Published : 23 Aug 2018 10:02 AM
Last Updated : 23 Aug 2018 10:02 AM

இப்படிக்கு இவர்கள்: செல்போனின் சீரழிவுகளில் செல்ஃபியும் ஒன்று

காவிரியாற்றின் பாலத்தில் செல்ஃபி எடுக்க முயன்று தன் நான்கு வயது மகனைத் தவறவிட்ட தந்தை பற்றிய செய்தி வாசித்துக் கண் கலங்கினேன். ஆற்றில் விழுந்த ஒருவரைக் கரைசேர்க்க முயல்வதைக் காட்டிலும் செல்போனில் புகைப்படமாகவும், காணொளியாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் உடனுக்குடன் அனுப்புவதிலே ஆர்வம் காட்டுவது வருத்தமளிக்கும் செயலாக இருக்கிறது.

ஓடும் ரயிலின் முன் தண்டவாளத்தின் அருகே நின்று செல்ஃபி எடுப்பது, பாலத்தின் விளிம்பில் நின்று செல்ஃபி எடுப்பது, மலை உச்சியில் நின்று பள்ளத்தாக்கை நோக்கி செல்ஃபி எடுப்பது என்று விதவிதமான ஆபத்துகளில் சிக்கிப் பலரும் தங்கள் உயிரை இழக்கிறார்கள். செல்போனின் சீரழிவுகளில் செல்ஃபி மோகமும் ஒன்று. இதுபோன்ற துயரச் செய்திகளுக்குப் பிறகாவது விழிப்போடு இருத்தல் வேண்டும். பெற்றோர்களும் இதுகுறித்து தங்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு செல்போனின் செயல்களைக் குறைத்துக்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்குதல் வேண்டும்.

- சு.தட்சிணாமூர்த்தி, பி.என்.புதூர்.

 

சொந்த ஊருக்கும் மதிப்பளியுங்கள்

திருவாரூரைக் கல்வி மையமாக உருவாக்குவதற்கு முன்னதாக, திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு திருவாரூர் மாவட்டத்தை உருவாக்கி, அதன் பின்னர் மருத்துவக் கல்லூரி, மத்தியப் பல்கலைக்கழகம், இவற்றோடு புதிய பேருந்து நிலையத்துக்கும் அடிக்கல் நாட்டி, அதற்கான பணியும்  முடிவடைந்த நிலையில் இருக்கிறது. இந்த ஆட்சியில் பேருந்து நிலையம் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்படாமல் உள்ளது. திருவாரூரில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருக்கும் புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக அரசு திறக்க வேண்டும். இதிலும் மெத்தனம் கூடாது.

- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.

 

தொழிலாளர்களின் உந்துசக்தி

அலோக் ராயின் (உலகத் தொழிலாளர்களால் ஒன்றுபடவே முடியாதா?) கட்டுரை, தொழிலாளர்கள் குறித்து எடுத்துவைக்கும் வாதங்கள் நம் நாட்டுக்குச் சற்றும் பொருந்தாத வகையில் உள்ளன. இடதுசாரி தொழிற்சங்கங்கள், அவை முன்வைத்த கோட்பாடுகள்தான் இந்தியாவில் தொழிலாளர்களை வழிநடத்திக்கொண்டிருக்கின்றன. கட்டுரையாளர் கூறும் ஊதியம் மற்றும் இன்ன பிற சலுகைகள் முதலாளிகளின் 'மார்க்சிய நோக்கிலான' தொழிலாளர் நல நடவடிக்கைகள்தான் என்பது முற்றிலும் உண்மைக்கும், நடைமுறைக்கும் மாறானதாகவே கருதவேண்டி உள்ளது.

நம் நாடு மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளிலும் தொழிலாளர்கள் தங்களது போராட்டங்களினால்தான் ஊதிய உயர்வு மற்றும் உரிமைகளைப் பெற்றுள்ளனர் என்பதே வரலாறு. அமைப்புரீதியாகத் திரட்டப்படாதவர்களையும் இடதுசாரித் தொழிற்சங்கங்கள் தங்களது போராட்டங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தி வந்துள்ளன.

- ஜா.அனந்த பத்மநாபன், திருச்சி.

 

தகுதியைத் தராத கல்வி

கோவாவில் அக்கவுண்டண்ட் பணியிடங்களுக்கான அரசுத் தேர்வில் போட்டியிட்ட 8,000 பட்டதாரிகளும் தோல்வியடைந்திருக்கிறார்கள். மாநிலக் கல்வி ஒழுங்குமுறை குறித்த விமர்சனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.  கல்வி நிறுவனங்கள் கல்வியை வியாபாரமாகப் பார்ப்பதும், பொதுமக்கள் கல்வியை முதலீடாகப் பார்ப்பதும் ஒரு மோசமான சூழலுக்குக் கல்வித் துறையை இட்டுச்சென்றுகொண்டிருக்கிறது.

- பன்னீர் செல்வம் பாலு, பெங்களூரு.

ippadikku 2jpg100 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x