Published : 30 Jan 2019 10:06 AM
Last Updated : 30 Jan 2019 10:06 AM

இப்படிக்கு இவர்கள்: தெலங்கானா- சிறப்பான முன்னுதாரணம்!

கடன் தள்ளுபடி தவிர்க்க முடியாதது...

ஜனவரி-29 அன்று வெளியான அ.நாராயணமூர்த்தியின் ‘விவசாயிகளுக்கு நேரடிப் பணவரவுத் திட்டம்: தெலங்கானா காட்டும் பாதை!’ கட்டுரை, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தரக்கூடியது. பொருளாதாரச் சிக்கலில் சிக்கி, செய்வதறியாது திகைத்து நிற்கும் விவசாயிகளை அச்சிக்கல்களிலிருந்து மீட்டெடுக்க ‘ரயத்து பந்து’ முறை திட்டம் பேருதவியாக இருக்கும். ஆனால், அதை நடைமுறைப்படுத்தும் முன், விவசாயிகளின் கடன்கள் முழுவதையும் ரத்துசெய்தால்தான் அத்திட்டம் சிறப்பானதாக அமையும். ஏனெனில், நேரடிப் பணவரவுத் திட்டம் மூலம் கிடைக்கும் பணம், ஆக்கபூர்வ வேலைக்குப் பயன்படாமல், ஏற்கெனவே உள்ள கடன்களுக்குத்தான் அது போய்ச் சேரும். எந்த ஒரு ஆலையும் அதன் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை ஆலை நிர்வாகமே நேரடியாகச் சென்று கொள்முதல் செய்யும்போது, சர்க்கரை உற்பத்தியில் மட்டும், விவசாயிகளே ஆலையின் வாயிலில் கரும்பைக் கொண்டுசேர்க்கும் அவலத்தை நீக்க வேண்டும். கரும்பின் கொள்முதல் விலைக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும். இந்தியா கிராமங்களில் உயிர்ப்போடு வாழவும், கிராமப் பொருளாதாரம் உயரவும் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் அவர்களுக்குக் குறைந்தபட்ச நிரந்தர வருமானம் கிடைக்கப்பெற உத்தரவாதம் அளிக்கும் வகையில், செயல்திட்டம் வகுத்து அதை அமல்படுத்த வேண்டும்.

- கே.வி.ராஜ்குமார், (தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் - சிஸ்ஃபா, தமிழ்நாடு), போளூர்.

தெலங்கானா: சிறப்பான முன்னுதாரணம்!

விவசாயிகளுக்கு நேரடிப் பணவரவுத் திட்டம் - விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தெலங்கானா காட்டும் பயனுள்ள, சரியான பாதையாகும். விவசாய உற்பத்திச் செலவு அதிகரித்தல், விளைவித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல்போவது போன்ற பிரச்சினைகளால் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாவது, விவசாயத்தையே வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் 86% குறு மற்றும் சிறு விவசாயிகள் மட்டுமே. நேரடிப் பணவரவுத் திட்டம், கடன் வாங்குவதைக் கட்டுப்படுத்தும். மேலும், அவர்கள் பயிர் செய்வதையும் ஊக்குவித்து அவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும். பெரு விவசாயிகளுக்கு உச்ச வரம்பு என்பதும் சிறப்பான யோசனை. இவற்றோடு அரசு விவசாயிகளிடம் சந்தைப்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால், விவசாயிகளின் மறுமலர்ச்சிக்கு நல்லதொரு தொடக்கமாக இருக்கும்.

- மு.விஜயலட்சுமி, மின்னஞ்சல் வழியாக.

அறிக்கை திருப்திதான்; ஆனால்...

2018-ம் ஆண்டுக்கான கல்விநிலை ஆண்டறிக்கையிலிருந்து பள்ளிக்கல்வித் துறையில் எந்தெந்த விஷயங்களுக்கு முன்னுரிமையும் கூடுதல் கவனமும் கொடுக்கப்பட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தொடக்கப் பள்ளி மாணவர்களின் கற்கும் திறன் ஓரளவு மேம்பட்டுள்ளது என்று அறிக்கை தெரிவித்தாலும், இது எந்த வகையிலும் திருப்திகரமானதாக இல்லை. பள்ளிக் கல்வியை மேம்படுத்த மாநில அரசு ஏராளமான திட்டங்களையும் ஊக்குவிப்பு என்ற பெயரில் இலவசங்களை வழங்கினாலும், அடிப்படையான ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படாமலே இருக்கிறது. அரசுத் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் போதிய கற்பிக்கும் திறனுடனும் ஊக்கத்துடனும் இருக்கிறார்களா என்பதையும் ஆய்வுசெய்ய வேண்டும். ஆசிரியர்களை மேம்படுத்தாமல் அவர்கள் உருவாக்கும் மாணவர்களை மேம்படுத்த இயலாது.

- நா.புகழேந்தி, பழைய ஆயக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x