Published : 07 Aug 2018 02:01 PM
Last Updated : 07 Aug 2018 02:01 PM

இப்படிக்கு இவர்கள்: எழுத்தாளர்களுடைய நூலை வாசிப்பதுதான் நாம் அவர்களுக்குச் செய்யும் கைம்மாறு!

சமூகத்தின் வலிகளைத் தன் வலிமையான எழுத்துகளால் நகல் எடுக்கும் எழுத்தாளர்களுக்கு அவர்களின் படைப்பை வாசிப்பதைத் தவிர வேறு என்ன கைம்மாறு செய்துவிட முடியும் என்று கேட்கத் தோன்றியது  ‘தனிமைத் தீவு’ கட்டுரை வாசித்தபோது.   இதைப் படிக்கும்போது எழுத்து வன்மை மிக்க பெரும் எழுத்தாளரை இந்தச் சமூகம் ஏன் கொண்டாடாமல் விட்டது என்ற கேள்விகள் எழுகின்றன. ‘கடலுக்கு அப்பால்’ இரண்டாம் உலகப் போரின் நெருக்கடியின் பின்னணியில் மலர்ந்த காதலைப் பேசும் நாவல். தமிழில் இரண்டே இரண்டு அழுத்தமான நாவல்களை எழுதிய ப.சிங்காரத்தின் எழுத்துகள் தனித்தன்மை வாய்ந்தன.

தன்னையோ தன் எழுத்துகளையோ முன்னிறுத்திக்கொள்ளாத ஒரு கலைஞனை கலை ஞாயிறு பகுதியில் சி.மோகன் கண்டு எழுதியது சாலப் பொருத்தம். தமிழ் மண்ணுக்கு அப்பால் தமிழர்கள் படக்கூடிய பாடுகளைச் சொல்லும் படைப்புகள் தமிழில் குறைவுதான். இந்தோனேஷியா, மலேசியா, பர்மா, இலங்கை, கனடா போன்ற பரந்த வெளிகளில் தமிழர்களின் வாழ்வை அவர்கள் அங்கு படும்பாடுகளை ப.சிங்காரத்தின் அடியொற்றிச் சொல்லிவிட முடியும். வெளிநாடு என்றாலேயே பாலும் தேனும் பெருகியோடும் சொர்க்கபுரி என்கிற பொதுப்புத்தியை சிங்காரத்தின் எழுத்துகள் புரட்டிப்போடுகின்றன.

செட்டிநாட்டில் பிறந்து குடும்பத் தொழில் காரணமாக மலேசியாவுக்கும் ரங்கூனுக்கும் கடைகளில் வேலை செய்யச் செல்கிறவர்களின் பதிவுகள் தமிழ் நாவல்களில் இன்னும் அழுத்தமாகப் பதிவாகவில்லை. ப.சிங்காரம் அவ்வகையில் புலம்பெயர்ந்தோர் வலிகளைக் கண்ணியமாகச் சொன்ன உன்னதமான படைப்பாளி. கடலுக்கு அப்பால் நாவலையும் புயலிலே ஒரு தோணி நாவலையும் இனவரைவியல் நாவல்கள் என்றுகூடச் சொல்லலாம்.  எழுத்தாளர்களை அவர்கள் வாழும்போதே நாம் ஏன் கொண்டாட மறுக்கிறோம்? என்கிற வலி சுமந்த கேள்வியும் நமக்குள் எழுகிறது.

- சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி.

 

சின்ன ஊர்களிலும் புத்தகக் காட்சி!

ஆகஸ்ட் - 2 அன்று வெளியான ஈரோடு புத்தகத் திருவிழா குறித்த செய்தி தரும் நம்பிக்கை மிகப் பெரியது. விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்தில், விரல்நுனியில் கைபேசி வழியே உலகத் தொடர்பு என ஓடும் வேகத்தில் புத்தகத்துடனான உறவினை மனிதன் துண்டித்துக்கொண்டானே என்ற வேதனைகளுக்கு மருந்திடும் அரும்பணியே புத்தகத் திருவிழாக்கள்.

சென்னை புத்தகத் திருவிழாவுக்கு இணையாக இன்றைக்கு தமிழகத்தின் பெரு நகரங்களில் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுவது நம் நம்பிக்கையை இன்னும் கூட்டுகிறது. எத்தனை விஞ்ஞானம் வளர்ந்தாலும், எவ்வளவு வசதிகள் பெருகினாலும், வாசிப்பு திறந்து வைக்கும் வண்ண வாழ்க்கைக்கு வேறு எதுவும் ஈடாகாது.

நெல்லை மாவட்டத்தின் தென்காசிக்கு அருகில் உள்ள  சுரண்டையில், பொதுநல மன்றம் என்னும் அமைப்பின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்ட புத்தகத் திருவிழா கடந்த ஆண்டின் வெற்றிவிழா. எதிர்வரும் அக்டோபர் மாதம் இரண்டாவது புத்தகத் திருவிழாவுக்குத் தயாராகிறது சுரண்டை. இந்த முயற்சிகள் அங்கீகரிக்கப்பட வேண்டியதோடு, ஆதரவளிக்கப்படவும் வேண்டும்.

புத்தகத் திருவிழாக்களைக் காணத் தயாராகும் சின்னச் சின்ன ஊர்களுக்கு சுரண்டை முன்னுதாரணம். வாசிப்பை நேசிப்போம்.. வாசிப்பைப்  பரவலாக்குவோம்!

- வளவன்.வ,சி, சென்னை.

ennajpg100 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x