்றனர். உடனே மின்கட்டணம் கட்டிவிட்டோம். கட்டிய அன்றே, மின்வாரியத்தினர் வந்து பார்த்து, மீட்டர் பழுது என, அதை மாற்றி விட்டு சென்றனர். அதன் பின் தற்போது 160 யூனிட் மின்சாரமே பயன்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் கட்டிய பணத்தை கேட்டு செயற்பொறியாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கேட்டபோது, இணையதளம் வாயிலாக புகாரை பதிவு செய்யும்படி கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக, மின்வாரிய அதிகாரி கூறியதாவது: வழக்கமாக மின் மீட்டரில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, கட்டணத்தை செலுத்திவிட்டால், கட்டணம் அடுத்தடுத்த மாதங்களில் கழித்துக் கொள்ளப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மின்வாரிய செயற்பொறியாளருக்கு கடிதம் எழுத வேண்டும். மூன்று மாத கட்டணங்களின் சராசரி தொகை, முதலில் மின்கட்டணமாக கழிக்கப்படும். மீதமுள்ள தொகை இருப்பின், அடுத்தடுத்த மாதங்களில் கழிக்கப்படும். இதை மறுக்க முடியாது. மின்நுகர்வோர், இது போன்ற மின் மீட்டர் பிரச்சினைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட பகுதி மின்வாரிய அதிகாரிகளிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றார்.

ஸ்டான்லி மருத்துவமனையில் ஆவின் பாலகம் வைக்க அனுமதி தேவை

ஸ்டான்லி மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக் குமார், ‘தி இந்து’வின் உங்கள் குரல் சேவை வழியாக கூறியதாவது: மாற்றுத்திறனாளியான எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது நான் வியாசர் பாடி ரயில் நிலையம் செல்லும் வழியில், நாளிதழ்கள் விற்பனை செய்து வருகிறேன். இதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குழந்தைகளை வளர்க்கிறேன்.

கடந்தாண்டு ஜூன் 16-ம் தேதி, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி என்ற அடிப்படை யில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி கோரி முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்தேன். இந்த மனு மீது நட வடிக்கை எடுத்து, பொதுப்பணித் துறையினர் கடந் தாண்டு அக்டோபர் 28-ம் தேதி பதில் அளித்தனர். அதில், சுகாதாரத்துறை தடையின்மை சான்று வழங்கினால், அனுமதியளிப்பதாக கூறினர். தொடர்ந்து சுகாதாரத் துறையை அணுகியபோது, தற்போது மருத்துவமனை களில் தனியார் நடத்தும் கேன்டீனுக்கு அனுமதியளிப் பதில்லை என தெரிவித்தனர். இது தொடர்பாக அரசாணை இருப்பதாகவும் கூறினர். ஆனால், அந்த அரசாணையில் தனியார் கேன்டீனுக்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் சுகாதாரத்துறை செயலருக்கு மனு அனுப்பியுள்ளேன். எனது ஏழ்மை நிலை கருதி, அனுமதியளிக்கும்படி கோரியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக, ஸ்டான்லி மருத்துவமனை அதிகாரியி டம் கேட்டபோது,‘‘ மருத்துவமனை வளாகத்தில் ஆவின் பாலகம் வைக்க தடையேதும் இல்லை. சுகாதாரத்துறையில் அனுமதி பெற்றால் வைக்கலாம்’’ என்றார்.

அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் குளறுபடி

அரும்பாக்கத்தில் நியாயவிலைக் கடை ஒன்றில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் குளறுபடி செய்வதாக வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

அரும்பாக்கத்தைச் சேர்ந்த வாசகி ஒருவர் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை வழியாக கூறிய தாவது: அரும்பாக்கம், வள்ளுவர் சாலையில் உள்ள நியாயவிலைக்கடைக்கு உட்பட்ட பகுதி யில் 1,400 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்குகின்றனர். ஆனால், பெரும்பாலும் 700 அட்டைதாரர்களுக்கு மட்டுமே எல்லா பொருட் களும் கிடைக்கின்றன. குறிப்பாக துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு சரிவர கிடைப்பதில்லை. இது தொடர்பாக, கேட்டால் எங்களுக்கு வந்துள்ள பொருட்களை மட்டுமே விநியோகிக்கிறோம் என்கின்றனர். அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கிவிட்டால், பருப்பு, உளுந்து போன்றவற்றை வழங்க மாட்டார்கள். இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக, உணவுத்துறை அதிகாரி யிடம் கேட்ட போது, ‘‘ தற்போது அத்தியாவசிய பொருட்கள் கிடங்குகளில் இருந்து சரியான அளவுக்கு அனுப்பப்படுகிறது. பொருட்களை தேவையான அளவுக்கு இருப்பு வைத்து வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தர விடப்பட்டுள்ளது. தற்போது விற்பனை முனை இயந்திரம் பல இடங்களில் நிறுவப்பட்டு வருகிறது. இதன் மூலம், கடைகளின் இருப்பு நிலவரத்தையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்’’ என்றார்.

அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x