Published : 06 Oct 2016 04:02 PM
Last Updated : 06 Oct 2016 04:02 PM

அன்பாசிரியர் தொடர் எதிரொலி: அரசுப் பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறையை மேம்படுத்த உதவிய தி இந்து வாசகர்கள்!

மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும், அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை அடையாளப்படுத்துவதும், அறிமுகம் செய்து வைப்பதுமே 'அன்பாசிரியர்' தொடரின் நோக்கம்.

இந்தத் தொடரில் அரசுப் பள்ளிகளின் தற்போதைய நிலையையும் தவறாமல் குறிப்பிடுகிறோம். இதைத் தொடர்ந்து படித்துவரும் 'தி இந்து' வாசகர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

>அன்பாசிரியர் 27: செல்வக்கண்ணன்- ரூ.40 லட்சம் திரட்டி அரசு பள்ளியின் தரம் உயர்த்திய தலைமை ஆசிரியர் தொடரை வெளிநாட்டில் இருந்து படித்த பள்ளியின் முன்னாள் மாணவர் தன் நண்பர்களோடு இணைந்து பள்ளிக்கு உதவியிருக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார் அன்பாசிரியர் செல்வக்கண்ணன்.

''கட்டுரை வெளியான நாளில் இருந்து, தூங்கும் நேரம் தவிர்த்து இப்போது உங்களிடம் பேசும் வரை, 'தி இந்து' வாசகர்களிடமிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. இத்தனை வருட உழைப்புக்கான அங்கீகாரம் ஒரே நேரத்தில் கிடைத்து விட்டதுபோல தோன்றுகிறது.

இணையதள ஊடகத்தின் வீச்சை இன்று முழுமையாக உணர்ந்திருக்கிறேன். மாவட்ட அளவில் பேசப்பட்டுக்கொண்டிருந்த எங்கள் பள்ளி இன்று உலகளவில் சென்றடைந்திருக்கிறது.

எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவரான பாரதிராஜா இப்போது இங்கிலாந்தில் பணிபுரிகிறார். 'தி இந்து' தமிழ் இணையதளத்தில் வெளியான அன்பாசிரியர் தொடரைப் படித்தவர், நாம் படித்த பள்ளிக்கு எதாவது செய்ய வேண்டும் என்றெண்ணி, ஊரில் இருக்கும் தன் நண்பர்கள் சிவா மற்றும் ரமேஷிடம் பேசியிருக்கிறார். முன்னாள் மாணவர்கள் மூவரும் இணைந்து பள்ளிக்கு என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டனர். ஸ்மார்ட் வகுப்பறைக்கு டைல்ஸ் ஒட்டப்பட வேண்டும் என்று கூற, உடனே 20 ஆயிரம் ரூபாயை வழங்கினர்.

அதே போல சதீஷ் குமார் என்னும் தொழிலதிபர் தன் நண்பர்களுடன் இணைந்து 45 ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார். இதனால் டைல்ஸ் ஒட்டும் பணி விரைவில் முடிந்தது. செய்தியைப் படித்த தனியார் பள்ளிகளுக்கு மரவேலை செய்துகொடுக்கும் நண்பர், எங்கள் பள்ளி ஸ்மார்ட் வகுப்பறைக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவில், இலவசமாக அலமாரிகள் செய்து தந்துள்ளார்.

பெற்றோர்கள் உதவி

இவையெல்லாவற்றைக் காட்டிலும் முக்கியமானது பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மூவர் உதவியதுதான். சாந்தகுமார், ராமச்சந்திரன், முத்துராமலிங்கம் ஆகியோர் கட்டமைப்புக்கான மணல் செலவை ஏற்று, 1 லோடு மணலை இலவசமாக வழங்கியுள்ளனர்.

பெரும்பாலும் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களே தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்கின்றனர். அவர்களே பள்ளிக்கு உதவும்போது நம்மீது எவ்வளவு நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. இவை அனைத்தையும் சாத்தியமாக்கிய 'தி இந்து'வுக்கு நன்றி என்று நெகிழ்கிறார் அன்பாசிரியர் செல்வக்கண்ணன்.

இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x