Published : 06 Apr 2018 08:53 AM
Last Updated : 06 Apr 2018 08:53 AM

இப்படிக்கு இவர்கள்: ஆற்றங்கரைகளைப் பாதுகாப்போம்!

ஆற்றங்கரைகளைப் பாதுகாப்போம்!

ப்ரல் 4 அன்று வெளியான ‘ஆற்றங்கரைகள்: புதிய குடிநீர் ஆதாரங்கள்!’ கட்டுரை படித்தேன். ஆற்றங்கரைகள், அதனை ஒட்டியுள்ள நிலங்களைப் பயன்படுத்தி, நமக்கான தண்ணீர் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள முடியும் என்ற தகவல் அருமை. ஆற்றின் ஊடே வரும் வளைவுக்கு முன் எதிர் திசையில் இருக்கும் கிணறுகள், ஆறோடு இணையும் சிறு ஓடைகளின் எதிர்ப் பகுதிகள் அருகே இருக்கும் கிணறுகள், இதனை ஒட்டிய கரைகளுக்கு அப்பால் சுனைகள் வற்றாமலிருந்த காலம் உண்டு. இத்தகைய பகுதிகளில் உள்ள கிணற்றுத் தண்ணீர் சுவையாக இருக்கும். “எங்க கிணத்துத் தண்ணீ தேங்காத் தண்ணீயாட்டம் இருக்கும்” என்று கிணற்று உரிமையாளர்கள் பெருமை பேசியதை காயல்குடி ஆற்றுப்பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருக்கிறேன்.

அந்தப் பகுதியில் மணலைச் சுரண்டி எடுத்த பின்னரும் அந்தக் கிணறுகளில் ஓராண்டு முழுவதும் தண்ணீர் இருந்தது; தற்போது ஆறு மாதம் இருப்பதே அதிகம். வன்னியம்பட்டிக்கு மேற்கே இருந்த கங்கா குளம் கண்மாய் உபரி நீர்த் திறப்பணை அருகே இருந்த சுனைதான் அப்பகுதியில் பஞ்சாலைக்கு செல்வோர், வருவோர் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் தண்ணீர் தந்தது. அந்தச் சுனையும் இப்போது வற்றிவிட்டது.

இத்தகைய நிலை இனிவரும் காலங்களில் ஏற்படா வண்ணம் மணலையும், அதன் கரைகளையும் காக்க வேண்டும். விவசாயிகள் தண்ணீர் தேவையை உணர்ந்து தண்ணீர் சேமிப்பு குறித்துப் பேசுவதும், அதற்கான இடங்களைக் கண்டுபிடித்து அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதும் அவசியம். மணல் திருட்டைத் தடுப்பது நம் அனைவருக்குமான பணி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய காலம் இது!

- க. துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.

தந்தைப் பாசத்துக்கு உதாரணம்!

ப்ரல் 5 அன்று ‘உலக மசாலா’ பகுதியில் வெளியான ‘குழந்தையைத் தேடிய ஒரு தந்தையின் போராட்டம்’ செய்தி நெகிழவைத்தது. சீனாவின் செங்டு நகரில் 24 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது மகளைத் தேடிவந்த டாக்சி ஓட்டுநர் வாங் மிங், தனது விடாமுயற்சியின் மூலம் கண்டடைந்திருப்பது அற்புதமான செய்தி. இதற்காக 17 ஆயிரம் பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். காவல்துறையினர் மூலம் வளர்ந்த தன் பெண், எப்படி இருப்பாள் என்பதை ஓவியமாக்கி படம் பகிரப்பட்டுள்ளது. அவரது கடும் முயற்சிகளுக்குப் பலன் கிடைத்திருக்கிறது. விதி வலிது என்றாலும் முயற்சிசெய்தால் அதை வெல்லலாம் என்பதை இந்தச் செய்தி உணர்த்துகிறது.

- ஜீவன். பி.கே., கும்பகோணம்.

மாணவர்களின் நிலை

பா

.செயப்பிரகாசம் எழுதிய ‘குழந்தைகள் பெண்கள் தேர்வுகள்’ கட்டுரை வாசித்தேன். இப்போது நமது குழந்தைகள் ஒன்பதாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தாலே பள்ளியிலும், பெற்றோர்களும் மதிப்பெண் என்ற ஆயுதத்தைக் காட்டி விளையாடக்கூட விடாமல் தடுத்துவிடுகின்றனர். மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை என்றும் போட்டி நிறைந்த சூழலில் நம் குழந்தைகள் ஜெயிக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு பெற்றோரும் தாங்களாகவே போட்டிகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். இதற்கு நமது கல்விமுறை முக்கியக் காரணமாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. மதிப்பெண் மட்டுமே பார்க்கப்படுவதால் பல குழந்தைகள் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்த இயலாமல் போய்விடுகிறது.

- யசோதா பழனிச்சாமி, ஈரோடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x