Published : 31 May 2016 11:05 AM
Last Updated : 31 May 2016 11:05 AM

உங்கள் குரல்: காலை 6 மணிக்கே மது விற்பனை

புதிய கட்டிடத்தில் தட்டச்சு பிரிவுக்கு அறை ஒதுக்கப்படுமா?

செங்கல்பட்டு நகராட்சி அலுவலகத்தின் புதிய கட்டிடத்தில், தட்டச்சு பிரிவுக்கு அறை ஒதுக்கப்படாததால், இடியும் நிலையில் உள்ள பழைய கட்டிடத்தில் தட்டச்சு பிரிவு செயல்படும் அபாய நிலை உள்ளதாக, உங்கள் குரலில் அப்பகுதி வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு நகராட்சி அலுவலகம் வேதாச்சல முதலியார் கட்டிடத்தில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய முடியாததால், நகராட்சி அலுவலகத்துக்கு கடந்த 2013-ம் ஆண்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, நகரமன்ற கூட்டம் உட்பட அனைத்து பிரிவுகளும் புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், தட்டச்சு பிரிவுக்கு புதிய கட்டிடத்தில் அறை ஒதுக்கப்படாததால், இடியும் நிலையில் உள்ள பழைய கட்டிடத்திலேயே செயல்படும் நிலை உள்ளது. இதனால், அதில் பணி புரியும் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்ற வேண் டிய நிலை உள்ளதால், நகர வாசிகள் ‘தி இந்து’வின் உங்கள் குரல் பிரிவில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் முகம்மது மொய்தீன் கூறியதாவது: பழைய கட்டிடம் இடியும் நிலையில் உள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது. பழைய கட்டிடத்தில் வேறு சில பிரிவுகளும் செயல்படுகின்றன. தட்டச்சு பிரிவு பழைய கட்டிடத்தில் செயல்படுவது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால், இது மாதிரியான புகார் களை தெரிவிக்கின்றனர். எனினும், இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



தாம்பரம் மார்க்கெட் டாஸ்மாக்கில் காலை 6 மணிக்கே மது விற்பனை

காஞ்சிபுரம் மாவட் டம், தாம்பரம் மார்க்கெட் பகுதி பிரதான சாலையில் 2 அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நிலையில், காலை 6 மணிமுதலே இந்த கடைகளில் மது விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி வாசிகள் ‘தி இந்து’வின் உங்கள் குரல் சேவையில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த ஜேஆர் என்பவர் கூறும்போது, “தாம்பரம் பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகே இருப்பதால் மார்க்கெட் பகுதி எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் வந்து செல்லும் இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடைகள் செயல்படுவது மிகவும் வேதனையான ஒன்று. மேலும், பிற்பகல் 12 மணிக்கு மட்டுமே டாஸ்மாக் கடை திறக்கப்பட வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இங்கு உள்ள டாஸ்மாக் கடையில் காலை 6 மணி முதலே மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால், காலையில் மார்க்கெட் பகுதிக்கு வரும் பெண்கள் கடும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் பிரிவு மண்டல மேலாளரிடம் கேட்டபோது, “தாம்பரம் மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், காலையிலேயே மது விற்பனை செய்யப்படுவது தொடர்பாக, இதுவரை எந்தவிதமான புகாரும் எனது கவனத்துக்கு வரவில்லை. எனினும், இது தொடர்பாக விசாரித்து சம்பந்தப்பட்ட கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.



செயல்படாத நிறுவன கட்டிடத்தில் சமூகவிரோத செயல்கள்

சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் காமராஜர் சாலையில் உள்ள செயல்படாத தனியார் நிறுவன கட்டிடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறு வதாக வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை வழியாக ஆர்.கே.நகரைச் சேர்ந்த வாசகர் ஒருவர் தெரிவித்ததாவது:

ஆர்.கே.நகரில், 40-வது வட்டம் பகுதியில் காமராஜர் சாலையில் மெட்டல் பாக்ஸ் என்ற தனியார் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் தற்போது செயல்படவில்லை. இதனால் இந்த நிறுவனத்தின் கட்டுமானம் பாழடைந்து, புதர் மண்டிக் கிடக்கிறது. இதில் பல்வேறு சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கொலையும் நடந்துள்ளது. இரவு நேரங்களில் சிலர் குடித்துவிட்டு கலாட்டா செய்கின்றனர். மேலும் அப்பகுதியில் மின்விளக்குகள் சரியாக எரியாததால் எப்போதும் இருட்டாகவே இருக்கும். இதனால் அப்பகுதியைச் சுற்றி வசிப்போர் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அதனால் அந்நிறுவனத்தின் பாழடைந்த கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்றார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “சம்பந்தப்பட்ட இடம் தனியாருக்கு சொந்தமானது என்பதால், மாநகராட்சி யால் அகற்ற முடியாது. சம்பந்தப்பட்ட நிறுவன நிர்வாகத்தை அணுகி, அப்பகுதியை சமூக விரோதிகள் அணுகாதவாறு பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படும்” என்றார்.





அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x