Published : 23 Jan 2014 02:36 PM
Last Updated : 23 Jan 2014 02:36 PM

இஷ்டம் போல் விலையை உயர்த்தும் தனியார் பால் நிறுவனங்கள்- தமிழக அரசு தலையிட மக்கள் கோரிக்கை

தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் தன்னிச்சையாகப் பால் விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருப்பதால், அவற்றை மட்டுமே நம்பியிருக்கும் பல்லாயிரம் குடும்பங்கள் அவதிக்குள்ளாகி வருகின்றன.

ஆவின் கூட்டுறவு மையங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலையை கடந்த டிசம்பர் மாதம் ரூ.3 ஆக அரசு உயர்த்தியது. ஆனால் ஆவின் பால் விலையை அரசு உயர்த்தவில்லை.

ஆனால், தனியார் நிறுவனங்கள் பால் விலையைத் தன்னிச்சையாக உயர்த்தி வருகின்றன. கடந்த ஆண்டுதான் ஆகஸ்ட் மாதம் ஒரு லிட்டர் பாலின் விலையில் ரூ. 2-ஐ அவை உயர்த்தின.

இந்தாண்டும் முன்னணி தனியார் பால் நிறுவனங்களான திருமலா, டோட்லா, ஹெரிடேஜ், ஜெர்சி ஆகிய நிறுவனங்கள் ரூ. 36 க்கு விற்று வந்த ஒரு லிட்டர் கொழுப்பு நிறைந்த பாலைத் திங்கள்கிழமை முதல் ரூ.2 உயர்த்தி ரூ. 38க்கு விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன. அதேபோல் கொழுப்பு நீக்கப்பட்ட ஒரு லிட்டர் பாலின் விலை ரூ. 40 க்கு விற்பனையாகிறது.

உயர்த்தப்பட்டுள்ள பால் விலை குறித்துத் தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். ஏ. பொன்னுசாமி கூறியதாவது:-

நால்வர் குழு

மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 1.50 கோடி லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது.பெரும்பாலும் இது தனியார் மற்றும் ஆவின் நிறுவனங்களின் மூலம்தான் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

எனவே பால் விலையை நிர்ணயம் செய்ய அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரி, பால் உற்பத்தியாளர் நிறுவனம், முகவர்கள் மற்றும் பொது மக்கள் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். பால் விலையை உயர்த்தும் அதிகாரம் அரசிடம் தான் இருக்க வேண்டும்,'' என்றார்.

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் தினமும் 22 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது என ஆவின் அதிகாரி ஒருவர் கூறினார்.

டீ விலை உயரும்

கடைகளில் பயன்படுத்தப்படும் வர்த்தகச் சிலிண்டர் விலை தற்போது ரூ. 400 உயர்ந்துள்ளதால் ஒரு கப் டீயின் விலை ரூ.7 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பெரும்பாலான டீ கடைகளில் தனியார் பால் பாக்கெட்டுகளைத் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.தற்போது உயர்ந்துள்ள தனியார் பால் விலை உயர்வால் டீ மற்றும் காபியின் விலை இன்னும் கடுமையாக உயரும் அபாயம் உள்ளது.

பெரும்பான்மையான மக்கள் மற்றும் டீ கடை உரிமையாளர்கள் பயன்படுத்தி வரும் தனியார் நிறுவன பாலின் விலையை தன்னிச்சையாக நிறுவனங்கள் உயர்த்துவதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பதே மக்களுடைய கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x